தமிழக இளையோரது ஜல்லிக்கட்டு போராட்டங்கள்


இன்றைய நவீன உலகம் அதி வேகமாகச் சுழன்று கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் நமது வாழ்க்கை முறை மாறிக் கொண்டே வருகின்றது. புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் நமது அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாத அளவிற்கு வந்து சேர்கின்றன. இந்த அதி வேகச் சுழற்சியில் நாம் நமது பாரம்பரிய வாழ்க்கை முறைகளிலிருந்து நம்மை அறியாமலேயே விலகிச் சென்று கொண்டிருக்கின்றோம்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் மனித வாழ்வில் ஒன்றும் புதியவை அல்ல தான். ஆண்டாண்டு காலமாகத் தலைமுறை தலைமுறையாக நமது வாழ்க்கை முறைகள் மாற்றம் கண்டே வந்திருக்கின்றன.

ஆனால், முன்பு நமது வாழ்க்கை முறைகள் மெது மெதுவாகவே மாற்றம் கண்டன. படிப்படியாக மெல்ல மெல்ல நன்மை தீமைகளை ஆராய்ந்து தான் சார்ந்த சமூகப் புவியியல் தேவைகளுக்கும், காலநிலை மாற்றங்களுக்கும் இடம் கொடுத்து புதிய மாற்றங்களை மனித சமூகங்கள் உள்வாங்கிக் கிரகித்துத் தன்னைத் தானே மாற்றி வந்தன. ஆனால் கடந்த சில பத்தாண்டுகளாக மேலை நாடுகளின் வழிகாட்டலோடு, பன்னாட்டு நிறுவனங்களால் திட்டமிடப்பட்டு உலக மக்களின் வாழ்வு செயற்கையாக கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம்  இந்த மேலை நாடுகள் வியாபாரம் செய்ய வசதியாக புதிய புதிய சந்தைகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருகின்றன.

இதற்காகவே ஜி-8 எனப்படும் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், பிரான்சு, ஐரோப்பிய யூனியன் நாடுகள் வளரும் பிற உலக நாடுகளைத் தம் வளர்ச்சிக்காக அரசியல் சமூகப் பொருளாதார ரீதியில் கட்டுப்படுத்தி வருகின்றன. WTO மூலமாக மேலை நாடுகளால் உருவாக்கப்பட்ட GATT ஒப்பந்தங்கள் மூலமாக பணக்கார நாடுகள் ஏழை நாடுகளை சுரண்ட வருகின்றன.

வளரும் நாடுகளில் மக்களுக்காக உருவாக்கப்பட்ட பொது நிறுவனங்களையும், உள்கட்டமைப்புக்களையும், பொது நலத் திட்டங்களையும் அந்த நாடுகளின் அரசாங்கத்திடமிருந்து பிடுங்கி தனியார் நிறுவனங்களிடமும் (MNC's), தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமும் (NGO's) கொடுத்து வருகின்றனர். இந்த நாடுகளில் வாழ்கின்ற மக்கள் நலன்களைக் காக்கக் கூடிய அதிகாரங்களை அந்த நாட்டின் அரசாங்கங்களிடமிருந்து பறித்து விட்டு, வெறுமனே இந்தப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வசதியாக ஏற்படுத்தப்பட்டு வருகின்ற உலகச் சந்தையைப் பத்திரமாகக் கவனித்துக் கொள்ளும் பணியையே இந்த அரசாங்கங்களுக்குக் கொடுக்கும் புவியியல் தந்திரோபயம் என மோகன் தத்தா கூறுகின்றார்.

மேலை நாடுகளின் இந்தப் பொருளாதாரப் படையெடுப்பின் ஒரு பகுதியாகவே பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இந்தியா போன்ற நாடுகளுக்குள் நுழைந்தன. இவர்களின் வேலைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தக்கவாறு அத்தனை வேலைகளிலும் ஈடுபடுவார்கள். அதாவது முதலில் தொண்டு செய்வதைப் போல வந்து, உள்நாட்டுச் சட்ட திட்டங்களையும், உள்நாட்டு அரசியல் அதிகாரங்களையும் தமக்கு ஏற்றார் போல மாற்றிக் கொண்டு ஒரு நீண்ட கால வேலைத் திட்டத்தைத் தொடங்குவார்கள்.

அதன் படி, பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தடையின்றித் தொழில் செய்ய வசதியாக ஒரு சந்தையை உருவாக்குவார்கள். அந்த நிறுவனங்களுக்குத் தடையாக ஏதுமிருந்தால், அவற்றை உள்நாட்டுச் சட்ட திட்டங்களையும், உள்நாட்டு அரசியல் அதிகாரங்களையும் கொண்டே தகர்த்தெறிவார்கள். ஒத்தக் கருத்துடைய உள்நாட்டுப் பங்காளிகளையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். அதன் மூலம் தங்கு தடையற்ற வர்த்தக சந்தையை உருவாக்குவார்கள்.

இந்த மேலை நாடுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் தமது தடையற்ற வரத்தக சந்தையை பாதுகாப்பதற்காக அந்தந்த நாட்டின் தேசிய அரசாங்கங்களைக் கொண்டு போலீஸ், ராணுவம் உட்பட அனைத்தையும் பலப்படுத்துவார்கள். அத்தகைய தடையற்ற சந்தையை எதிர்ப்போரை அந்தந்த நாட்டின் போலீஸ், ராணுவம் கொண்டே ஒடுக்குவார்கள் என ஹென்றி 'கிரோகஸ் கூறுகின்றார். 

அத்தகைய ஒரு நடவடிக்கையாகத் தான் இந்தியாவின் விலங்குகள் சார்ந்த சந்தையை தம் வசதிக்கேற்ப மாற்றுவதற்கு தடையாக இருக்கின்ற உள்நாட்டு கால்நடைகளையும், நாய் உட்பட பல்வேறு விலங்கினங்களையும், பயிரிட பயன்படும் விதைகளையும், பல்வேறு உள்நாட்டு பாரம்பரிய தொழில்நுட்பங்களையும் அழிப்பதும், அந்த இடத்தில் காப்புரிமை செய்யப்பட்ட தமது கால்நடைகளையும், விலங்குகளையும், விதைகளையும், தொழில்நுட்பங்களையும் விற்று லாபம் சம்பாதிப்பதே பன்னாட்டு நிறுவனங்களின் குறிக்கோளாக இருக்கின்றது. 

உலகிலேயே அதிகளவு கால் நடைகளைக் கொண்டிருக்கும் நாடான இந்தியாவில் மட்டும், உலகின் பாதிக்கும் மேற்பட்ட எருமை மாடுகளும், கால் வாசி பசு மாடுகளும் இருக்கின்றன. இவற்றை நிர்மூலமாக்குவதன் மூலம் உலகில் அதிகம் பால் உற்பத்தி செய்யும், மாட்டிறைச்சி, தோல், எலும்புகள் ஏற்றுமதி செய்யும் இந்திய சந்தையை கபளீகரம் செய்து கொள்ளை லாபமீட்ட எத்தனிக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.

உலகமயமாதல், புதிய தாராள பொருளாதாரம், தடையற்ற வர்த்தகம் என்ற சித்தாந்தங்கள் எல்லாம் சாதாரண மக்களின் கைகளிலில் அதாவது 85 % இந்தியர்களின் கைகளில் இருக்கின்ற கால்நடை செல்வத்தை கொள்ளையடிக்கும் திட்டம் இல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும் சொல்லுங்கள்.

அதில் ஒரு சிறுதுளி தான் அமெரிக்க சார்புடைய PeTA போன்ற விலங்குகள் நலன் சார்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நாட்டு மாடுகள் சார்ந்த விளையாட்டுக்களை ஒழித்து விட மிகத் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதன் பின்னணியில், பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க ஏதுவாக புதிய சந்தையை தயார்படுத்தும் திட்டமே ஒளிந்திருக்கின்றது.

*

கடந்த 8-ம் தேதி சென்னை மெரினாவில் நடைபெற்ற இளைஞர் பேரணி தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முதல் வித்து. சில நூறு மாணவர்களே பங்கேற்றிருந்த இப் பேரணியில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர்களும், இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர். 

அலங்காநல்லூரில் ஊர் பொது மக்களும், மாணவர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடத் தொடங்கினர். இப் போராட்டத்தை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கலைத்தனர்.

ஜனவரி மாதம் 17-ந் தேதி காலை 8 மணியளவில் வெறும் 100 மாணவர்கள் ஒன்று கூடி  ஒன்று கூடி சென்னை மெரினாவில் போராடத் தொடங்கினார்கள். இந்த மாணவர்கள், மற்றும் இளைஞர்கள் எல்லோரும் சமூக ஊடகங்கள் மூலமாக விடப் பட்ட கோரிக்கையை அடுத்தே சென்னை மெரினா கடற்கரையில் ஒன்று திரண்டனர். அதற்கு அப்புறம், பெண்கள், குழந்தைகள், பெரியோர், முதியோர் என சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா நோக்கி லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். இதனைதமிழ்நாடு முழுவதுமே, ஆயிரக் கணக்கான மக்கள், எந்தவொரு அரசியல் சார்பும் இல்லாமல் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டி போராடினர். சென்னை மாநகரத்தின் மெரினா கடற்கரையில் திரண்டு போராடினர். ஆனால், உண்மையைச் சொல்லப் போனால், மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம், கோயம்புத்தூர் என பல ஊர்களிலும் போராட்டங்கள் நடந்தன.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் தாமாகவே முன் வந்து போராட்டங்களில் கலந்து கொண்டோருக்கு நீர் வழங்கினர், சாப்பாடு தந்தனர், கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தினர், குப்பைகளை அகற்றினர். இந்த போராட்டத்தில் பொது மக்களுக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர். போராட்டங்களில் இரவு பகல் பாராமல், பங்கேற்றனர், தொண்டூழியம் செய்தனர்.

போராட்டங்களின் ஓரங்கமாக தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக சிலம்பாட்டம், தெரு நாடகம், ஆடல்கள், பாடல்கள் என பல நிகழ்ச்சிகளையும் நடத்தினர். அது மட்டுமின்றி ஜல்லிக்கட்டு குறித்த விழிப்புணர்வு பரப்புரையையும், ஜல்லிக்கட்டு தமிழர் வரலாற்றில் தோன்றிய விதம், வளர்ந்த விதம், சிந்து சமவெளி தொட்டு சங்ககாலம் முதல் இன்று வரை தடையின்றி நடைபெற்று வருவது பற்றியும் பலர் பேசினர். ஜல்லிக்கட்டு சார்ந்த கிராம பொருளாதாரம் மற்றும் சுற்றாடல் பயன்களைப் பற்றியும் விவரித்தனர். அது மட்டுமின்றி பன்னாட்டு நிறுவனங்கள் எவ்வாறு தெற்காசியாவின் நாட்டு மாட்டு இனங்களை அழித்துவிட்டு அதற்கு பதிலாக வெளிநாட்டுப் பசுக்களை பரப்பும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன எனவும், அதற்கு நம் நாட்டு மத்திய மாநில அரசுகள், தன்னார்வ அமைப்புகள், பன்னாட்டு அமைப்புகள் துணை போவதைப் பற்றியும் பேசினர். ஜல்லிக்கட்டு பற்றி ஒன்றுமே அறிந்திராத இன்றைய தலைமுறையினருக்கு அது புதிதாகவும், பாடமாகவும் இருந்தது எனலாம்.

நாள் ஒரு மேனியும் பொழுது ஒரு வண்ணமுமாக சென்னையில் குவியத் தொடங்கிய மக்களின் தொகை பல லட்சங்களைத் தொடத் தொடங்கியது. ஏற்கனவே கடந்த ஜனவரி 14, 15, 16 தேதிகள் பொங்கல் திருவிழா விடுமுறை என்பதாலும், அத்தோடு ஜனவரி 17-ம் தேதியை எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்தநாள் என்பதால் விடுமுறையாக அறிவித்திருந்ததாலும், பலரும் தங்கு தடையின்றி சென்னை மெரினா கடற்கரையில் குவியத் தொடங்கினர். அத்தோடு போராட்டம் வலுவடைந்ததால் சென்னையைச் சேர்ந்த 30-க்கும் அதிகமான கல்லூரிகள் விடுமுறை அறிவித்தன. அதனைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளும் விடுமுறை அறிவித்தன. பல இளைஞர்கள் அலுவலகங்களுக்கு வராமல் போனதால் பல ஐடி நிறுவனங்களும், வேறு பல தனியார் நிறுவனங்களும் விடுமுறை அறிவித்தன.

போராட்டங்களில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் பல்வேறு சிறு சிறு குழுக்களாக வகுத்துக் கொண்டு போராட்டங்களை கட்டுக் கோப்பில் வைத்திருந்தனர். அதே சமயம் இப் போராட்டக் களத்திற்குள் இணைய நினைத்த அரசியல் கட்சிகளையும், சினிமா நட்சத்திரங்களையும் ஒதுங்கி இருக்குமாறு கேட்டுக் கொண்டனர். பல்வேறு அரசியல் கட்சிகள் தமது ஆதரவை நல்கின. ப் போன்றே திருச்சி, கோவை, மதுரை, சேலம், புதுவை போன்ற நகரங்களிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன.

ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம் என மாணவர்கள் குறிப்பாக ஜல்லிக்கட்டோடு நேரடியாகத் தொடர்பில்லாத நகரப் புற இளைஞர்கள் கூட களத்தில் இறங்கியதால் மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்க ஆரம்பித்தது.

*

தமிழ்நாட்டில் ஒவ்வொரு பொங்கல் திருவிழாவின் போது விளையாடி வருகின்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்று ஜல்லிக்கட்டு. இவ் விளையாட்டுகளில் காளைகளைத் தமிழர்கள் கொடுமை செய்வதாகக் கூறி இவ் விளையாட்டை தடை செய்ய வேண்டி PeTA மற்றும் அதன் உள்ளூர் பங்காளிகளான  AWBI, போன்ற விலங்குகள் நல அமைப்புகளும், மேனகா காந்தி போன்ற தீவிர விலங்குகள் நல ஆர்வலர் என்ற போர்வையில் இயங்கி வருகின்ற வலதுசாரி அரசியல்வாதி உட்பட பலரும் சேர்ந்து கொண்டு, கடந்த 2006 முதல் பல்வேறு வழக்குகளைப் போட்டு கடும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், ஒவ்வொரு முறையும் தமிழக அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு ஜல்லிக்கட்டை நடத்தி வந்தது. அதனால் தான் கடந்த 2009-யில் "தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்ட"த்தையும் கொண்டு வந்தது.

கடந்த 2011-ல் ஆண்டு பீட்டா சார்பாக பாஜக எம்.பி ஹேமா மாலினி விடுத்த கோரிக்கையை அடுத்து, அன்றைய காங்கிரஸ் மத்திய அரசில் வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த தமிழின விரோத ஜெய்ராம் ரமேஷ் மேலும் ஓர் அறிவிக்கை பிறப்பித்தார். காட்சி விலங்குகள் தடைப் பட்டியலில் "காளை"யை புதிதாகச் சேர்த்து, விலங்குகள் வதை சட்டம் (PCA) பிரிவு 22 ன் கீழ் ஆணையும் இட்டார். அந்த பட்டியலில் உள்ள மற்ற விலங்குகள் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, குரங்கு. இந்த பட்டியலில் வேண்டுமென்றே காளையும் இணைக்கப்பட்டது.

இந்த அறிவிக்கை வைத்துக் கொண்டு, AWBI அமைப்பின் ராதா ராஜன், PETA அமைப்பும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டனர். அவ் வழக்கில் CUPA, FIAPO, மற்றும் மேனகா காந்தியின் PFA ஆகிய அமைப்புகளும் நீதிமன்றம் சென்றன.

இதன் விளைவாக, 2014-ல் ஜல்லிக்கட்டை நிரந்தரரமாக தடை  செய்தது உச்சநீதிமன்றம். அதன் பின் மீண்டும் ஆட்சிக்கு வந்த பாஜக இதுவரை ஜல்லிக்கட்டை நடத்தவிடாமல் பார்த்துக் கொண்டது.

*

இந்தியக் கண்டம் முழுவதும் வாழ்ந்த ஆதி தமிழர்கள் காளைகளை பேணிப் பாதுகாத்து வந்திருக்கின்றனர். ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன் சிந்துசமவெளி திராவிட பண்பாட்டு வாழ்விடங்களில் ஜல்லிக்கட்டு என்றழைக்கப்படும் ஏறுதழுவல், மஞ்சுவிரட்டு விளையாடி இருக்கின்றனர்.

இதனை சங்க இலக்கியங்கள் ஏறு தழுவல் என பாடுகின்றன. கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை என பரவலான இலக்கிய படைப்புகளில் ஏறு தழுவுதலை பற்றிய செய்திகள் உள்ளன.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பக்கத்தில் கரிக்கையூர் மலைக்குகைகளில் கண்டறியப்பட்ட மிகப் பழமையான குகை ஓவியங்களில் ஜல்லிக்கட்டு வரையப்பட்டுள்ளது. அதே போல மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உள்பட தமிழகம் எங்கும் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான 15 மலைக்குகை ஓவியங்களில்  ஜல்லிக்கட்டுக்கான சான்றுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர் காந்திராஜன் கண்டறிந்துள்ளதை அவருடைய "ஜல்லிக்கட்டு, ஏறுதழுவல்: தொன்மம், பண்பாடு, அரசியல்" என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1920-களில் ஹரப்பா பகுதியில் நடத்தப்பட்டு ஆய்வில் காளை உருவங்கள் கொண்ட எண்ணற்ற திராவிட பண்பாட்டுச் சின்னங்கள் கிடைத்தன. சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் சித்தரிக்கப்பட்டுள்ளது. மிகப் பழங்காலம் தொட்டே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

ஆனால் சிந்து சமவெளியில் நிறைய காளை உருவங்கள் இருக்கின்றனவே தவிர ஆரியர் போற்றும் அஸ்வம் எனப்படும் குதிரைகள் பற்றி ஒரு குறிப்பும் இல்லை. ஆரியர்களின் ரிக் வேதத்தில் குதிரைகள் மட்டுமே நூற்றுக்கணக்கில் இடம்பெற்றுள்ளன. 

இதனால் கடுப்படைந்த இந்து தேசியவாதிகள் சிந்து சமெவளியில் கிடைத்த சின்னங்களில் ஒன்றில் காணப்பட்ட காளையின் உருவத்தை உருமாற்றிக் கடந்த 2000-யில் ராஜாராம், நட்வார் ஜா என்ற போலி ஆய்வாளர்கள் துணையோடு காளையை குதிரையாக காட்டி, சிந்துசமவெளி ஓர் ஆரிய நாகரிகம் என நிறுவ முயன்றார். ஆனால், அவருடைய திருட்டுத் தனத்தை கண்டறிந்து தோலுரித்துக் காட்டினர் ஸ்தீவ் பார்மர், மிக்கேல் விட்சல் என்ற மேனாட்டு அறிஞர்கள். அதுமட்டுமில்லை சிந்துசமவெளியில் கிடைத்த காளை மாட்டு உருவச் சின்னங்கள் நம் தமிழகத்தில் காங்கேயம் பகுதியில் காணப்படும் காளைகளை ஒத்திருப்பதைப் பலரும் கண்டு அதிசயித்திருக்கின்றனர். அத்தகைய பெருமை வாய்ந்த சிந்துசமவெளி நாகரிகம் குறிப்பாக தமிழருடையது என ஆணித் தரமாக சொல்லியதே இந்தக் காளைகள் தான்.   

*

ஏன் ஜல்லிக்கட்டுக்கு எதிராக இந்துத்வா கொள்கையை பின்பற்றுவோர் மிக வன்மத்தோடு செயல்படுகின்றனர் என்ற கேள்வி எழலாம்? மேனகா காந்தி, ராதா ராஜன், பூர்வா ஜோஷிபுரா, போன்றோரது கருத்துக்களை மிக ஆழமாக ஆய்ந்தால் அதற்கான விடை தானாகவே கிடைக்கும். 

ராதா ராஜன் என்பவர் தான் இந்திய விலங்குகள் நலவாரியத்தின் தலைவர்களில் ஒருவர். தொடக்கம் முதலே ஜல்லிக்கட்டுக்கு எதிராக மிகத்தீவிரமாக செயல்பட்டு வருகின்றவர். இவரே பல முறை ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி நீதிமன்றம் சென்றவர். இவர் தீவிர இந்துத்வா ஆதரவாளரும் கூட. விஜயவாணி என்கிற இணையதளத்தைத் தொடங்கி தொடர்ந்து தமிழ்விரோதக் கட்டுரைகளை எழுதி வருகிறார். இவர் தி வையர் இணையதளத்தில் எழுதிய கட்டுரையில் ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரியம் இல்லை, சிந்து சமவெளியில் ஜல்லிக்கட்டு சித்தரிக்கவில்லை, சிந்து சமவெளிக்கும் தமிழர்ருக்கும் தொடர்பில்லை என்கிறார், அத்தோடு உலகப் புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் சிந்து சமவெளி சின்னத்தில் இருப்பது ஜல்லிக்கட்டு தான் எனக் கூறுவதைக் கூட இவர் புறந்தள்ளுகின்றார். கடைசியில் அதாவது 1893 முதல் தான் ஜல்லிக்கட்டு விளையாடப்பட்டு வருவதாகவும் பொய்யுரைக்கிறார்.

ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான மற்றொருவர் பூர்வா ஜோஷிபுரா என்ற இந்த பெண்மணி தான் பீட்டா அமைப்பின் இந்திய தலைமை நிர்வாகி ஆவர். அமெரிக்காவில் பிறந்த இவர் இந்தியாவில் பீட்டா அமைப்பை நடத்தி வருகின்றார். வழங்கப்பட்டுள்ளது. முனிஸ்ரீ தருண் சாகர் மகராஜ்ஜி  என்கிற தீவிர இந்துத்வா கொள்கையுடைய ஜைன சாமியார் கடந்த 2014-ல் ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கித் தந்ததற்காக பூர்வா ஜோஷிபுராவுக்கு தருண் கிராந்தி விருதை வழங்கினார். கிரண் பேடி, பாப ராம்தேவ், மோகன் பகவத், கௌதம் அடானி, அனில் அம்பானி போன்றோர் இந்த சாமியாரின் முக்கிய பகதர்கள் ஆவார்கள்.

பீட்டா அமைப்பைப் பற்றி சொல்ல வேண்டுமானால் “விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் (People for the Ethical Treatment of Animals)" என்ற முழுப்பெயரை உடைய இவ் நிறுவனம், 1980 ஆம் ஆண்டு இங்ரிட் நெவ்கிரிக் (Ingrid Newkirk) மற்றும் அலெக்ஸ் பச்சேகோ (Alex Pacheco)  ஆகிய இருவரால் அமெரிக்காவில் தொடக்கப்பட்டது. இந்த பீட்டா அமைப்பு உலகம் முழுவதும் விலங்குகள் நலனுக்காக போராடுவதாக சொல்லி பெரும் பிரபலங்கள் முதல் சாதாரண மக்களிடம் வரை பணத்தைக் கறந்து கொண்டு கொள்ளை லாபம் அடைந்து வருவது தனிக் கதை.

ஜல்லிக்கட்டு தடைக்கு முனைப்புக் காட்டிய மற்றுமொரு அமைப்பு PFA (Peoples For Animal). போராட்டங்களில் ஈடுபட்டவர்களோ, ஊடகங்களோ இவ் அமைப்பு பற்றி வாய் திறக்கவேயில்லை. இந்த அமைப்பை நடத்தி வருபவர் பெண்கள், குழந்தைகள் நல மத்திய அமைச்சரும், பாஜக-வின் மூத்த அரசியல்வாதியுமான மேனகா காந்தி ஆவார். மேனகா காந்தி ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாச்சார இறக்குமதி, அதற்கு பாஜக எப்போதுமே எதிராக செயல்படும் என பரப்புரை செய்து வருகின்றவர்.

வட இந்திய பண்பாடு தான் ஒட்டு மொத்த இந்தியாவின் அடையாளம், மற்ற பண்பாடுகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதுவே இவர்களின் ஆழ்மன உணர்வாக உள்ளது. இதற்காக ஜல்லிக்கட்டு உள்பட பல திராவிட பண்பாட்டு அடையாளங்களை ஒழித்துக் கட்ட பன்னாட்டு அமைப்புகளோடு செயல்பட்டு வருகிறார்கள். ஆக, பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சியைச் சேர்ந்தவர்களுமே ஜல்லிக்கட்டு தடைக்கு  தீவிரமாகவே இருந்துள்ளனர்.

*

ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் இந்தியக் கண்டத்தில் 200-க்கும் அதிகமான நாட்டு மாடு இனங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்று வெறும் 30 இனங்களே இருப்பதாகச் சொல்லுகின்றனர். 

ஒரு காலத்தில் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு அனைத்துச் சமூகங்களாலும் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால், அவை காலப் போக்கில் ஒரு சில ஊர்களில் மட்டும் அதுவும் அந்த ஊர் மக்களின் விடா முயற்சியால் இன்று நடத்தப்பட்டு வருகின்றன. இன்று சித்தூர் முதல் குமரி வரை ஜல்லிக்கட்டு நடக்கின்ற ஊர்களில் மட்டுந்தான் நாட்டு மாடு இனங்கள் ஓரளவுக்குப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இன்று தமிழகத்தில் காங்கேயம், புளிக்குளம், மலை மாடு, உம்பளச்சேரி, பருகூர் என ஆறே ஆறு நாட்டு மாடு ரகங்களே இருக்கின்றன எனவும், ஆலம்பாடி உள்பட நூற்றுக்கணக்கான ரகங்கள் அழிஞ்சே போய்விட்டதாக எழுதுகின்றார் ஜல்லிக்கட்டு ஆர்வலர் ஹிமாகிரண் அனுகூலா.

ரேக்ளா, ஜல்லிக்கட்டு, கம்பாளா என மாடுகள் சார்ந்த விளையாட்டுகள் தடையால் அதில் பயன்பட்டு வந்த லட்சகணக்கான மாடுகள் அடிமாட்டுக்கு விற்கப்பட்டு வருகின்றன. ஏழை விவசாயிகளிடம் குறைந்த காசுக்கு தரகர்களால் இவை வாங்கப்பட்டு, மாட்டுக் கறி இறைச்சியாக வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இந்த ஏற்றுமதி தொழில் ஈடுபட்டு வருபவர்களே மத்திய அரசியல் கட்சிக்காரர்களே என்பது தனிக்கதை.

*

ஆனால், ஜல்லிக்கட்டு போட்டிகளின் சில சந்தர்ப்பங்களில் மிளகாய் தூள் தூவுவது, சாராயம் பருக்குவது, போன்றவைகள் இடம்பெறவே இல்லையென சொல்லிவிட முடியாது.

அதே போல ஒழுங்கமைக்கப்பட்ட விதிகளுக்கு உள்பட்டு வீரர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பாதுகாப்பான சூழலில் ஜல்லிக்கட்டு பெரும்பாலான சமயங்களில் நடைப்பெற்றதில்லை என்கிற குற்றச்சாட்டை நம்மால் முழுமையாக புறந்தள்ளிவிட இயலாது. காளைகளை அடக்க முயன்று பலர் இறந்திருக்கின்றனர். வேடிக்கைப் பார்க்க போன பலர் காயமடைந்தும் உள்ளனர் என்பதும் உண்மை தான்.

கடந்த 2009-2014 ஆகிய ஆண்டுகளில் நடைப்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் தான் ஒழுங்கமைப்பட்டு நேர்த்தியாக விதிகளுக்கு உள்பட்டு அரசின் மேலபார்வையில் நடத்தப்பட்டன. அதிலும் கூட சில ஊர்களில் சிலரது விதிமீறல்கள் தான், ஜல்லிக்கட்டை தடை செய்ய துடித்த விலங்குகள் நல அமைப்பினருக்கு வாய்ப்பாக அமைந்தது என்பதை நாம் புரிந்து கொண்டால் மட்டுமே எதிர்காலத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை எவ்வித சிக்கலில்லாமல் நடத்த முடியும்.

*

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் ஸ்பெயின் முழுவதிலும் எருதுச் சண்டைக்கு தடை கொண்டு வர விலங்குகள் நல அமைப்புக்கள் போராட்டத்தில் குதித்தன. ஒரு கட்டத்தில் ஸ்பெயின் உச்சநீதி மன்றத்திற்கு வழக்கு சென்றது.

ஆனால், ஸ்பெயின் உச்சநீதிமன்றமோ எருதுச் சண்டை தடை சட்டவிரோதமானது எனவும். கலை, பண்பாட்டு சார்ந்த விசயங்களை தடுக்கக் கூடாது எனவும், ஜல்லிக்கட்டு அந்நாட்டின் பாரம்பரிய அடையாளம் எனவும் உத்தரவிட்டது. ஸ்பெயின் அரசும் அதை பண்பாட்டு பாரம்பரிய அடையாளம் என அறிவித்து சட்டமியற்றியது.  அப்படிப் பட்ட எருதுச் சண்டைக்கு எதிராக பீட்டா போன்ற அமைப்புகள் மட்டுமில்லை, ஐரோப்பிய யூனியன் கூட கேட்கத் தயங்குமளவிற்கு, ஸ்பானியர்கள் எருதுச் சண்டையை தடை செய்ய முடியாது என தெளிவாகச் சொல்லிவிட்டனர். ஏனெனில் தேசிய அரசாங்கம் ஸ்பானியர்கள் கையிலிருக்கின்றது. அதனால் அவர்களுடைய பண்பாட்டை அவர்களால் பேண முடிகின்றது.

இந்தியாவிலோ தமிழர்கள் சிறுபான்மையினர். ஆனால், ஜல்லிக்கட்டு மட்டுமில்லை நமது மொழியை, நமது பண்பாட்டை, நமது மண்ணை நம்மால் தமிழ்நாட்டளவில் கூட பேண முடியாமல் திணறுகின்றோம் என்பது தான் வருத்தமளிக்கின்றது.

*

ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டக் களத்திலிருந்த இளைஞர்கள் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்திக வருமாறு வேண்டுகோள் விடுத்தனர். போராட்டக் குழுவினர் காட்சி விலங்குகள் தடைப் பட்டியலிலிருக்கும் காளையை நீக்கவும், விலங்குகள் வதை தடைச் சட்டத்தை திருத்தி உடனடி சட்டத் தீர்வை மத்திய அரசு ஏற்படுத்தவும் கோரினர். தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இதனை இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் எடுத்துச் சென்ற போது, தடைப் பட்டியலிலிருக்கும் காளையை நீக்கவோ, உடனடி சட்டம் கொண்டு வரவோ முடியாது என நழுவிக் கொண்டார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், அதில் தலையிட விரும்பவில்லை எனச் சொல்லிவிட்டார்.

இதனால் ஜல்லிக்கட்டு வழக்கில் இடைக்கால தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றத்திடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் இடைக்கால தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

அதையடுத்து மத்திய அரசின் ஆலோசணைப் படியும், பிற வழக்கறிஞர்களின் கலந்தாலோசணைக்குப் பிறகு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டுக்கான புதிய சட்ட வரைவைக் கொண்டு வர முடிவு செய்தார். அதன் படியே போராட்டத்தையடுத்து ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்வது தொடர்பான அவசர சட்டத்தை தமிழக அரசு கடந்த 21-ம் தேதி பிறப்பித்தது. இந்தச் சட்டத்திற்கு மத்திய உள்துறை, சுற்றுச்சூழல்துறை, சட்டத்துறை அனுமதி அளித்தது. பின்னர் ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்த பிறகு, தமிழக கவர்னர் அவசர சட்டத்தை பிறப்பித்தார். ஆனால் போராடிய மாணவர்கள் நிரந்தர சட்டம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

எங்கே இந்த போராட்டங்கள் மிகத் தீவிரமடைந்து ஜல்லிக்கட்டையும் கடந்து மற்ற சமூக பொருளாதார பிரச்சனைகளை நோக்கி நகருமோ என்ற அச்சம் ஏற்பட்டதன் விளைவோ என்னவோ,  ஜனவரி 23-ந் தேதி மாநில அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வரவும், மத்திய அரசும் ஜல்லிக்கட்டுக்கு அது போட்டிருந்த முட்டுக்கட்டைகளை தளர்த்திக் கொண்டு ஜல்லிக்கட்டு நடக்க வழி விட்டு ஒதுங்கியுள்ளது.

இந்த போராட்டங்களால் ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கியது மட்டுமின்றி, பாரம்பரிய பொருளாதாரம் சார்ந்த ஒரு விழிப்புணர்வும் மக்களிடையே ஏற்படத் தொடங்கியுள்ளது. பாரம்பரிய பொருளாதாரங்களை அழித்து அதன் மேலே ஒரு வணிக சந்தையை உருவாக்க எத்தனிக்கும் பன்னாட்டு அளவிலான சமூக பொருளாதார அரசியலையும், கால்நடை சார்ந்த பாரம்பரிய வரலாற்று தொடர்புகளையும் நோக்கி நமது பார்வையை திருப்புவதற்கான காலம் கனிந்துள்ளது.

இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இளைஞர்கள் எழுச்சி வெறும் ஜல்லிக்கட்டுக்காக மட்டும் கூடிய கூட்டமாக தோன்றவில்லை பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக  மத்திய மாநில அரசுகளால் தமிழ் மண் தொடர்ந்து சுரண்டப்பட்டும், ஏமாற்றப்பட்டும், வஞ்சிக்கப்பட்டும் வருகின்றமையின் ஒட்டுமொத்த மனக்குமுறல்கள் தான் இன்று ஜல்லிக்கட்டு என்ற ஒற்றைப் பண்பாட்டு அடையாளத்தின் மூலம் வெளிப்படுத்தப்படுவதாகவே கருத முடிகின்றது.

இந்த எழுச்சி இனிவருங்காலங்கில் தொடர்ந்து வெளிபடுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும் என்றே தோன்றுகின்றது. அதனால் தான் என்னவோ மத்திய மாநில அரசுகள், மிக அவசரம் அவசரமாக மாணவர் போராட்டங்களை காவல் துறையினரை ஏவி ஒரு முடிவுக்கு கொண்டு வந்தனர் என்றே தோன்றுகின்றது.

- பிரக்ஞகன்

வாய் திறந்து பேசுங்கள் பாலியல் வன்முறைக்கு எதிராக !


பலவிதமான பொருட்களை விற்பனை செய்யும் ஒரு சந்தையில் பெண்களை கூண்டுக்குள் அடைத்து விற்பனை செய்வதை கண்டால் மனம் வலிக்கும் அல்லவா. ஒருவேளை அக் கூண்டுகளுக்குள் நம் வீட்டுப் பெண்கள் அடைக்கப்பட்டு கிடந்தால் எப்படித் துடிப்போம்? இந்தக் காலத்தில் போய் இப்படி எல்லாம் நடக்குமா என நாம் நினைத்திருக்கின்றோம். உண்மையில் இந்தக் காலத்திலும் தான் இத்தகைய பாலியல், வன்முறை பல கொண்ட  சந்தைப் படுத்தல்கள் தினம் தினம் நமது வீட்டு வரவேற்பு அறைக்கே வந்து கடக்கின்றன. ஆனால் நம் கண்களை கட்டிப்போட்டு விளம்பரங்கள், திரைப்படங்கள், கதைகள், இலக்கியங்கள் என அனைத்திலும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் நாம் தான் அவற்றைக் குறித்து கொஞ்சம் கூட கவலைப்படாமல் வாழ்கின்றோம்.

சென்னையின் மாங்காட்டு பகுதியில் பத்து வயது சிறுமியை பக்கத்து வீட்டில் வசித்து வந்த இளைஞன் ஒருவன் பாலியல் பலவந்தம் செய்து, பின்னர் அவளைக் கொன்று வீசியெறிந்த செய்தியைக் கேட்ட போது நெஞ்சம் படபடத்தது. வீட்டில் பெற்றோரில்லாத சமயத்தில் விளையாடிக் கொண்டிருந்த அச் சிறுமியிடம் நாய் குட்டியோடு விளையாடலாம் வா என உள்ளே அழைத்த அந்த கொடூரன், பச்சிளம் சிறுமி என்றும் பாராது பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கின்றான். பின்னர் அவளை கிரிக்கெட் பையில் மறைத்து கொண்டு ஆளரவமற்ற காட்டுக்குள் எரித்துவிட்டு வந்திருக்கின்றேன். அத்தோடு நின்றுவிடவில்லை, பின்னர் பெற்றோர் அச் சிறுமியைத் தேடுகின்ற போது நல்லவன் போல நடித்து காவல்துறையில் புகார் கொடுக்கவும் உதவியிருக்கின்றான். அந்த கொடூரன் எதோ சாதாரண படிப்பறிவற்ற ஒருவன் கூட இல்லை, நன்றாக படித்து ஐடி துறையில் வேலையும் பார்க்கின்றான். நல்லவன் போல இதுவரை காலமும் காட்டிக் கொண்டு வந்திருக்கின்றான். அது அண்ணனாகவோ, அப்பனாகவே யாராக இருந்தாலும் குழந்தைகளை தனியாக யாரையும் நம்பி விட வேண்டாம் என அச் சிறுமியின் தாய் கதறிக் கொண்டு அழுதக் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த போது மனம் உறைந்து விம்மியது.

கொஞ்ச நாளைக்கு முன்னர் அரியலூரைச் சேர்ந்த நந்தினி என்ற இளம்பெண், அதே பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட தலைவர் ராஜசேகர் என்பவரால்  பாலியல் வன்படுகொலை செய்யப்பட்டார். ஆனால், இச் சம்பவமும் வெகுசன ஊடகங்களால் பத்தோடு பதினொன்றாம் செய்தியாக்கப்பட்டு மறக்கப்பட்டது. சென்ற ஆண்டு, சென்னையில் பட்டப்பகலில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். ஆனால், கொஞ்ச நாளிலேயே அதுவும்  மறக்கப்பட்டு வழக்கமான வாழ்க்கைக்கு திரும்பிவிட்டோம்.

இதற்கு முன்பு புது தில்லியில் நிகழ்ந்த நிர்பயா சம்பவம் உட்பட இந்தியக் கண்டத்தில் நடந்த பல்லாயிரக் கணக்கான சம்பவங்களை செய்தியாக்கும் ஊடகங்களின் போலித் தனங்கள் எப்படிப்பட்டது எனில் வியாபாரத்துக்காக பெண்ணுரிமை பேசிவிட்டு, அது இது எனக் குதித்து விட்டு, அடுத்த கணத்திலோ அரைநிர்வாண பெண்களின் படங்களையும், ஆபாச காட்சிகளையும் காட்டுகின்றனர். எந்த மாதிரியான கொள்கையை உடையவர்கள் இவர்கள். பெண்களை அழகியல் நோக்கில் சித்தரிப்பது என்பது வேறு, ஆனால் அவளை விற்பனை பொருளாக உடலை மட்டும் குறி வைத்து அட்டைப் படம் போடுவது, சினிமா எடுப்பது, பாடல்கள் எழுதுவது, கதைகள் எழுதுவது என சுற்றிசுற்றி அங்கேயே பிணத்தின் மீது வட்டமடிக்கும் கழுகுகளை போல வட்டமடிக்கும் இவ்வாறானவர்கள் தான் பிறிதொரு சந்தர்பங்களில் தொலைக்காட்சிகள் தோன்றியும், பத்திரிக்கைளிலும் பெண்ணுரிமை என விளம்பித் திரிகின்றனர். அல்லது பெண்கள் முக்காடு போடட்டும், வீட்டுக்குள் கிடக்கட்டும், இரவில் எதற்கு சினிமா பார்க்க போக வேண்டும், இவள் சிரித்திருப்பாள், இவள் கண்ணடித்திருப்பாள் என கதை அளக்கின்றனர்.

***

கேரள மாநிலத்தில் 1996-யில் பள்ளிக்கு போன பதினாறு வயது பெண்ணைக் கடத்திக் கொண்டு போய் காட்டுப் பங்களாவுக்குள் அடைத்து வைத்து போதை ஊசி ஏற்றப்பட்டு 40 நாட்கள் எண்ணற்ற ஆண்களால் தொடர் வன்புணர்வு செய்யப்பட்ட சூரியநெல்லி சம்பவத்தை நம்மில் எத்தனை பேர் ஞாபகம் வைத்துள்ளோம். இதில் சம்பந்தப்பட்ட அப்போதைய காங்கிரஸ் அமைச்சர் பிஜே குரியன் என்ற அரசியல்வாதி மீது என்ன நடவடிக்கையை எடுத்தார்கள். இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு 2006-ஆம் ஆண்டில், அச்சன் உறங்காத வீடு என்ற மலையாளத் திரைப்படம் வெளியானது. இத்தனைக்கு இது நடந்தது பெண்கள் மீது வன்முறை மிகவும் குறைவானதாகவும், பெண் கல்வியில் முன்னேற்றம் கண்டதாகவும் அறியப்படும் கேரள மாநிலத்தில். அங்கே அப்படி என்றால் இந்தியாவின் பிற பாகங்களில் நடப்பவைகளை எல்லாம் பட்டியலிட்டால் பூமி தாங்காது.

எண்பதுகளில் தொடங்கப்பட்ட வரதட்சணைக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கி இன்று பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டங்கள் வரை பெண்ணிய போராட்டங்கள் வளர்ந்தே வந்துள்ளது. ஆனால் அவை சாதிக்க வேண்டியவைகள் நெடுந்தூரம் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு சம்பவங்களும் சமூகத்தில் சலனத்தை உண்டாக்கியே இருக்கின்றது. 1972-யில் மதுரா பலாத்கார வழக்கு, தர்வீந்தர் கௌரின் வரதட்சணை கொலை வழக்கு, 1987-யில் ரூப் கன்வாரின் உடன்கட்டை ஏற்றப்பட்ட வழக்கு, 1992 பன்வாரி தேவி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு என பல வழக்குகளை இத் தேசம் சந்தித்து விட்டது. ஒவ்வொரு சம்பவங்களும் சட்டத்தை மாற்றச் செய்துள்ளதே தவிர சமூக கண்ணோட்டத்தை பெரிதாக மாற்றிவிடவில்லை.

வழக்கம் போல சமயத் தலைவர்கள், அரசியல் பெருசுகள் அரைத்த மாவைத் தான் அரைக்கின்றனர். பெண்கள் உடை அணிவதும், அசட்டையாக இருப்பதும் தான் பெண்கள் மீதான வன்முறைக்கு காரணம் என்கின்றனர். இத்தனை சம்பவங்களுக்கு பின்னரும் கூட சமூகத்தில் படித்த மரமண்டைகளுக்குள்ளேயே சமூகப் பிரச்சனையின் ஆணிவேரைக் கூட அசைக்கும் மாற்றுக் கருத்தை உண்டாக்க முடியவில்லையே என்பது தான் வருத்தமளிக்கின்றன.

கற்பழிக்கும் போது அண்ணா என காலில் விழுந்தால் காப்பாற்றப்பட்டு இருக்கலாமேஎன்ற உலக மகா புத்திசாலித்தனமான கருத்தை முன்மொழிந்தவரே வயது வராத பெண்களை ஆசிரமத்துக்கு அழைத்து அசிங்கம் செய்து மாட்டிக் கொண்டுள்ளார் என்ற போது, கருத்துக் கந்தசாமிகள் பலரும் கருத்து சொல்வதே எங்கே தாம் மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சம் தான் போலிருக்கு.

ஓப்பன் இதழில் வெளியான பிரியா என்ற பெண்ணின் கதையை வாசித்த போது மண்டையில் சம்மட்டியால் ஓங்கி அடித்தது போலிருந்தது. நிர்பயாவின் சம்பவத்தை கிழி கிழியென தொலைக்காட்சிகளில் கிழித்துக் கொண்டிருந்த அதே வேளையில் பிரியாவும் அவளது அண்ணனும், தகப்பனும், தாயும் கூட இருந்துள்ளார்கள். ஆனால் அதற்கு மேல் அவள் சொன்னதை வாசித்த போது நெஞ்சம் கலங்கியது. அன்றிரவே தகப்பனே அவளை பலாத்காரம் செய்துள்ளான். அது அவளது தாயுக்கும் நன்றாகவே தெரியும், ஏனெனில் பிரியா வயது வந்த நாள் முதலே இது நடக்கின்றதாம். கொடுமை என்னவெனில் அவளது அண்ணனும் அவனது இச்சையை தங்கை மூலம் நிறைவேற்றிக் கொண்டுள்ளான்.

பொருளாதார பலவீனம், சமூக கௌரவ அச்ச உணர்வு, துணைக்கு யாருமே இல்லை, குடும்பத்தை பகைத்துக் கொண்டு தனியாக வாழ் முடியுமா என்ற துர்ப்பாக்கிய நிலைகளுக்குள் முடக்கப்பட்ட அப்பாவி பெண் ஒரு நாள் கொடுமை தாங்காமல் உத்தரபிரதேச மாநில முதல்வர் நடத்தும் மக்கள் சந்திப்பு முகாமுக்கு சென்று தனது நிலையை எடுத்துக் கூறி இருக்கின்றாள். உடனடியாக விரைந்து சென்ற அரசு பெற்றோரை கைது செய்தததோடு, அவளையும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இச் செய்தி அறிந்த பின் பிரியா எதிர்பாரா வண்ணம் சமூகத்தின் பலரும் அவளுக்கு உதவ முன்வந்துள்ளனர், அவளது தைரியத்தை பாராட்டவும் செய்துள்ளனர்.

சோபா சக்தியின் ஒரு நாவலில் இதே போன்றதொரு கதைக்கருவை தமிழ் குடும்பம் ஒன்றில் நடப்பதாக சித்தரித்திருக்கின்றார். இது தான் எதார்த்தம். நாம் தான் கண்ணை மூடிக் கொண்டு ஒவ்வொரு சம்பவங்களும் எங்கோ நடப்பது போல நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம்.  சொந்தக் குடும்பத்துக்குள் பெற்ற தந்தை, உடன்பிறந்த சகோதரன், சிற்றப்பன், பெரியப்பன்ன, மாமன், மச்சினன் தொட்டு உடன் படிப்பவன், பக்கத்துவீட்டுக்காரன், கடைக்காரன், பணியிடத்தில் பணியாற்றுவோன், முக்கியமாக உயரதிகாரிகள், ஆசிரியர்கள் என இந்த வன்கொடுமை சங்கிலியில் குற்றவாளிகளாக நல்ல பிள்ளை முகமூடி அணிந்து பலரும் உலாவி வருகின்றனர். அனைவரையும் அரசோ, ஊடகமோ கண்டறிந்து தண்டிக்கும் என கனவு காண்பது மடத்தனம். பாதிக்கப்பட்டவரும், பாதிக்கப்பட்டவருக்கு அருகில் இருப்பவரும், நாம் ஒவ்வொருவரும் குற்றம் செய்வோரின் முகத்திரையை கிழித்து தண்டனை பெற்றுதர முன்வர வேண்டும்.

தெகல்கா பத்திரிக்கையில் புதிதாக பணிக்கு சேர்ந்த இளம் பெண் மீது அந்த பத்திரிக்கையின் முதன்மை ஆசிரியரும் புகழ் பெற்றவருமான தருண் தேஜ்பாலே தகாத முறையில் நடந்த சம்பவத்தை அப் பெண் நினைத்திருந்தால் மூடி மறைத்து மனதுக்குள் புழுங்கி இருக்க முடியும். ஆனால் தமது பொருளாதாரம், கேரியர் என எதையும் பொருட்படுத்தாமல் தன்மானம் ஒன்றுக்காக முன்வந்து புகார் அளித்தார். பெண்கள் முதலில் செய்ய வேண்டியது அது தான். தன்மானத்தை இழந்து விட்டு சமூகத்துக்காக போலியான கௌரவத்தோடும், வசதியோடும் வாழ்வதை விட கேவலம் வேறு ஒன்றுமில்லை.

இதை எல்லாவற்றையும் விட பெருங்கொடுமை பெண்ணை கலியாணம் கழித்து மனைவியாக்கி விட்டால் அவள் தம் அடிமை என்ற மனோபாவம். வெளியே பிறர்த்தியாளாள் பெண்கள் அனுபவிக்கும் பாலியல் வக்கிரங்களை விட வீட்டுக்குள் அதுவும் கட்டியோனால் தரப்படும் பாலியல் வன்கொடுமைகள் என்பவை ஆயிரம் பக்கங்களுக்கு நீளும் சோகக் கதை என்பதையும் நாம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நினைத்துக் கூட பார்ப்பதில்லை.

***

நம் ஒவ்வொருவரையும் பெற்றவள் ஒரு பெண் தான். நமது வாழ்வில் சகோதரியாக, தோழியாக, காதலியாக, மனைவியாக, மகளாக வாழ்வின் இறுதி வரை நம்மைச் சுற்றி பெண்கள் நிரம்பி உள்ளனர். நம் வாழ்வின் அந்திமக் காலங்களில் கூட மனைவியாக, மகளாக ஏன் ஒரு செவிலித் தாதியாக நமது வாந்திகளை துடைத்து, மூத்திரத்தை கழுவி, மலத்தைச் சுத்தம் செய்து கவனித்துக் கொள்பவளாக இருப்பவர்களும் பெண்கள் தான்.

பல பெண்கள் திருமண பந்தத்தில் நுழைந்ததும் தமக்கான கனவு, லட்சியங்கள், உறவுகள், வாழ்க்கை முறைகள், உணவு பழக்க வழக்கங்கள் என பலவற்றையும் மாற்றிக் கொள்கின்றனர். மாதவிடாய் காலங்களில் மாத மாதம் வலிகளை சுமக்கின்றனர். கருப்பக் காலங்களில் சொல்ல முடியாத அளவுக்கு உடல் அளவிலும், உள்ள அளவிலும் துன்பத்தை அனுபவிக்கின்றனர். இப்போது எல்லாம் வேலைக்கும் போய் சம்பாதித்து பொருளாதார சுமைகளை பெண்களும் பகிர்ந்து கொள்ளத் தொடங்கிவிட்டனர்.

ஒரு பிள்ளையை பெற்றுத் தந்தும் அவளது உடல், உள்ளம், அழகு என அனைத்து சீர்குலைந்தும் விடுகின்றது. பிள்ளைப் பேற்றோடு அவளது சுமை இரட்டிப்பாகி விடுகின்றது. பிள்ளையை வளர்ப்பது, கணவன்மார்களை கவனித்து கொள்வது தொடங்கி பல பெண்கள் கணவன்மாருக்கு தொழில்களிலும் துணையாக இருக்கின்றனர். எல்லாம் போக இரவுகளில் படுக்கையையும் பகிர்கின்றனர்.

இத்தனை வலிகளையும், ரணங்களையும், தியாகங்களையும் சுமந்து கொண்டு அலையும் பெண்களை நமது சமூகம் எத்தனை வன்மத்துக்கு உள்ளாக்குகின்றன என்பதை என்றாவது ஒரு நாள் நாம் அறிந்திருக்கின்றோமா?

பெண் பிள்ளைகள் பிறந்ததுமே பலரும் ஒரு இரண்டாம் பட்ச மனோபாவத்தோடு தான் அவர்களை எதிர்நோக்குகின்றனர். காரணம் நம்மில் பலருக்கும் ஆண் பிள்ளைகள் வேண்டும், ஏனெனில் சமூகத்தில் அதிகாரம் செலுத்துவது தொடங்கி பொருளாதார வலிமைகள் உள்ளடங்கலாக அனைத்தையும் ஆண்கள் தான் அனுபவிக்கின்றோம். அதனால் தான் பெண்களை வளர்ப்பதைக் கூட பல பெற்றோர் தியாக மனோபாவத்துடன் செய்கின்றனர். அது போக ஒரு பெண் பிள்ளைக்கான குறைந்த பட்ச சுதந்திர வெளியும், பாதுக்காப்பும் மிகவும் குறைவானதாகவே இச் சமூகம் கொண்டிருக்கின்றது.

இந்த தேசத்தில் பெண் பிள்ளைகள் மீது திணிக்கப்படும் மரபு சார்ந்த நெறிமுறைகளை ஆண் பிள்ளைகள் மீது திணிப்பதில்லை. உடுத்துவது, உண்பது தொட்டு அனைத்தையும் என்றோ ஒருவன் எக்காலத்திலோ கூறி வைத்தவைகள் படியே நடத்தப்படல் வேண்டும் என நாம் நிர்பந்திக்கின்றோம். அது கூட பரவாயில்லை, பெண் பிள்ளைகளின் கல்வி, சிந்தனை போன்றவற்றில் கூட சுயமான சுயாதீனமான முடிவுகளை மேற்கொள்ள முடியாமல் திண்டாட வைக்கப்படுகின்றார்கள்.

அதனினும் கொடுமை, சமூகம் பெண்களை மிக முக்கியமான வியாபார பொருளாக மாற்றியமைத்துள்ளமை தான். சற்று சிந்தித்துப் பாருங்கள், சுதந்திரம் வாங்கி விட்டோம் என்கின்றோம், ஜனநாயக நாடு என்கின்றோம், சுமார் 60 கோடி பெண்களை உடைய இந்தியாவில் பெண்களின் சமூக பொருளாதார நிலை எந்தளவுக்கு உள்ளது என்பதை உற்று நோக்குங்கள்.

அனைத்து துறையிலும் பெண்களும் முன்னேறுகின்றார்கள் எனக் கூறிக் கொள்கின்றோம், அதாவது பெரிய மனது பண்ணி பெண்களுக்கு வாய்ப்பளித்துள்ளது போல பேசிக் கொள்கின்றோம். ஒரு லட்சம் ஆண்டுகளாக மனித சமூக பண்பாட்டு நாகரிக வளர்ச்சியில் பெண்களும் பங்காற்றி உள்ளார்கள் என்றிருக்கும் போது, அனைத்து நிலைகளிலும் பெண்கள் குறைந்தது கணிசமான பங்காவது இருக்க வேண்டாமா?

ஒன்றுமில்லை ! இந்திய பல்கலைக்கழங்களில் துணை வேந்தர்களாக எத்தனை பெண்கள் இருக்கின்றார்கள். அது கூட வேண்டாம், நமது பாராளமன்றத்தில் எத்தனை பெண் உறுப்பினர்கள் உள்ளார்கள் என எண்ணிப் பாருங்கள் மூன்றில் ஒன்று கூட கிடையாது. கடந்த முப்பது ஆண்டுகளில் ஒரு பெண் கூட பிரதமர் ஆகவில்லை. சர்வ வல்லமை படைத்த அரசியல் பொருளாதார ஜாம்பவான்களின் மகள்களாக, மனைவிகளாக, காதலிகளாக இருந்தால் மட்டுமே இந்த உயர்பதவிகளை தொட்டாவது பார்க்க இயலும் என்ற நிலை இருக்கின்றது. சுயமாக எந்த பெண்ணும் உயர் ஸ்தானங்களை அடைந்து விடும் நிலை என்பது கற்பனையிலும் இல்லை என்பது தான் நிஜம்.

சமூகத்தில் முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கும் சினிமா மற்றும் விளையாட்டுத் துறையை எடுத்துக் கொள்வோம். கடந்த 75 ஆண்டுகால இந்திய சினிமா வரலாற்றில் கதாநாயகர்களின் காமுகிகளாக மட்டுமே பெண்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர். விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய படங்களே பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப் படுத்தி வந்துள்ளது, அதிலும் கூட சொற்பமான அளவுக்குத் தான் பெண் படைப்பாளிகள் பங்காற்றி உள்ளனர். குறைந்தது மூன்றில் ஒரு பங்காவது பெண்கள் பெற்றிருக்க வேண்டுமே.

பல விருதுகளை அள்ளிய பெண் வீராங்கணைகள் முகவரியே இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளனர். பெண்களால் இயலாது என்ற மனோபாவத்தை சமூகமே தீர்மானித்து, அவர்களுக்கான வாய்ப்பை அளிக்காமலேயே கதையை முடித்துள்ளனர் என்பதே எதார்த்தம்.

ஆண்களில் கூட குறிப்பிட்ட சாதிக்குத் தான் இந்த பணம் கொழிக்கும் மத, சினிமா, விளையாட்டு வியாபார பதவிகள் என்றாகிவிட்ட நிலையில் பெண்களுக்கு இடமளிப்பார்கள் என நினைப்பது வடிக்கட்டின முட்டாள் தனம் தான்.

***

இன்று நெருக்கும் பொருளாதார சுமைகளால் தான் பெண்கள் பலரும் படிக்க வைக்கப்பட்டு, வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். பெண் தான் விரும்பும் துறையில் சாதித்து வெற்றியாளனாக வளர வேண்டும் என்றால் அவள் பல்வேறு பெற்றோர், உற்றார் , உறவினர்களின் சம்மதங்களை பெற்று பல தடைக்கற்களை தாண்ட வேண்டியுள்ளது. தன்னால் சாதிக்க இயலும் என அவளே நம்ப வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை எட்டவே காலங்கள் கரைந்து விடுகின்றன. காரணம் ஆணின் நிழலில் ஆணுக்கான தாசியாக இருப்பதே பெண்களின் பிறப்பின் கடமை என்றே கற்பிக்கப்பட்டு வருகின்றனர். பொது வெளிக்கு வந்தால் பலராலு பல இடங்களிலும் பெண்களை மீண்டும் வீட்டுக்குள் திருப்பி அனுப்பவே பெருங்கும்பல்கள் தீயாக வேலை செய்கின்றன.

அவர்களில் மிகப் பெரும்பான்மையோனோர் பெண்களை பாலியல் இச்சைக்கு பலியாக்க துடிக்கின்றனர். தனது அதிகார வரம்பை பயன்படுத்தி தனக்கு கீழுள்ள பெண்களை படுக்கை அறைக்குள் வீழ்த்த வேண்டும் என்ற பாலியல் வறட்சித் தன்மை நிரம்பியே காணப்படுகின்றது. குறிப்பாக பொருளாதார பலவீனமான பெண்களால் இத்தகைய தடைகளை தாங்கிக் கொள்ள இயலுவதில்லை. ஒன்று மானத்தை விற்க வேண்டும், அல்லது பொருளாதாரத்தை இழக்க வேண்டும் என்ற நிர்பந்தத்துக்குள் உள்ளாக்கப்படுகின்றனர். இந்த நிலை பெரிய தொலைக்காட்சி சேனல்கள், பத்திரிக்கைகள் தொடங்கி உள்ளூர் ஜெராக்ஸ் கடை, துணிக்கடை வரைக்கும் நீள்கின்றது.

இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் பெண்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியவர்கள் உடனடியாக குடும்பத்தவர்கள், நண்பர்கள் தான். ஆனால் மானம் மண்ணாங்கட்டி என்ற கற்பனாவாதங்களாலும், போராடும் குணத்தை இழந்துவிட்ட சொரணைக்கெட்ட கோழைத்தனமான வாழ்வியல் சித்தாந்தகளாலும் அவர்கள் அந்த இடங்களில் நிராகரிப்பின் விளிம்புகளுக்குள் தள்ளப்படுகின்றனர். குடும்பத்தவர்கள் உதாசீனம் செய்யும் பட்சத்தில் பொது சமூகம் தான் முன் வந்து உதவ வேண்டுமல்லவா. காரணம் நாம் ஒன்றும் காட்டுமிராண்டி கால பாமரச் சமூகத்துக்குள் வாழவில்லை.

கற்றறிந்த தொலை தொடர்புகள் நிரம்பி வழிகின்ற ஜனநாயத்தையும், பகுத்தறிவையும் கொண்டிருக்கும் முன்னேற்றமான சமூகம். சமூகத்தின் அங்கத்தவர்கள் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் நீரில் எறிந்த கல்லால் எழுந்த அலைகள் போல அனைவரையும் அது பாதிக்கும் என்பதை உணர வேண்டும் தானே. ஆனால் இந்த பொது சமூகம் எப்படி பட்டது தெரியுமா? சுயநலமிக்கது உதவ முன்வராது உதவ முன்வரவில்லை என்றாலும் கூட பரவாயில்லை ஆழ ஆராயமல் நியாயம் பேசவும், பெண்களையே குற்றப்படுத்தவும் தொடங்கிவிடும்.

மும்பையின் காமாத்திபுராவுக்கோ, கொல்கத்தாவின் சோனாகாச்சிக்கோ போய் பார்த்தால் லட்சம் நாவல்கள் எழுதக் கூடிய அளவில் ஒவ்வொரு அபலைகளுக்கு பின்னாலும் ஆயிரம் ஆயிரம் கொடூரக் கதைகள் புதைந்திருக்கின்றன. ஆனால் நம் கண்களுக்கு தெரிவதோ பெண்ணின் உடல் மட்டுமே. அவர்களது வறுமையும், சமூக அவலங்களின் இடுக்குகளுக்குள் இடறி விழுந்து 15 வயதுக்குள்ளேயே வாழ்க்கை இழந்து தினம் தினம் குமுறிக் கொண்டிருக்கும் அப்பாவி பெண்களும் பெண்களை தேவமாதாவாக, சக்தியாக பூஜித்து பய பக்தியோடு வழிபட்டுக் கொண்டிருக்கும் இதே தேசத்தில் தான் இருக்கின்றார்கள்.  ஒரு சர்வ வல்லமை படைத்த ஜகன்மாதாவும் அவர்களின் மாதவிடாய் உதிரத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கும் ஆணாதிக்க லிங்கங்களை அறுத்துப் போட வந்த பாடில்லையே.

பிணந்தின்னி சமூகம் பெண் இறந்தாலும் புணர்ந்துவிட்டே புதைக்கும் சர்வ கொடூர மனோபாவத்தை உடைத்தெறிய இன்னும் எத்தனை அவதாரங்கள் இங்கு தோன்ற வேண்டுமோ. தோன்றும் அவதாரங்கள் கூட தம் குஞ்சுமணிகளை ஆட்டிக் கொண்டு அர்த்த ராத்திரி சாம பூஜைகள் கோரும் என்பது மட்டும் நிதர்சன உண்மை. ராணுவமே கற்பழித்தாலும் தகும் என்ற சட்டத்தை வைத்துக் கொண்டு அதற்கு எதிராகஊணுறக்கம் இல்லாமல் போராடிக் கொண்டிருக்கும் சர்மிளா போன்ற இரும்பு பெண்மணிகளின் தியாகங்கள் வீண் போகக் கூடாது. மீண்டும் ஒருமுறை முதல் பத்தியை வாசித்துப் பாருங்கள், உறங்குவோரையும், உறங்குவோர் போல நடிப்போரையும் வைத்துக் கொண்டு சமூக வளர்ச்சியையும் பெண்ணுரிமைகளையும் எவ்வாறு தான் நாம் அடையப் போகின்றோமோ.

எதோ அவ்வவ்போது ஒரு சிலரால் ஏற்படுத்தப்படும் அபாயச் சங்கு ஒலிப்புகளால் தில்லி மாணவி நிர்பயாவின் மரணத்தை போன்ற சம்பவங்களை மட்டும் முன்மொழிந்து போராடுவது போல பாசாங்கு செய்துவிடுகின்றோம். ஆனால் உண்மையில் நம் அருகே, நம் வீடுகளுக்குள் கூட நடைபெறும் குற்றங்களையும், அநியாயங்களையும் தட்டிக் கேட்கவே திராணியற்ற கோழைத்தனமான சமூகத்தில் தான் நாம் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றோம்.

- பிரக்ஞகன்

இணையத்துக்கு அடிமையாதல் என்றொரு நோய்


மனித மூளை இயற்கை தந்த கொடைகளிலேயே மிக அற்புதமனது, அதே சமயம் மிகுந்த ஆபத்தானதும் கூட. மனிதன் எதாவது ஒரு பழக்கத்தினை விரும்பத் தொடங்கி விட்டால், அதனைத் தொடர்ச்சியாகப் பெற்றுக் கொள்ளவே நினைக்கின்றான். 

இன்று உலகில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இணையங்களைப் பயன்படுத்த தொடங்கி விட்டனர். கிட்டத்தட்ட தினமும் அன்றாடத் தேவைகளில் ஒன்றாகவே இணையம் வந்தாகி விட்டது. கல்வி, வேலை, பொழுதுபோக்கு, தொழில் எனப் பல வகைகளிலும் கூட இணையம் தேவைப்படுகின்றன. 

தொழில்நுட்ப வளர்ச்சியும், இணையதள பரவலும் அதனால் ஏற்பட்ட மக்கள் ஊடகங்களின் (Social Medias) வருகையும் மனித சிந்தனைகளின் பகிர்தல் முறைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. உலகில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் யாரோ ஒருவர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் கூட கடல் கடந்த தேசங்களில் பலராலும் அறிய முடிகின்றது. நூறாண்டுகளுக்கு முன் இவற்றை எல்லாம் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். அவ் வகையில் இணையப் பெருவெளி எம்மைப் போன்ற சாமானியர்களின் பெரும் வியப்பையும், பிரமிப்பையும் ஏற்படுத்தி உள்ளது எனலாம். 

ஆனால் இணைய தளங்கள், மக்கள் ஊடகங்கள் நமது அன்றாட வாழ்வின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டே வருகின்றது. இதனால் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்து சிந்தித்தால் ஒரு தெளிவான பதிலை எட்ட முடியாமலேயே இருக்கின்றது. பல தகவல்களை அறியும் ஆர்வமுடைய என்னைப் போன்ற சாதாரணமானவர்களுக்கு இணையம் ஒரு வர பிரசாதம். வானொலிகள், புத்தகங்கள் என்பது ஊடாக, அதுவும் செலவும் செய்ய வசதி இல்லாமல் ஒவ்வொரு விடயத்தையும் தேடி தேடி வாசித்த காலம் போய் கண் முன்னே உலகை விரிவடையச் செய்தும் உலகின் ஒவ்வொரு அசைவுகளையும் அறியத் தந்து கொண்டிருப்பதில் இணையம் ஒரு மிகப் பெரிய சக்தியே எனலாம். 

ஆனால் இணையம் எல்லா சந்தர்பங்களிலும் வரமாய் அமைந்து விடுவதில்லை என்பதே உண்மை. மக்கள் ஊடங்களும், பிற இணைய ஊடகங்களும் இன்று பல குப்பைகளை கொட்டும் இடமாகவும், தனி மனித குரோதங்களையும், வெறுப்புக்களையும் தீயாய் உமிழும் ஒரு இடமாகவும் மாறிக் கிடக்கின்றது. பல மக்களை நல்ல முறையில் இணைத்து நல்ல மாற்றங்களை உண்டாக்கிய அதே இணையத்தை பலரும் ஆபத்தான, முட்டாள் கருத்துக்களை பரப்பும் கருவியாகவும் கைக்கொண்டு வருகின்றார்கள்.

மக்கள் ஊடகங்களான பேஸ்புக், ட்விட்டர், வலைப்பதிவுகள் என அனைத்திலும் நாம் எதாவது ஒன்றை கிறுக்கிக் கொண்டே இருக்கின்றோம். சில சமயங்களில் புத்தி பேதலித்து விட்ட கூட்டத்தின் பிதற்றல்களை போல அவை காட்சி தரவும் செய்கின்றது. இக் கிறுக்கல்களுக்கு மத்தியில் எவை நல்லது, கெட்டது. எவை பயன் உள்ளவை, பயன் அற்றவை. எவை நம்பகமானவை, நம்பகமற்றவை, எவை மெய், பொய். என எதையும் பிரித்தறிய முடியாத சூழலிலேயே சாதாரண வாசகர்களாகிய நாம் இருக்கின்றோம். 

எதுவும் அளவுக்கு மிஞ்சிப் போகும் போது அது பேராபத்தையே உண்டாக்கும். அதே போலத் தான் இணையப் பயன்பாடும் அளவுக்கு மிஞ்சிப் போகும் போது அது நமது இயல்பு வாழ்க்கையை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கும். ஏற்கனவே மேற்குலகில் மிதம் மிஞ்சிய இணையப் பயன்பாட்டால் பலரும் தமது உள்ளத்தையும், உடலையும் பாழாக்கி வருகின்றனர். 

இணையத்துக்கு அடிமையாகிக் கிடப்பதை ஒரு உளவியல் நோயாக இன்னமும் மருத்துவ உலகம் கருதவில்லை என்ற போதும், அதிகளவு இணையப் பயன்பாட்டைக் கட்டுபடுத்த அறிவுறுத்தியுள்ளது. அதுவும் இப்போது எல்லாம் அனைவரும் கைகளில் செல்பேசிகளும், அச் செல்பேசிகளில் இணைய இணைப்புக்களும் வந்துவிட்டதால் யாரைப் பார்த்தாலும் பேஸ்புக், டிவிட்டர், வலைப்பதிவு, இஸ்ண்டாகிராம், வாட்சாப் எனப் பலரும் சதா இணையத்திலேயே மூழ்கி விடுகின்றனர். பலருக்கு இணையத்தைப் பயன்படுத்த முடியாமல் இருக்க முடிவதில்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது. 

மனிதர்களாகி நாம் அன்றாடம் பல சாதனங்களைப் பயன்படுத்துகின்றோம், ஆனால் உதாரணத்துக்குக் கார், பைக், தொலைக்காட்சிகள், ஏசி எனப் பல சாதனங்களுக்கு நாம் அடிமை ஆகிவிடுவதில்லை. ஆனால் இணையம் அவ்வாறானதல்ல. 

கெவின் ராபர்ட்ஸ் என்பவர் தினமும் 12 மணி நேரம் வரை கணனியை பயன்படுத்தி வந்த ஒரு நபர். பெரும்பாலும் விளையாடுவது, இணையத் தளங்களை மேய்வது என நேரத்தை செலவழித்துக் கொள்வார். பல சமயங்களில் உறக்கமும், அன்றாட வாழ்வியல் காரியங்களும் கூடப் பாழடைந்தன. ஒரு நாள் மதுப் பழக்கத்துக்கு அடிமையான ஒரு நண்பரை சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கும் போது, ஒரு முக்கியமான விடயத்தை அவர் கவனித்தார். ஆம் ! மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்களிடம் காணப்படும் அத்தனை அம்சமங்களும் தனக்கும் இருந்ததை அவர் உணர்ந்தார். என்ன ஒரு வித்தியாசம் இவர் சைபர் அடிமையாகி இருந்தார். 

பல போராட்டங்களுக்குப் பின் இணைய அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்ட ராபர்ட்ஸ் தமது அனுபவத்தை ஒரு நூலாகவும் வெளியிட்டதோடு, இணைய மற்றும் கணனிப் பயன்பாட்டுக்கு அடிமையானோரை மீட்டு எடுக்கப் பல சொற்பொழிவுகளையும், வழிக்காட்டல் பயிற்சி பட்டறைகளையும் நடத்தி வருகின்றார். 

இது ராபர்ட்ஸ் மட்டும் சந்தித்த ஒரு பிரச்சனை அல்ல, உலகம் முழுவதும் லட்சக் கணக்கானோர் அறிந்தும், அறியாமலும் இணையத்துக்கு அடிமையாகி வருகின்றனர். 

இணையப் பயன்பாட்டு அடிமையானோருக்கும், போதைப் பொருட்களுக்கு அடிமையானோருக்கும் கிட்டத்தட்ட ஒரு விதமான அறிகுறிகள் அவதானிக்கப்பட்டுள்ளது. பல சமயங்களில் ஏன் இணையத்தை மேய்கின்றோம் எனத் தெரியாமலயே பலரும் இணையத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். பலரும் சமூகத் தளங்களான ட்விட்டர், பேஸ்புக் எனப் பலவற்றில் ஒன்றிப் போய் விடுகின்றனர். அதே போலப் பெரும்பாலானோர் இணைய விளையாட்டுக்கள், காணொளிகள் போன்றவற்றைக்கும் அடிமையாகி விடுகின்றனர். 

இணைய அடிமைத்தனத்துக்கு முறைப்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள் என எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் பென்சில்வானியாவின் பிராட்போர்ட் பகுதி மருத்துவ மையம் 10 நாள் இலவச கலந்தாலோசணைகளை வழங்கவுள்ளது. 

அதிகளவு கணனி, செல்பேசி ஊடான இணையப் பயன்பாடு என்பது ஒருவரின் தனி நபர் திறனை மட்டுமில்லாமல் அவரைச் சார்ந்த குடும்பம் மற்றும் உறவுகளைக் கூட மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்க வல்லது. அது மட்டுமில்லாமல் மாணவர்கள் மத்தியில் கல்வித் திறன் குறைபாடுகளையும், பணியாற்றுவோர் மத்தியில் பணித் திறன் குறைவுகளையும் ஏற்படுத்தும் எனக் கெவின் ராபர்ட்ஸ் எடுத்துரைக்கின்றார். 

உலகிலேயே தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த தென் கொரியாவில் அதிகளவு இணையம் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் அங்கு இணைய அடிமைத்தனம் மிகுந்தும் வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த அந் நாட்டு அரசாங்கம் பலவித ஆய்வுகளையும், கொள்கைகளும் வகுத்து வருகின்றது. 

இணையத்தில் தொழில் நிமித்தமாகவோ, பொறுப்புடன் எழுதுவதாக காட்டிக் கொள்ளும் பிரபலங்கள் பலரும் கூட வாசிப்போருக்கு நன்மை பயக்கும் வண்ணம் எழுத முற்படுவதில்லை. பலரும் பணம் செய்யும் உத்தியாகவும், தனி மனித சுய விளம்பரங்களுக்காகவும், தாம் நம்பும் கொள்கைகள், மதங்கள், சாதியங்கள், கோட்பாடுகளை பிறர் மீது திணிக்கும் வாய்ப்பாகவுமே இணையத்தை கருதுகின்றார்கள்.

இத்தகைய லட்சக் கணக்கான கருத்துக் குவிப்புக்கள் மத்தியில் இவற்றை எல்லாம் எவ்வாறு தரம் பிரித்து நுகர்வது என்பதில் நமக்கு பல சிக்கல்கள் எழவே செய்கின்றனர். இவற்றை நல்ல முறையில் பயன்படுத்துவது குறித்த போதிய விழிப்புணர்வுகள் நம்மவர்களில் மிகக் குறைவே எனலாம். 

வாசகர்கள் வாசிப்பதன் ஊடாக பேரானந்தம் பெறவும், அறிவூட்டல்கள் அடையவும், சிந்தனை வளம் பெருகவும், அவர் தம் வாழ்வில் இம்மியளவேனும் மாற்றங்களை பெறவும் வேண்டும் என்ற எண்ணத்துடன் இணையத்தை இயக்குவோர் மிக மிகக் குறைவே எனலாம். போலிகளையும், பக்கச்சார்புகளையும், பொறுப்பற்ற பகிர்வுகளையும் இணையம் உள்வாங்கி இருப்பதனால் ஒவ்வொரு வாசகர்களும் தமக்கு எவை உகந்தவை, எவை எல்லாம் உதவாதவை என்பதை ஆய்ந்து சுய தணிக்கை செய்து கொள்வதன் அவசியம் இன்றியமையாத ஒன்றாகும். 

ஏனெனில் இன்று மக்கள் ஊடகங்களை அதிகம் பயன்படுத்துவோர் பலருக்கும் ஒருவித உளவியல் அழுத்தம் காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அனைத்தையும் தவற விட்டு விடக் கூடாது என்பதில் பலரும் அதிக அக்கறை செலுத்துவதால் ஒரு வித மன பதற்றம் பலருக்கும் ஏற்பட்டு இணைய மக்கள் ஊடகங்களில் மூழ்கிப் போய் கிடக்கின்றனராம். மக்கள் ஊடகங்களில் கொட்டிக் கிடக்கும் பல தெரிவுகளும், அது கொடுக்கும் ஒருவித கர்வ எழுச்சியும், மகிழ்ச்சியும், பாராட்டுக்களும், விமர்சனங்களும் நம்மை அதில் கட்டிப் போட்டு வைத்துள்ளது. 

இன்று பலருக்கும் இணையத்தில் ஒரு பயன் மிக்க கட்டுரையை ஆழமாக வாசிக்கவோ, காட்சிப் பதிவுகளை பொறுமையாக கவனிக்கவோ, இரசிக்கவோ இயலாமல் போய்விட்டது. ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு கண நொடிப் பொழுதில் தாவிக் கொண்டே உள்ளார்கள். இவ்வாறு தாவும் மனப்பான்மையை உளவியலாளர்கள் FOMO ( Fear Of Missing Out ) எனக் கூறுகின்றார்கள். சுமார் 56 % பேருக்கு இத்தகைய பதற்றமும், குழப்பமும் தாவும் மனப்பான்மையும் மிகுந்து காணப்படுவதாக ஓர் அறிக்கை தெரிவிக்கின்றது. 

எதையாவது தவற விட்டுவிடுவோமோ என்ற பதற்றத்திலேயே பலதை ஒரு சமயத்தில் காண முற்படுவதால் வாழ்வின் பெரும் பகுதி நேரத்தை இணையத்தில் கழிக்கும் மோசமான சூழலும் எழுந்துள்ளது எனலாம். உண்மையில் நாம் எதையும் இணையத்தில் தவறவிடுவதால் இழப்பதில்லை, நமக்குத் தேவையானவற்றை முறையாக பெற்றுக் கொள்ளவும், பொறுமையாக வாசித்தோ, கண்டோ, கேட்டோ அறிந்து கொள்ள பல செயலிகள் இணையத்தில் உண்டு. அவற்றை சாவகாசமாய் அறிந்து அசைபோட்டு உள்வாங்கி கிரகித்துக் கொள்ளலாம். அதுவே சீரான அறிவு வளர்ச்சிக்கு உகந்ததாய் அமையும் என்பேன். ஆகவே இணையத்தில் அலைபாயும் மனதுக்கு கடிவாளம் போடக் கற்றுக் கொள்வது இணைய வாழ்வின் முதல் படியாகும். 

இது நிச்சயம் இணையத்தின், மக்கள் ஊடகத்தின் குற்றமில்லை. மாறாக அவற்றை சரிவர பயன்படுத்த தெரியாமல் இடறும் மனித மனதின் ஒழுக்கமின்மையும், அறிவின்மையும் தரும் குழப்ப நிலையே எனலாம்.

தொழில்நுட்பம் நமக்குள் ஏற்படுத்தியுள்ள ஒரு பிரமாண்ட உணர்வு, மோக வலைக்குள் சிக்கி விடாது அளவோடு பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சு என்பது போல அளவுக்கு அதிகமான இணையப் பயன்பாடு அதனை ஒட்டிய கணனி, செல்பேசி, சமூகத் தளங்கள் போன்றவற்றின் பயன்பாடும் நமது அன்றாட இயல்பு வாழ்க்கையைப் பாதிப்படையச் செய்துவிடும் என்பதை மட்டும் ஆழமாக மனதில் பதிய வையுங்கள்.

- அருண்ஜி
***

துருவங்கள் பதினாறு


தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் மாற்றுச் சினிமா வரும் அந்த வகையில் வெளியாகி சத்தமில்லாமல் வெற்றி நடை போட்டிருக்கின்றது “துருவங்கள் பதினாறு”. இத் திரைப்படத்தின் போஸ்டர்களை பல தடவை பார்த்திருந்தும், பத்தோடு பதினொன்றாக அப்புறமாகப் பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டேன்.

போன வாரம் செய்வதற்கு வேறு ஒன்றுமில்லை என்பதால் நண்பர்களின் நச்சரிப்பால் ராயபேட்டை எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலிற்கும் சென்றோம். வாரம் முழுவதும் ஓடி ஓடி உழைக்கும் நண்பர்களுக்குக் கலர் கலராகப் பொழுதுபோக்க சரியான தேர்வு அங்கு தான். அங்கே காலை 11 மணிக்கெல்லாம் போன போதும், எந்தப் படம் பார்ப்பது என்பதில் நண்பர்களுக்கிடையே பெரிய இழுபறி. கடைசியாக, “துருவங்கள் பதினாறு” பார்க்கலாம் எனக் கூறிய போது, இத் திரைப்படத்தை பார்க்கலாமா வேண்டாமா என அங்குள்ள காபிக் கடையில் ஒரு பட்டிமன்றத்தை நடத்திவிட்டு மதியக் காட்சிக்கு சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தோம். ஏசி உச்சத்தில் வைத்திருந்தனர், வெளியே அடிக்கிற வெயிலில் அனைவரையும் உள்ளே வர வைக்க வேண்டும் என்ற திட்டமோ என்னமோ. திரையரங்கில் கணிசமான அளவு கூட்டமிருந்தது, நம் நம்பிக்கை வீண் போகவில்லை என்ற திருப்தி ஏற்பட்டது.

படத்தில் ரகுமான் தவிர மற்ற அனைவரும் புது முகங்களே. படம் தொடங்கிய ஒரு சில விநாடிகளில் மழை பொய்யோ எனப் பெய்து கொண்டிருந்த ஓர் இரவில் முகமூடி போட்டுக் கொண்ட ஒரு நபர் கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைகின்றார். அங்கே காதலர் நாளை அப்பார்ட்மண்டில் கொண்டாடிக் கொண்டிருந்த இளம் ஜோடியை நோக்கிச் சுடுகின்றார்.

காட்சிகள் நகர்கின்றன, அழகு கொஞ்சும் மலைவாச நகரத்தில் தனிமையில் வாழ்ந்து வருகின்றார் முன்னாள் காவல்துறை அதிகாரி ரகுமான். அவரது சர்வீஸ் காலத்தில் தீர்க்கப்படாத ஒரு “Cold Case” பற்றிக் கேட்டறிய வருகிறார் காவல்துறையில் இணைய விரும்பும் ஒரு நபர். அவரிடம் அந்த வழக்கைப் பற்றி மனம் திறக்கிறார் ரகுமான்.

ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவில், குடிபோதையில் காரையோட்டி வந்த மூன்று இளைஞர்கள் ஒரு நபர் மீது மோதிவிட அந்த நபரும் அந்த இடத்திலேயே இறந்து போகின்றார். இறந்த நபரை காரின் பின்னால் போட்டு மறைத்துவிட்டு அந்த இடத்தை விட்டுத் தப்புகின்றனர் அந்த மூவரும். அதே இரவில் மற்றொரு நபர் சுடப்பட்ட நிலையில் கிடக்கவே, அங்கு வந்த பேப்பர் போடும் நபர் அதைக் காவல் துறையிடம் தெரிவிக்கின்றார். இந்நிலையில், ஒரு அடுக்குமாடி கட்டடத்தில் வசித்து வந்த இளம் பெண் காணாமல் போகவே, அவருடைய தோழி காவல் துறையிடம் அறிவிக்கின்றார். இந்த மூன்று வழக்குகளையும் விசாரிக்கத் தொடங்குகின்றார் காவல்துறை அதிகாரி ரகுமான். அவரோடு வருகின்ற புதிதாக வேலைக்குச் சேர்ந்த இளம் கான்ஸ்டபிளும் உதவுகின்றார். இந்த மூன்று சம்பவங்களுக்கும் எதோ ஒரு தொடர்பு இருக்கின்றது. இது தான் படத்தின் கதை.

வெறும் 22 வயதே ஆன புதுமுக இயக்குநர் கார்த்திக் நரேனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத் திரைப்படம் ஏற்கனவே நாம் பார்த்து பழக்கப்பட்டுப் போன பல வகை குற்றப்பின்னணி கொண்ட திரைப்படங்களிலிருந்து இத் திரைப்படம் பெரிதும் மாறுபடுகின்றது என்றே சொல்லலாம். இருபது வருடங்களுக்கு முன் ராஜேஷ் குமாரின் கிரைம் திரில்லர் வகை நாவல்களை வாசிக்கும் போது ஏற்படும் ஒரு மர்மம் நிறைந்த உணர்வை இன்றைய இணையம் காலத்தில் ஒரு திரைப்படம் தந்திருக்கின்றது. ஒவ்வொரு காட்சியிலும் நாம் நினைப்பதற்கு மாறாகக் கதையை திரும்ப வைக்கின்றார் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன். மற்றப் படங்களைப் போலில்லாமல் படத்தின் காட்சிகள் பொறுமையாகவே நகர்கின்றன என்ற போதிலும் கதையின் விறுவிறுப்பில் எந்தவொரு தொய்வும் ஏற்படவில்லை என்பது தான் இந்தத் திரைப்படத்தின் வெற்றிக்கு மற்றுமொரு காரணம் எனலாம்.

புது முக நடிகர்கள், பின் புலக் காட்சிகள், வசனங்கள் எனப் படத்தின் எல்லா இடங்களிலும் எதார்த்தம் பின்னி பிணைந்திருக்கின்றது. இருந்தும் சில இடங்களில் பார்வையாளர்களுக்கு குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. மிகக் கவனமாகப் பார்த்தால், அல்லது படத்தை இன்னொரு தடவை பார்த்தால் மட்டுமே புரிதல் ஏற்படுகின்றது. அதிலும் காணாமல் போன பெண்ணின் காதலரது முகமும், மற்றொரு மர்ம நபரின் முகமும் ஒன்று போலக் காட்டியிருப்பது தற்செயலான ஒன்றில்லை என்ற போதும், பார்ப்பவர்களுக்கு இவர் தான் இவர் என மனதில் பதிய வைப்பதற்குள் படம் முடிந்துவிடுகின்றது. புது முகங்களை அறிமுகம் செய்யும் போது வேறுபாடுகள் அவசியம் இயக்குநரே. படத்தைத் தனது முதிர்ச்சியான நடிப்பில் தாங்கி நிற்கின்றார் ரகுமான். புதுப் புது அர்த்தங்களில் பார்த்த ரகுமானா இது? எனத் தோன்றுகின்றது. தமிழில் மேலும் பல படங்களில் அவரது முகத்தை இனி அடிக்கடி காணலாம் என்று தோன்றியது. ஆனாலும், இத் திரைப்படத்தில் அஜித் நடித்திருக்கலாம் என்ற கருத்தை நான் மட்டுமில்லை நண்பர்கள் பலரும் சொன்னார்கள்.

படத்தின் கடைசிக் காட்சியில் விடுபடும் மர்மங்களும் திருப்பங்களும் தான் படத்தின் மிகப் பெரிய பலமே. தமிழ் சினிமாவில் அவ்வப்போது அபூர்வமாக நல்ல படங்கள் அத்திப் பூப்பது போல வெளி வந்துவிடுகின்றது. அந்த வரிசையில் வெளிவந்த திரைப்படம் தான் துருவங்கள் பதினாறு, நிச்சயம் அனைவரும் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

- சுந்தர் ஏழுமலை 

பெரியார் இன்றும் என்றும்


பொதுமக்கள் நிதியுதவியுடன் ''பெரியார் இன்றும் என்றும்'' என்ற தலைப்பில் 960 பக்கங்கள் கொண்ட நூலை விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 21 தலைப்புகளில் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சுமார் 450 பெரியாரின் கட்டுரைகள், பேச்சுகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. பெரியாரது சமூக கருத்துகள் தற்போது இளைஞர்களிடையே பரவ வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளனர். அவர்கள் நினைத்த மாதிரியே சென்ற மாதம் நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் அதிகம் விற்றுத் தள்ளிய புத்தகம் எதுவெனக் கேட்டால், இந்த புத்தகம் தான் என சற்றும் சிந்திக்காமல் பலரும் சொல்வர். குறிப்பாக பல இளைஞர்கள் இந்த புத்தகத்தை விரும்பி வாங்கி சென்றதை கண்கூடாக காண நேரிட்டது.

''பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ் நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் – பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள்.

சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் – ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரிடத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன். இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அதுபோலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல்நிலையில் இளைத்துப்போய், வலிவுக் குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத்தான் நான் மற்ற வலுக் குறைவான பின்தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுத்தான் நான் பார்ப்பனரிடமும், மற்ற வகுப்புக்களிடமும் காட்டிக்கொள்ளும் உணர்ச்சி ஆகும்.'' என சமுதாயத்தில் சாதீய வேற்றுமை ஒழிய வேண்டும் என பெரியார் எழுதுகின்ற கருத்து காலம் கடந்து இன்றும் தேவைப்படுவதாகவே இருக்கின்றது.

மற்றது பெரியார் ஊட்டும் தமிழ் உணர்வைச் சொல்லலாம், ''மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ, நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்காலச் சந்ததிக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படி செய்ய வேண்டுமானால் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும் சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும்!'' ('விடுதலை' - 25-07-1972). மொழி உணர்ச்சி இல்லை என்றால் நாட்டு பற்றோ சமூக பற்றோ வரப் போவதில்லை. இன்றைய காலத்தில் தாய் மொழியை மறந்தும் புறந்தள்ளியும் அந்நிய மொழிகளை தலையில் தூக்கி வைத்தாடும் சூழல் தான், நம் நாட்டையும் அதன் வளங்களையும் மறந்து தன்னலம் பெருகி அழிவுப் பாதையை நோக்கி நகர்கின்றோம் இதன் பாரதூர விளைவுகளை அன்றே பெரியார் எடுத்துக் கூறியிருக்கின்றார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவின் சிறப்பையும் தேவையையும் அவர் எடுத்துக் கூறுகின்றார். "தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே! அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக் கூடியது அல்லவே என்று கருதி பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன். மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம். இந்தப் பண்டிகையும் அறுவடைத் திருவிழா  என்ற கருத்தில்தானேயொழிய, சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை, இந்திர விழா என்று சொல்லப்படும் கருத்தில் அல்ல. இந்தப் பொங்கல் பண்டிகையைத் தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும்.'' (விடுதலை 30.1.1959) என்கிறார் பெரியார்.

தமிழிசையின் வளர்ச்சி எவ்வளவு முக்கியம் என பெரியார் எழுதியுள்ள கட்டுரை நம்மை சிந்திக்கத் தூண்டுகின்றது.  ''தமிழிசைக்கு நாம் கிளர்ச்சி செய்ததானது வீணாகவில்லை. தமிழிசைத் தொழிலாளர்கள் தமிழில் இசை கற்று வருகிறார்கள்; பெரும்பாலும் தமிழில் பாடுகிறார்கள். இசையை நுகர்வோரும் தமிழில் இசை வேண்டுமென்று விரும்புகிறார்கள். இனி இந்த உணர்ச்சி குன்றிவிடாது. இசை விருந்தளிக்கும் செல்வவான்களும், நுகர்வோர்களும் தமிழுணர்ச்சி உள்ளவர்களாக இருக்கும் வரை, இந்த உணர்ச்சி வலுத்துக் கொண்டே போகும். இசை, நடிப்பு ஆகியவை எதற்குப் பயன்படுகின்றன? ஏதாவது ஒரு கருத்தை ஒரு சேதியைக் காட்டுவதற்கும், அதை மனதில் பதிய வைப்பதற்கும் அது வெறும் வாக்கியத்தில் இருப்பதை இசை இன்பத்தோடும், நடிப்பு இன்பத்தோடும் மனதிற்குள் புகுத்துவதற்கும் ஆகவே முக்கியமாய் இருந்து வருகின்றன." (குடிஅரசு' 19-2-1944) என தமிழிசை வளர வேண்டும் என ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றார்.

பெரியார் தன் வாழ்நாளில் எழுதிய கட்டுரைகள், தலையங்கங்கள், ஆற்றிய உரைகள் போன்றவற்றைப் முழுமையாக படிக்க வேண்டும் என்றால் பலருக்கும் முடியாத ஒன்று, அவ்வளவு இருக்கின்றது. அதனால் பெரியார் எழுத்துக்களை முழுமையாக வாசிக்க முடியாதவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு வரப்பிரசாதமாகும். இந்த புத்தகத்தின் ஒரே ஒரு குறை பல சொற்கள் பழைய சொற்களாக இருக்கின்றன. அதனை தற்காலத் தமிழர் புரிந்து கொள்ளும் வகையில் எளிமை படுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

பெரியார் இன்றும் என்றும்
960 பக்கங்கள், நல்லதாள்
விலை : ரூ. 300.00
விடியல் பதிப்பகம்
+914222576772.

தீர்ப்பு - ஃபிரான்ஸ் காஃப்கா


அது, வசந்த காலம் உச்சத்திலிருந்த ஒரு ஞாயிறு காலை. இளம் வியாபாரியான ஜார்ஜ்பெந்தெமன், ஆற்றின் அருகே பரந்து விரிந்திருந்த, பராமரிப்பின்றிப் பழுதடைந்திருந்த, நீண்ட வரிசையிலான சிறிய வீடுகளொன்றின் முதல் மாடியில் தன் அறையில் உட்கார்ந்திருந்தான். உயரத்தாலும் வண்ணத்தாலும் மட்டுமே வித்தியாசப்பட்டு, மற்றபடி ஒன்றுக்கொன்று துளி வேறுபாடுமின்றி அந்த வீடுகள் அமைந்திருந்தன. தற்சமயம் வெளிநாட்டில் வசித்துக் கொண்டிருக்கும் தன் பழைய நண்பனுக்கு அவன் அப்போதுதான் கடிதமொன்றை எழுதி முடித்துவிட்டு, கனவுப் பாங்கான பாணியில், மிக மெதுவாக, அதற்கான உறையில் அதைப் போட்டுவிட்டு, எழுது மேஜை மீது முழங்கைகளை ஊன்றியபடி, ஜன்னல்களின் வழியாக ஆற்றையும் பாலத்தையும் தொலைதூரக் கரையில் இளம்பசுமையோடு காணப்பட்ட குன்றுகளையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சொந்த நாட்டில் தனக்கு இருக்கக்கூடிய எதிர்கால வாய்ப்புகள் குறித்த அதிருப்தி காரணமாக, சில வருடங்களுக்கு முன்பு, ரஷ்யாவுக்கு ஓடிப் போய்விட்ட தன் நண்பனைப் பற்றி அவன் நினைத்துக் கொண்டிருந்தான். அவன் இப்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் புரிந்துவரும் தொழிலானது, ஆரம்பத்தில் செழித்திருந்தபோதிலும் பல காலமாக இறங்குமுகத்தில்தான் இருக்கிறதென்று, அவன் வருகையின் இடைவெளி அதிகரித்து, அவன் வருவதே அபூர்வமாகிவிட்ட தருணங்களில் குறைப்பட்டுக் கொண்டது விரயமாகிவிட்டது. குழந்தைப் பருவத்திலிருந்து ஜார்ஜ் நன்கு அறிந்திருந்த அவன் முகம், புதிதாய் வளர்த்திருந்த முழுமையான தாடியில் புதைந்து போகவில்லை என்றாலும் வித்தியாசமான தோற்றமளித்தது. உள்ளுறைந்திருக்கும் ஒரு நோயின் தடயமாக, அவனின் தோல் நிறம் மிகவும் மஞ்சளாக மாறிவிட்டிருந்தது. தனக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட பிரம்மச்சாரி வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு வாழ்வதற்கென்றே தன் சகநாட்டவர் வசிக்கும் காலனியுடன் சீரான தொடர்பு வைத்துக் கொள்ளாததோடு, ரஷ்யக் குடும்பங்களோடும் நெருங்கிய உறவேதும் கொள்ளாமல் தனித்திருப்பதாக அவன் கூறியிருந்தான்.

பக்கத்துணைகளின்றிப் பரிதவிக்கும் அத்தகையதோர் மனிதனுக்கு ஒருவன் என்னதான் எழுத முடியும்? அத்தகைய மனிதனுக்கு அனுதாபம் காட்டலாமே தவிர அவனுக்கு உதவி செய்ய முடியாது. சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்து வேரூன்றிக் கொள்வதோடு, மீண்டும் பழைய நட்புகளைப் புதுப்பித்துக் கொண்டு - அவ்வாறு அவனைச் செய்ய விடாமல் தடுக்கக் கூடியதாக எதுவுமில்லை - நண்பர்கள் உதவியைச் சார்ந்திருக்கும்படி அவனுக்கு ஒருவன் ஆலோசனை கூற முடியுமா? ஆனால் அப்படிச் சொல்வதானது, அவன் இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் திசை தப்பிவிட்டதால், வழி தவறிச் சென்று மனம் திருந்தித் திரும்பி வந்தவனாக அவனை எல்லோரும் வியந்து பார்ப்பதை ஏற்றுக்கொண்டு, சொந்த நாட்டிலேயே வெற்றிகரமானவர்களாகவும் குடும்ப வாழ்வைச் செம்மையாக நடத்துபவர்களாகவும் இருக்கும் தராதரம் அறிந்த அவனுடைய நண்பர்களின் வழிகாட்டுதலின்படி, வளர்ந்துவிட்ட பெரியதோர் குழந்தையாகத் தன்னைப் பாவித்துக் கொண்டு நடந்துகொள்ள வேண்டுமெனச் சொல்வதாக ஆகிவிடும். இதை மிகக் கனிவாகச் சொன்னாலும் கடுமையாகவே தெரியும். இதெல்லாம் ஒருபுறமிக்க, அந்த அளவுக்குச் சிரமமெடுத்து அவனை வற்புறுத்தினாலும் அந்த நோக்கம் நிறைவேறும் என்பது என்ன நிச்சயம்? அவனைத் தன் சொந்த நாட்டுக்கு வர வைப்பதே கூட சாத்தியமில்லாமல் போகலாம்; தன் சொந்த நாட்டின் வணிகப் போக்கோடு தற்சமயம்தான் தொடர்பிழந்துவிட்டதாக அவனே சொல்லியிருக்கிறான். அதன்பிறகு, அவன் வெளிநாட்டில் ஒரு அந்நியனாகவே தனித்து விடப்படுவதோடு மட்டுமல்லாமல், நண்பர்களின் ஆலோசனைகளினால் மனம் நொந்துபோய், நட்பு பாராட்டிய அவர்களிடமிருந்து முன்னைவிடவும் ஒதுங்கும் படியாக வேறு ஆகிவிடும். ஆனால், அவர்களின் ஆலோசனையை அவன் ஏற்றுக்கொண்டுவிட்ட பின்பு, ஒருவேளை அவனால் சொந்த நாட்டில் முரண்டு காரணமாக என்றில்லை, சந்தர்ப்பங்களின் ஆற்றல் காரணமாகத் தன்னைப் பொருத்திக் கொள்ள முடியாது போய்விடுமானால், நண்பர்களோடு ஒத்துப்போகவும் முடியாமல் அவர்களிடமிருந்து ஒதுங்கவும் முடியாமல் அவமானத்துக்கு ஆளாகி விடுவானென்றால், இனி ஒருபோதும் தனக்கென்று நாடோ நண்பர்களோ இல்லையென்று உணரும்படி ஆகிவிடுமென்றால், அவன் இப்போது இருக்கிறபடியே வெளிநாட்டில் இருந்துவிடுவது அவனுக்கு உகந்ததாகாதா? இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால் சொந்த நாட்டில் அவன் வெற்றிகரமானதோர் வாழ்க்கையை நடத்துவான் என ஒருவனால் எப்படி நிச்சயமாகக் கருத முடியும்?

இத்தகைய காரணங்களினாலேயே, அவனோடு தொடர்பு வைத்துக்கொள்ள விரும்பும் ஒருவனால், மிக லேசாகத் தெரிந்த ஒருவரிடம் சொல்ல முடிவது போலக்கூட எத்தகைய உண்மையான செய்திகளையும் அவனுக்குத் தெரியப்படுத்தமுடியாது. அவன் கடைசியாக வந்து மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அதற்கு அவன், ரஷ்யாவின் அரசியல் நிலைமை மிகவும் ஸ்திரமற்றியிருக்கிறது என்றும் லட்சக்கணக்கான ரஷ்யர்களை வெளி நாடுகளுக்கு அமைதியாகப் பயணம் செய்ய அனுமதிக்கும் அதேசமயம் ஒரு மிகச் சிறிய வியாபாரியைச் சில நாள்களுக்கு வெளியில் செல்லக்கூட அனுமதிக்கவில்லை என்றும் நொண்டிச் சமாதானம் சொன்னான். ஆனால் இந்த மூன்று வருடங்களில் ஜார்ஜின் வாழ்நிலையில் பல மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன. இரண்டு வருடங்களுக்கு முன்பு அவனுடைய அம்மா இறந்துவிட்டாள்; அதிலிருந்து அவனும் அவன் தந்தையும் வீட்டைச் சேர்ந்து பகிர்ந்துகொண்டார்கள். இவ்விஷயம் அவனுடைய நண்பனுக்குத் தெரிவிக்கப்பட்டு, அவனும் தன் அனுதாபத்தை வறட்டுத்தனமான வார்த்தைகளால் அமைந்த ஒரு கடிதம் மூலம் தெரிவித்திருந்தான். அப்படியான ஒரு சம்பவம் தரக்கூடிய வேதனையைத் தூரதேசத்திலிருந்து உணர முடியாது என்ற முடிவுக்கே இதிலிருந்து வர முடிகிறது. அந்தச் சமயத்திலிருந்து, எது எப்படியிருந்தபோதிலும், வியாபாரத்திலும் சரி, மற்ற எல்லா விஷயங்களிலும் சரி, ஜார்ஜ் மிகுந்த முனைப்போடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.

ஒருவேளை, அம்மா உயிரோடிருந்த வரை தொழில்ரீதியான ஒவ்வொரு விஷயத்திலும் தனதான வழிமுறைகளைத் தந்தை வலியுறுத்திக் கொண்டிருந்ததால், சுயமாய் முயற்சிகளெடுத்துத் தன்னை வளர்த்துக் கொள்ள அவனுக்கு முடியாமல் போயிருக்கலாம். அம்மா இறந்ததற்குப் பிறகு, தந்தை தொழிலில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாலும் அவரின் தீவிரம் மட்டுப்பட்டிருந்தது காரணமாக இருக்கலாம்; ஒருவேளை அது, பெரும்பாலும், தற்செயலாகக் கூடிவந்த நல்ல காலத்தின் பாற்பட்டதாக இருக்கலாம். அநேகமாக இதுதான் அதிகப் பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது. எதுவாக இருந்தாலும், இந்த இரண்டு வருடங்களில் தொழில் சற்றும் எதிர்பாராத வகையில் வளர்ச்சி அடைந்தது; பணியாளர் எண்ணிக்கை இரு மடங்காகியது; விற்பனை ஐந்து மடங்காகப் பெருகிறது; மேலும் அபிவிருத்தி அடைவதற்கான சாத்தியங்கள் அண்மையில் இருக்கின்றன- சந்தேகமே இல்லை.

ஆனால், இந்த வளர்ச்சி பற்றிய எவ்வித முகாந்திரத்தையும் ஜார்ஜின் நண்பன் அறிந்திருக்கவில்லை. முந்தையை வருடங்களில், கடைசி முறையாக அது அவனின் அனுதாபக் கடிதத்திலாக இருக்கலாம் - ஜார்ஜை ரஷ்யாவுக்கு வந்துவிடும்படி அவன் வற்புறுத்திக் கொண்டிருந்தான். குறிப்பாக, ஜார்ஜின் தொழிற்கிளை அங்கு வெற்றிகரமாக அமைவதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக முன்வைத்திருந்தான். ஜார்ஜ் தற்சமயம் எட்டியிருக்கும் எல்லையோடு ஒப்பிடும்போது, அவன் எடுத்துக்காட்டியிருந்த கணக்குகள் கடுகளவே. எனினும், தன் தொழிலின் வெற்றி குறித்து நண்பனுக்குத் தெரியப்படுத்த அவன் தயங்கினான். நடந்து முடிந்தவற்றை இப்போது தெரியப்படுத்தினால் அது நிச்சயம் விசித்திரமாகவே படும்.

ஆக, அமைதியான ஞாயிற்றுக்கிழமையன்று ஒருவன் எதையாவது சும்மா யோசித்துக் கொண்டிருக்கும்போது, மேலெழுந்த வாரியாக எழும் நினைவுகளான, முக்கியத்துவமற்ற வம்பு விவகாரங்களையே தன் நண்பனுக்குத் தெரிவிப்பதென்று அவன் வரையறுத்துக் கொண்டிருந்தான். தன் நண்பன், தனது சொந்த ஊர் பற்றி, இந்த நீண்ட இடைவெளியில், தன் விருப்பத்திற்கேற்ப எப்படியெல்லாம் கற்பனைக் கோட்டை எழுப்பியிருப்பானோ அதற்குக் குந்தகம் நேராமல் பார்த்துக் கொள்வதையே அவன் விரும்பினான். அதற்கேற்ப அவன், தன் நண்பனுக்கு, சற்றே விரிவாக எழுதிய மூன்று வெவ்வேறு கடிதங்களில் எவ்வித முக்கியத்துவமுமற்ற ஒருவனுக்கும், அது போன்றதொரு பெண்ணுக்கும் ஏற்பாடாகியிருந்த நிச்சயதார்த்தம் குறித்து மூன்று முறையும் எழுதினான். இதுவரையான அவனது தீர்மானங்களுக்கு முற்றிலும் மாறாக, அவனுடைய நண்பன் இந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சி குறித்துக் கொஞ்சம் ஆர்வம் காட்ட ஆரம்பித்தான்.

எனினும், ஜார்ஜ் இப்படியான விஷயங்களை எழுத முன் வந்தானே தவிர, ஃப்ராவ்லீன் ஃப்ரிதா பிராண்டென் ஃபெல்டு என்ற வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணோடு தனக்கு ஒரு மாதத்துக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்து விட்டதைத் தெரிவிக்க முன்வரவில்லை. அவன், தன் மணப்பெண்ணிடம், இந்த நண்பனைப் பற்றியும் பரிமாற்றங்களின் மூலம் அவர்களுக்கிடைய உருவாகியிருந்த விசித்திரமான உறவு பற்றியும் அவ்வப்போது பகிர்ந்துகொண்டான். "ஆக, அவர் நம்முடைய திருமணத்துக்கு வரமாட்டார்'' என்றாள் அவள். "எனினும், உங்கள் நண்பர்கள் அனைவரையும் பற்றித் தெரிந்துகொள்ள எனக்கு உரிமை இருக்கிறது.'' "என்னைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்'' ஜார்ஜ் பதில் சொன்னான். "நான் அவனுக்குத் தொந்தரவு தர விரும்பவில்லை. ஒருவேளை அவன் வரக்கூடும், குறைந்தபட்சம் நான் அப்படி நினைக்கவாவது செய்கிறேன். ஆனால் தன்னைப் பிடித்து இழுத்து வந்துவிட்டதாகத்தான் அவன் நினைப்பான். மேலும், அவன் அதற்காக வருத்தப்படுவான்; ஒருவேளை அவன் என்மீது பொறாமை கொள்ளவும் கூடும்; நிச்சயம் அவன் அதிருப்தி கொள்வான். தன் அதிருப்தி குறித்து எதுவும் செய்ய இயலாத நிலையில் அவன் தனியனாகவே திரும்பிப் போக வேண்டியிருக்கும். தனியன் - அதற்கு என்ன அர்த்தமென்று உனக்குத் தெரியுமா?'' "அதுசரி, ஆனால் நம் திருமணம் பற்றி வேறு எந்த வகையிலாவது அவர் கேள்விப்படமாட்டாரா?'' "எனனால் அதைத் தடுக்க முடியாது என்பதென்னவோ உண்மைதான்; ஆனால் அவன் வாழும் விதத்தைப் பார்க்கும்போது அநேகமாக அப்படியேதும் நடப்பதற்கு வாய்ப்பில்லை.'' "உங்கள் நண்பர்கள் அப்படியிருக்கும்பட்சத்தில், ஜார்ஜ், நீங்கள் ஒருபோதும், நிச்சயதார்த்தம் செய்துகொண்டிருக்கக்கூடாது.'' "அது சரி, ஆனால் அதற்கு நம் இருவரையும் தானே குறை சொல்ல வேண்டும். இப்போது என்னால் வேறொன்றும் செய்ய முடியாது.'' அதன் பிறகு, அவனின் முத்தங்களால் வேகவேகமாக மூச்சு வாங்கிய அவள், "எல்லாமே ஒன்றுதான்; நானும்கூட மனம் குலைந்துதான் இருக்கிறேன்.'' ஒருவேளே, தானே தன் நண்பனுக்குத் தகவல் தெரிவித்தாலும் அதனால் தனக்கொன்றும் தொந்தரவு வந்துவிடாது என்று அவன் நினைத்தான். "என் சுபாவம் அப்படி, நான் எப்படி இருக்கிறேனோ அப்படியேதான் அவன் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். "அவனுக்கு ஏற்றபடி என்னை நான் வேறுவிதமாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியாது.''

ஆனால், உண்மை என்னவென்றால், அந்த ஞாயிற்றுக்கிழமை காலை, அவன் எழுதிய நீண்டதோர் கடிதத்தில் தன் நிச்சயதார்த்தம் பற்றித் தன் நண்பனுக்கு இத்தகைய வார்த்தைகளில் தெரியப்படுத்தி இருந்தான்: "ஒரு நல்ல செய்தியைக் கடைசியாக எழுதலாமென்று இருந்தேன். ஃப்ராவ்லீன் ஃப்ரிதா பிராண்டென்ஃபெல்டு என்ற வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணோடு எனக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. நீ ஊரை விட்டுப் போய் வெகு காலத்துக்குப் பின் இங்கு வசிக்க வந்தவள் அவள். எனவே, அவளைப் பற்றி உனக்கு எதுவுமே தெரிந்திருக்காது. அவளைப் பற்றி மேலும் பல விஷயங்களைச் சொல்ல பின்னர் அவகாசமிருக்கும். நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்பதை மட்டும் இன்று சொல்கிறேன். உன்னையும் என்னையும் பொறுத்தவரை நம் உறவில் ஏற்பட்டிருக்கும் ஒரே மாறுதல், மிகச் சாதாரணமானவனாய் இருந்ததற்குப் பதிலாக, ஒரு சந்தோஷமான நண்பனாக இன்று நான் உன்னில் இருக்கிறேன் என்பதுதான். இது ஒருபுறமிருக்க, நான் மணக்கவிருக்கும் பெண், தன் உளம் கனிந்த வாழ்த்துகளை உனக்குத் தெரிவிக்கிறாள். மேலும், அவளே உனக்கு வெகு விரைவில் கடிதம் எழுத இருக்கிறாள். இதன் மூலம் நீ ஒரு உண்மையான தோழியைப் பெறுகிறாய். ஒரு பிரமச்சாரிக்கு இதைவிட வேறென்ன வேண்டும். எங்களைப் பார்ப்பதற்கு உன்னால் வர முடியாது என்பதற்கான பல்வேறு காரணங்களையும் நான் அறிவேன். ஆனால் எல்லாத் தடைகளையும் தகர்த்தெறிந்து விட்டு நீ இங்கு வருவதற்கு இது ஒரு சரியான தருணமாக அமையாதா? எனினும், என்னவாகவும் இருக்கட்டும், உன்னுடைய சொந்த நலன்களைத் தவிர வேறெதையும் பொருட்படுத்தாது, உனக்கு எது நல்லதென்று படுகிறதோ அதையே செய்.''

ஜார்ஜ் இக் கடிதத்தைத் தன் கையில் வைத்துக்கொண்டு, எழுது மேஜையின் முன் முகம் ஜன்னலைப் பார்த்துத் திரும்பியிருக்க, வெகுநேரம் உட்கார்ந்திருந்தான். தெருவில் கடந்துபோன அறிமுகமான ஒருவர் அவனைப் பார்த்துக் கையசைத்ததை அவன் வெறுமனே புன்சிரிப்பின்றி ஏற்றுக்கொண்டான்.

கடைசியாக அவன், அந்தக் கடிதத்தைத் தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு, அறையைவிட்டு வெளியேறி, சிறிய தாழ்வாரத்தைக் கடந்து, பல மாதங்கள் அவன் நுழைந்திராத, தன் தந்தையின் அறைக்குள் சென்றான். அவன் தினமும் வியாபார ஸ்தலத்தில் தன் தந்தையைப் பார்ப்பதாலும், அவர்கள் இருவரும் ஒரு உணவு விடுதியில் ஒன்றாகவே மதிய உணவைச் சாப்பிடுவதாலும் உண்மையில் அங்கு செல்ல அவனுக்கு எந்தவித அவசியமும் இருக்கவில்லை. மாலை நேரத்தை அவர்கள் தங்கள் விருப்பப்படி கழிப்பார்கள். பெரும்பாலும் , ஜார்ஜ் தன் நண்பர்களோடு வெளியில் செல்வான். சமீப நாட்களாக அவன் தன் மணப் பெண்ணைச் சந்திக்கச் சென்றான். மற்றபடி, பொதுவாக அவர்கள், வீட்டின் பொது அறையில் அவரவரின் செய்தித்தாளோடு சிறிது நேரம் அமர்ந்திருப்பார்கள்.

சூரிய வெளிச்சம் நிறைந்த அந்தக் காலை நேரத்தில்கூட, தந்தையின் அறை இருட்டாக இருந்தது ஜார்ஜ்க்கு வியப்பளித்தது. குறுகலான வராந்தாவுக்கு மறுபுறமிருந்த உயரமான சுவரும் சேர்ந்து அந்த அறையில் இருளை நிரப்பியிருந்தது. ஜார்ஜின் இறந்துபோன அம்மாவின் பல்வேறு ஞாபகார்த்தச் சின்னங்களைத் தாங்கிய ஜன்னலருகே ஒரு மூலையில் உட்கார்ந்தபடி அவனுடைய தந்தை பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். பார்வைக் கோளாறைச் சமாளிக்கும் வகையில் அவர் அந்தப் பத்திரிகையைத் தன் கண்களினருகே ஒரு பக்கமாகச் சாய்த்துப் பிடித்துக் கொண்டிருந்தார். மேஜையின் மீது அவரின் காலை உணவு, அதன் பெரும்பகுதி சாப்பிடப்படாமல் மிச்சம் வைக்கப்பட்டிருந்தது.

"ஆ, ஜார்ஜ்'' என்றபடி அவனுடைய தந்தை அவனைச் சந்திப்பதற்காக சட்டென எழுந்தார். அவர் நடந்து வந்தபோது, அவருடைய கனத்த அங்கி பிரிந்து அசைந்தாடியபடி அவரைச் சூழ்ந்தது. "என் தந்தை இப்போதுகூட ஒரு பிரும்மாண்டமான மனிதர்தான்'' என்று ஜார்ஜ் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

"இங்கு இருள் சகிக்க முடியாதபடி இருக்கிறது'' என்று அவன் சத்தமாகச் சொன்னான்.

"ஆம், இருட்டாகத்தான் இருக்கிறது'' அவனுடைய தந்தை பதில் சொன்னார்.

"மேலும் நீங்கள் ஜன்னலை வேறு சாத்தியிருக்கிறீர்கள்.''

"அது அப்படி இருப்பதையே நான் விரும்புகிறேன்.''

ஏதோ தான் முன்னர் சொன்னதன் தொடர்ச்சியாகவே சொல்வதுபோல, "நல்லது, வெளியே மிகவும் கதகதப்பாக இருக்கிறது'' என்று கூறியபடி ஜார்ஜ் உட்கார்ந்தான்.

அவனுடைய தந்தை காலை உணவுத் தட்டுகளை அப்புறப்படுத்தி அவற்றை உரிய இடத்தில் அடுக்கி வைத்தார்.

அந்த வயதான மனிதரின் சலனங்களை வெறுமையாகத் தொடர்ந்து கவனித்தபடி ஜார்ஜ் சொல்லத் தொடங்கினான்: "என் நிச்சயதார்த்தம் பற்றிய தகவலை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு நான் இப்போது தெரியப்படுத்த இருப்பதை உங்களிடம் சொல்லிவிடவே உண்மையில் நான் விரும்பினேன்.'' தன் பாக்கெட்டிலிருந்து கடிதத்தத்தைச் சற்றே வெளியிலெடுத்துவிட்டு மீண்டும் அதை உள்ளேவிட்டுக் கொண்டான்.

"செயின்ட் பீட்டர்ஸ்பர்கிற்கா?'' தந்தை கேட்டார்.

"அங்குள்ள என் நண்பனுக்கு.'' தந்தையின் கண்களைச் சந்திக்க முயற்சித்தவாறு ஜார்ஜ் சொன்னான். வியாபார நேரங்களில் அவர் முற்றிலும் வேறு மாதிரி இருப்பார் என்று அவன் நினைத்தான். தன் கைகளை குறுக்காக மடித்துக்கொண்டு எவ்வளவு நிதானமாக அவர் இங்கு உட்கார்ந்திருக்கிறார்.

"ஓ, அப்படியா. உன் நண்பனுக்கா'' என்று அவனுடைய தந்தை விநோதமான அழுத்தம் கொடுத்துக் கேட்டார்.

"ஆம், தந்தையே. என் நிச்சயதார்த்தம் குறித்து முதலில் நான் அவனுக்குச் சொல்ல விரும்பவில்லை. அவன் நிலைமையைக் கணக்கில் கொண்டதுதான் இதற்கான ஒரே காரணம். அவன் அசாதரணமான மனிதன் என்பது உங்களுக்கே தெரியும். என் நிச்சயதார்த்தம் பற்றி வேறு யாரேனும் அவனுக்குச் சொல்லி விடுவார்கள் என்று எண்ணினேன். அது அப்படி நடக்க முடியாத அளவுக்கு அவன் அசாத்தியமான நபர் என்ற போதிலும் - அப்படி நடப்பதை என்னால் தடுக்க முடியாது - நானாக அவனிடம் சொல்லப் போவதில்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.''

"நீ இப்போது உன் மனதை மாற்றிக்கொண்டுவிட்டாய், இல்லையா?'' என்றபடி அவனுடைய தந்தை, தனது கனத்த செய்தித்தாளை ஜன்னல் விளிம்பில் வைத்துவிட்டு அதன் மீது தன் கண்ணாடியை வைத்து அதை ஒரு கையால் பொத்திக் கொண்டார்.

"ஆம், அதுபற்றி நான் மறுபடியும் யோசித்துப் பார்த்தேன். அவன் என்னுடைய நல்ல நண்பனாக இருக்கும்பட்சத்தில், என் நிச்சயதார்த்தம் எனக்கு சந்தோஷம் தந்திருப்பதுபோல அவனையும் சந்தோஷப்படுத்தும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். எனவே, இனியும் அவனுக்குத் தெரியப்படுத்துவதை நான் தள்ளிப் போடக்கூடாது. ஆனால் அதை அஞ்சல் செய்வதற்கு முன்னால் உங்களுக்கு அது தெரிந்திருக்க வேண்டுமென விரும்பினேன்''

"ஜார்ஜ்'' தன் பொக்கை வாயை விரித்தபடி, அவனுடைய தந்தை சொன்னார். "நான் சொல்வதைக் கேள்! இந்த விஷயம் குறித்து என்னுடன் கலந்து பேச நீ வந்திருக்கிறாய். நீ வைத்திருக்கும் மதிப்பை அது உணர்த்துகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீ என்னிடம் முழு உண்மையையும் சொல்லாத பட்சத்தில் இது ஒரு விஷயமே இல்லை சும்மா இருப்பதைவிட இது மோசமானது. இங்குக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லாத விஷயங்களை எல்லாம் நான் கிண்டிக் கிளற விரும்பவில்லை. நம் அன்பான அம்மா இறந்து போனதற்குப் பிறகு, முறையற்ற பல காரியங்கள் நடந்திருக்கின்றன. அவற்றைப் பற்றி நாம் பேசவேண்டிய நேரம் வரும். நாம் எதிர்ப்பார்ப்பதை விடவும் சீக்கிரமாகவே அது வரக்கூடும். எனக்குத் தெரியவராமல் வியாபாரத்தில் பல காரியங்கள் நடக்கின்றன; என் முதுகுக்குப் பின்னால் அவை நடக்காமல் இருக்கலாம். என் முதுகுக்குப் பின்னால் நடக்கின்றன என்று நான் சொல்லப்போவதில்லை. இனியும் என்னால் காரியங்களோடு போட்டி போட்டுக்கொண்டிருக்க முடியாது; என் ஞாபக சக்தியும் மங்கி வருகிறது. இனி மேற்கொண்டு பல்வேறு காரியங்களை என்னால் கண்காணிக்க முடியாது. அதற்குக் காரணம், முதலாவதாக இயற்கையின் கதி; இரண்டாவதாக, நம் அன்பான அம்மாவின் மரணம் உன்னைவிடவும் என்னை அதிகமாகப் பாதித்திருக்கிறது என்பது. ஆனாலும் நாம் இதைப் பற்றி, இந்தக் கடிதத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதால் நான் உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். ஜார்ஜ், என்னை ஏமாற்றாதே. உனக்கு அப்படியொரு நண்பன் உண்மையிலேயே செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் இருக்கிறானா?''

தர்மசங்கடத்துக்குள்ளான நிலையில் ஜார்ஜ் எழுந்தான். "என் நண்பர்களை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம். ஓராயிரம் நண்பர்கள் சேர்ந்தாலும் என்னைப் பொறுத்தவரை, அவர்கள் என் தந்தைக்கு ஈடாக மாட்டார்கள். நான் என்ன நினைக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உங்களைக் கவனித்துக் கொள்வதில் போதுமான அக்கறை காட்டுவதில்லை. ஆனால் முதுமையில் கண்டிப்பாகக் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் இல்லாமல் என்னால் வியாபாரத்தைக் கவனிக்க முடியாது; அது உங்களுக்கே நன்றாகத் தெரியும். ஆனால் அந்த வியாபாரம் உங்கள் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கும் என்றால் நாளைக்கே அதை ஒரேடியாக இழுத்து மூடிவிட நான் தயாராக இருக்கிறேன். ஆனால் அதனால் ஒரு பிரயோஜனமும் ஏற்படப் போவதில்லை. உங்கள் வாழ்க்கை முறையில் நாம் ஒரு மாறுதலை ஏற்படுத்தியாக வேண்டும். ஒரு தீவிரமான மாறுதல். நீங்கள் இங்கு இருட்டில் உட்கார்ந்திருக்கிறீர்கள். வரவேற்பறையில் இருந்தால் போதுமான வெளிச்சம் கிடைக்கும். உங்களின் வலிமையை முறையாகப் பேணுவதற்குப் பதில் காலை உணவாக ஏதோ கொஞ்சம் கொறிக்கிறீர்கள். ஜன்னலை மூடிவிட்டு உட்கார்ந்திருக்கிறீர்கள். ஆனால் காற்று உங்களுக்கு மிகவும் புத்துணர்ச்சி அளிக்கும், இல்லை அப்பா! நான் மருத்துவரை வரவழைக்கிறேன். நாம் அவர் சொல்லுகிறபடி கேட்போம். நாம் உங்கள் அறையை மாற்றுவோம். நீங்கள் முன்னறைக்குச் சென்று விடுங்கள்; நான் இங்கு வந்துவிடுகிறேன். உங்களுக்கு மாற்றம் தெரியாது; உங்கள் பொருள்களனைத்தும் உங்களோடு வந்துவிடும். ஆனால் அதையெல்லாம் செய்யப் பின்னர் அவகாசமிருக்கிறது.

இப்போது கொஞ்ச நேரம் உங்களைப் படுக்க வைக்கிறேன். உங்களுக்குக் கொஞ்சம் ஓய்வு அவசியம். வாருங்கள், உங்கள் பொருள்களை எடுத்துக்கொள்ள நான் உதவி செய்கிறேன். என்னால் அதைச் செய்ய முடிவதை நீங்கள் பார்க்கலாம். அல்லது, உடனடியாக நீங்கள் முன்னறைக்குப் போவதாக இருந்தால், இப்போதைக்கு அங்கு நீங்கள் என் படுக்கையில் படுத்துக் கொள்ளலாம். அதுதான் மிகச் சரியானதாக இருக்கும்.''

குலைந்து கிடந்த நரைமுடிகளோடு தலை தாழ்த்தியிருந்த தந்தைக்கு நெருக்கமாக ஜார்ஜ் நின்றுகொண்டிருந்தான்.

சற்றும் அசையாமல், மெதுவான குரலில், "ஜார்ஜ்'' என்றார் தந்தை.

உடனடியாக ஜார்ஜ் தந்தைக்கருகே மண்டியிட்டான். சோர்வுற்றிருந்த அந்த வயதான மனிதரின் முகத்தை அவன் பார்த்தபோது, மிகப் பெரிய கருவிழிகள் கண்களின் ஓரங்களிலிருந்து தன்னை நிலைகுத்திப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தான்.

"உனக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் ஒரு நண்பன் இருக்கிறான். நீ எப்போதுமே காலை வாரி விடுபவன்; என் காலை வாரவும் நீ தயங்கவில்லை. உனக்கு அங்கு எப்படி ஒரு நண்பன் இருக்க முடியும்! நான் அதை நம்பவில்லை.''

"பழையவற்றைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள், அப்பா'' என்றான் ஜார்ஜ். நாற்காலியிருந்து அவரை எழும்பி நிற்கச் செய்து, அவருடைய அங்கியைச் கழற்றியபோது அவர் பலஹீனமாய் நின்றுகொண்டிருந்தார். "என்னுடைய நண்பன் கடைசியாக நம்மைப் பார்க்க வந்து அநேகமாக மூன்று வருடங்களாகப் போகின்றன. உங்களுக்கு அவனை அவ்வளவாகப் பிடிக்காது என்பது எனக்கு நினைவிருக்கிறது. இரண்டு முறையாவது, உண்மையில் அவன் அப்போது என்னோடு என் அறையில்தான் இருந்தான் என்றபோதிலும், அவனைப் பார்க்க விடாது உங்களைத் தடுத்திருக்கிறேன். அவனை உங்களுக்குப் பிடிக்காது என்பதை நான் மிகச் சரியாகவே புரிந்துகொண்டிருந்தேன்; என் நண்பனுக்கென்று சில சுபாவங்கள் இருக்கின்றன. ஆனால் அதன் பிறகு, பிந்தைய நாட்களில் நீங்கள் அவனோடு மிக நன்றாகவே பழகினீர்கள். நீங்கள் அவன் சொல்வதைக் கேட்டபடி தலையசைத்தது மட்டுமல்லாமல், அவனிடம் கேள்விகளும் கேட்டபோது நான் பெருமிதமடைந்தேன். நீங்கள் மறுபடியும் யோசித்துப் பார்த்தால் நிச்சயம் அது உங்கள் நினைவுக்கு வரும். ரஷ்யப் புரட்சி பற்றி மிகவும் ஆச்சரியம் தரக்கூடிய கதைகளை அவன் நமக்குச் சொல்வது வழக்கம். உதாரணமாக ஒரு முறை அவன் வியாபார நிமித்தமாக கீவ்வுக்குப் போனபோது அங்கு கலவரம் தொடங்கியிருந்தது. ஒரு மதகுரு பால்கனியில் நின்றுகொண்டு, தன் உள்ளங்கையில் ஒரு பெரிய சிலுவையைக் கீறி, ரத்தம் தோய்ந்த கையை உயர்த்தி, ஜனத்திரளிடம் வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்ததை அவன் பார்த்தது.

அதற்குப் பின்னர், நீங்களேகூட அந்தக் கதையை ஓரிரு முறை கூறியிருக்கிறீர்கள்.''

இதற்கிடையே, ஜார்ஜ் தன் தந்தையைத் திரும்பவும் மெதுவாகத் தாழ்த்தி உட்கார வைத்துவிட்டான். மேலும், லினன் உள்ளாடைக்கு மேலாக அவர் அணிந்திருந்த கம்பளி உள்ளாடைகளையும், காலுறைகளையும் கவனமாகக் கழற்றினான். அந்த உள்ளாடை சுத்தமாக இல்லாததற்கு தனது உதாசீனமே காரணமென்று தன்னைத்தானே கடிந்து கொண்டான். தன் தந்தை உள்ளாடைகளை மாற்றிக்கொள்ளும் வகையில் கவனம் எடுத்துக் கொள்வதைத் தன் கடமையாகக் கொண்டிருந்திருக்க வேண்டும். எதிர்காலத்தில் தன் தந்தைக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது பற்றி அவன் தன் மணப்பெண்ணிடம் இதுவரை வெளிப்படையாகப் பேசிக் கொள்ளவில்லை.

அந்த வயதான மனிதர் அந்தப் பழைய வீட்டிலேயே தொடர்ந்து தனியாக வசிப்பார் என்று அவர்கள் தங்களுக்குள்ளாக நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது, எதிர்காலத்தில் தான் குடிபுக இருக்கும் தன்னுடைய இடத்துக்கு அவரை அழைத்துக்கொண்டு போய்விட வேண்டுமென அவன் தீர்மானமான உடனடி முடிவொன்றை எடுத்தான். அங்கே தன் தந்தையை வெகுவாகச் சீராட்டிப் பராமரிக்க வேண்டுமென்று அவன் எடுத்த முடிவானது மிக உன்னிப்பாக அவதானித்தபோது, காலம் கடந்து எடுக்கப்பட்டதாகவே கிட்டத்தட்ட தோன்றியது.

அவன் தன் தந்தையைப் படுக்கைக்குத் தூக்கிச் சென்றான். அந்த வயதான மனிதரைத் தன் நெஞ்சோடு தாங்கி, படுக்கையை நோக்கி சில எட்டுகள் தூக்கிச் சென்றபோது, அவர் தன் கடிகாரம் செயினுடன் விளையாடிக் கொண்டிருந்ததைக் கவனித்த அவன் அச்சமடைந்தான். அவரைப் படுக்கையில் கிடத்த அவனால் ஒரு கணம் முடியாமல் போகுமளவுக்கு அவர் கடிகாரச் செயினை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தார்.

ஆனால், அவர் படுக்கையில் படுத்துவிட்ட உடனே, எல்லாமே நல்லபடியாக நடந்துவிட்டதுபோல் தோன்றியது. அவர் தன்னைப் போர்த்திக் கொண்டதோடல்லாமல், போர்வையை வழக்கத்துக்கு மாறாக, தோளுக்கு மேலாக இழுத்து விட்டுக்கொண்டார். ஜார்ஜை நிமிர்ந்து கடுமையின்றிப் பார்த்தார்.

"நீங்கள் என் நண்பனை இப்போது நினைவுபடுத்திக் கொண்டிருப்பீர்கள் இல்லையா?'' என்று அவரை உற்சாகப்படுத்தும் வகையில் தலையசைத்தவாறே ஜார்ஜ் கேட்டான்.

கால்கள் சரியாகப் போர்த்தப்பட்டிருக்கின்றனவா என்பதைத் தன்னால் பார்க்க முடியாமலிருக்கிறது என்பதுபோல, "இப்போது நான் நன்றாகப் போர்த்தப்பட்டிருக்கிறேனா?'' என்று அவனுடைய தந்தை கேட்டார்.

"ஆக, படுக்கையின் கதகதப்பை உணரத் தொடங்கிவிட்டீர்கள்'' என்றான் ஜார்ஜ். மேலும், கம்பளியை அவரைச் சுற்றி இன்னும் நெருக்கமாகப் போர்த்திவிட்டான்.''

"நான் நன்றாகப் போர்த்தப்பட்டிருக்கிறேனா?'' என்று அவனுடைய தந்தை ஏதோ அதற்கான பதிலில்தான் எல்லாமே அடங்கியிருக்கிறது என்பதுபோல மீண்டுமொரு முறை கேட்டார்.

"கவலைப்படாதீர்கள். நீங்கள் நன்றாகப் போர்த்தப்பட்டிருக்கிறீர்கள்.''

"இல்லை!'' என்று கத்தியபடி அவனுடைய தந்தை, ஜார்ஜை பதில் பேசவிடாமல், ஒரு நொடியில் எல்லாவற்றையும் பறக்கடிக்கும் வகையில், கம்பளிகளைப் பலமாக உதறி எறிந்து விட்டு, குதித்தெழுந்து படுக்கையில் நிமிர்ந்து நின்றார். அவரை ஸ்திரப்படுத்துவதற்காக ஒரே ஒரு கை மட்டும் லேசாக உத்தரத்தைத் தொட்டது.

"எனக்குத் தெரியும், என் இளம் குருத்தே! நீ என்னை மூடி விட விரும்புகிறாய். ஆனால் நான் மூடப்படுவதற்கு இன்னும் வெகு காலம் இருக்கிறது. ஒருவேளை, இதுதான் என் கடைசித் துளி பலமென்றாலும் கூட உன்னைச் சமாளிக்க இதுவே அதிகம். உன் நண்பனை எனக்குத் தெரியும் என்பது உண்மைதான். அவன் எனக்கு மகனாகப் பிறந்திருக்க வேண்டும் என்று நான் மனதார நினைக்கிறேன். அதனால்தான் நீ இவ்வளவு வருடங்களாக அவனோடு ஒரு பொய்யான விளையாட்டு விளையாடி வந்திருக்கிறாய். வேறென்னவாக இருக்க முடியும்? அவனுக்காக நான் வருத்தப்படவில்லை என்று நீ நினைக்கிறாய்? அதன் காரணமாகத்தான் உன்னையே நீ உன் அலுவலகத்தில் பூட்டிக் கொள்ள வேண்டியதாயிற்று - தலைமையாளர் மிகவும் முக்கியமான அலுவலில் ஈடுபட்டிருக்கிறார். அவரை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது - அப்போதுதானே உன்னால் பொய்யான சிறு கடிதங்களை ரஷ்யாவுக்கு எழுத முடியும். ஆனால், நல்ல வேளையாக, மகனின் உள்நோக்கங்களை அறிந்துகொள்ள ஒரு அப்பாவுக்கு எவரும் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இப்போது அவனைக் கீழே தள்ளிய பிறகு, எந்த அளவுக்குத் தள்ளினால் அவன்மீது அமர்ந்து கொண்டு அவனை நகரவிடாமல் செய்ய முடியுமோ அந்த அளவுக்குத் தள்ளிவிட்ட பிறகு, என் அருமை மகன் திருமணம் செய்து கொள்ளத் தன் மனதைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறான்.''

தந்தை தன் மந்திர சக்தியால் உருவாக்கிய பிசாசை ஜார்ஜ் வெறித்துப் பார்த்தான். செயின்ட் பீட்டர்ஸ்பர்கிலிருக்கும் அவனுடைய நண்பன் - திடீரென அவனை அவனுடைய தந்தைக்கு நன்கு தெரிந்திருந்தது - முன் எப்போதும் தோன்றியிராத வகையில் இப்போது கற்பனையில் தெரிந்தான். ரஷ்யாவின் விரிந்து பரந்த பரப்பில் தோற்றுப் போனவனாகத் தெரிந்தான். சூறையாடப்பட்டுக் காலியாகக் கிடந்த கிடங்கின் வாசலில் அவனைக் கண்டான். சரக்கு அலமாரிகளின் சேதங்களுக்கிடையே, சிதறிக் கிடந்த மிச்சமீதி சரக்குகளுக்கிடையே வாயுக் குழாய்கள் நொறுங்கி வீழ்ந்துகொண்டிருக்க அவன் அப்படியே நின்று கொண்டிருந்தான். இவ்வளவு தொலை தூரத்துக்கு அவன் ஏன் போயிருக்க வேண்டும்!

"முதலில் நான் சொல்வதைக் கேள்!'' அவனுடைய தந்தை கத்தினார். எல்லாவற்றையும் எடுத்து வைப்பதற்காகப் படுக்கையை நோக்கி ஓடிய ஜார்ஜ், கிட்டத்தட்ட தடுமாறிய நிலையில், பாதி வழியில் நிற்க வேண்டியதாயிற்று.

"அவள் தன் பாவாடையைத் தூக்கியதற்காக'' அவன் தந்தை மீண்டும் தொடங்கினார்.

"அவள், அந்த அசிங்கமான பிறவி, தன் பாவாடையை இப்படித் தூக்கியதற்காக.'' அவளைப் போன்று பாவனை செய்தபடி, யுத்தத்தின்போது அவருக்குத் தொடையில் ஏற்பட்டிருந்த காயத்தை ஒருவரால் பார்க்க முடியுமளவுக்கு, தன் சட்டையை மிக

உயரமாகத் தூக்கினார்.

"அவள் தன் பாவாடையை இப்படித் தூக்கியதும் நீ அவளிடம் மயங்கியதோடு

மட்டுமல்லாமல் அவளோடு எவ்விதத் தொல்லையுமின்றி சுதந்திரமாக சல்லாபம் செய்வதற்காக உன் அம்மாவின் ஞாபகார்த்தத்துக்கு ஊறு விளைவித்ததோடு, உன் நண்பனுக்கும் துரோகம் இழைத்தாய்; உன் அப்பாவையும், அவரால் எழுந்து நடமாட முடியாதபடி படுக்கையில் கிடத்தினாய், ஆனால் அவரால் நடமாட முடியும்; முடியாதா

என்ன?''

எவ்வித உறுதுணையுமின்றி அவர் எழுந்து நின்று தன் கால்களை உதறிக் கொண்டார். அவரின் உள்ளொளி அவரைப் பிரகாசிக்கச் செய்தது.

ஜார்ஜ் ஒரு மூலையில், தந்தையிடமிருந்து எந்த அளவுக்கு விலகி நிற்க முடியுமோ அந்த அளவு தள்ளி, ஒடுங்கி நின்றான். மறைமுகத் தாக்குதலின்போது-பின்னாலிருந்தோ, மேலிருந்தோ நிகழும் திடீர்ப் பாய்ச்சலின்போது - தான் திகைத்துப் போய்விடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு சிறு அசைவையும் மிக உன்னிப்பாகக் கவனிக்கப் பழகிக்கொள்ள வேண்டுமென வெகு காலத்துக்கு முன்பு அவன் ஒரு தீர்மானம் எடுத்துக் கொண்டிருந்தான். இந்தக் கணத்தில் அவன் தன் பழைய மறந்துபோன தீர்மானத்தை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து திரும்பவும் மறந்து போனான் - ஊசிமுனையில் நூல் கோக்கும் ஒருவனைப் போல.

"ஆனால் அப்படியெல்லாம் உன் நண்பனுக்குத் துரோகம் இழைக்கப்பட்டு விடவில்லை'' என்று கத்தியபடியே அவனுடைய தந்தை அதை வலியுறுத்தும் வகையில் தன் ஆள்காட்டி விரலால் குத்திக் குத்திக் காட்டினார். "இங்கு, இந்த இடத்தில் அவனுக்குப் பதிலாக நானிருக்கிறேன்.''

"இதென்ன கோமாளித்தனம்.'' நறுக்கென்று பதில் சொல்வதை ஜார்ஜால் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தக் கணமே நடந்துவிட்ட தவறை உணர்ந்து நாக்கைக் கடித்துக் கொண்டான். அவன் கண்களில் பயம் தெரிந்தது. வேதனையில் முழங்கால்கள் தள்ளாடின.

"ஆம், நான் கோமாளித்தனம்தான் புரிகிறேன். கோமாளித்தனம்! அது ஒரு சரியான வெளிப்பாடு! மனைவியை இழந்துவிட்ட ஒரு பாவப்பட்ட கிழவனுக்கு வேறென்ன சௌகர்யம் எஞ்சியிருக்க முடியும்? சொல் - நீ பதில் சொல்லும்போது, உயிரோடிருக்கும் என் மகனாகவே இருந்து சொல் - விசுவாசமற்ற ஊழியர்களால் பீடிக்கப்பட்டு, எலும்பும் சதையுமாக வற்றிப்போய், பின்புற அறையில் கிடக்கும் எனக்கு வேறென்னதான் மிச்சமிருக்கிறது? ஆனால் என் மகனோ இந்த உலகினூடே பகட்டாய் நடைபோட்டு, நான் அவனுக்காகத் தயாரித்துக் கொடுத்திருந்த வணிக ஒப்பந்தங்களை முடித்துவிட்டு, வெற்றிக் களிப்பில் எக்காளமிட்டபடி, ஒரு மரியாதைக்குரிய வர்த்தகப் பிரமுகரின் இறுகிய முகத்தோடு தன் தந்தையிடமிருந்து கம்பீரமாக விலகிச் செல்கிறான்! நான் உன்னை நேசிக்கவில்லை என்றா நீ நினைக்கிறாய். நானா! நீ யாரிடமிருந்து குதித்து வந்தாய்?''

இப்போது அவர் முன்பக்கமாகச் சாய்ந்து விடுவார் என்று ஜார்ஜ் நினைத்தான். அப்படியே குப்புற விழுந்து அவர் தன்னைத் தானே சிதைத்துக் கொண்டால் என்ன! இந்த வார்த்தைகள் அவன் மனதிற்குள் சீறும் சப்தமாய் நுழைந்தன.

அவன் தந்தை முன்பக்கமாகச் சாய்ந்தபோதிலும் குப்புற விழவில்லை. அவர் எதிர்பார்த்தபடி ஜார்ஜ் கொஞ்சம்கூட அருகில் வராததால் தானாகவே தன்னை நிமிர்த்திக் கொண்டார்.

"நீ இருக்குமிடத்திலேயே இரு, உன் உதவி எனக்குத் தேவையில்லை! என்னருகே வருவதற்குரிய பலம் உனக்கிருப்பதாகவும், உன் சொந்த விருப்பத்தின் பேரிலேயே பின்னால் நின்று கொண்டிருப்பதாகவும் நீ நினைக்கிறாய். ரொம்பவும் நினைத்துக் கொள்ளாதே! நம் இருவரில் இப்பவும் நான்தான் அதிக பலசாலி. நான் மட்டுமே தனியாக இருந்திருந்தால் ஒதுங்கி வழி விட்டிருப்பேன்; ஆனால் உன் தாயார் அவளுடைய சக்தி முழுவதையும் எனக்குத் தந்திருப்பதால் நான் உன் நண்பனுடன் நல்ல தொடர்பு வைத்துக் கொண்டிருப்பதோடு, உன் வாடிக்கையாளர்களையும் இங்கே என் பாக்கெட்டில் வைத்திருக்கிறேன்.''

"அவர் தன் சட்டையில்கூட பாக்கெட்டுகள் வைத்துக் கொண்டிருக்கிறார்'' என்று ஜார்ஜ் தனக்குள் சொல்லிக் கொண்டான். மேலும், இந்தக் குறிப்பின் மூலம் உலகின் முன் அவரை ஒன்றுமில்லாதவராக ஆக்கிவிட முடியுமென்று நம்பினான். ஆனால் எல்லாவற்றையும் அவன் உடனுக்குடன் மறந்து கொண்டிருந்ததால், ஒரு கணம்தான் அப்படி

யோசித்தான்.

"நீ மட்டும் உன் மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு என் வழியில் குறுக்கிட முயற்சி செய், பார்க்கலாம்! உன்னிடமிருந்தே அவளை ஒதுக்கித் தள்ளிவிடுவேன். எப்படி என்பது உனக்குத் தெரியாது!''

நம்பிக்கையின்றி ஜார்ஜ் முகம் சுளித்தான். தன் வார்த்தைகளின் உண்மையை உறுதிப்படுத்தும் வகையில் ஜார்ஜ் இருந்த திசையை நோக்கி அவனுடைய தந்தை தலையை மட்டும் அசைத்தார்.

"உன் நிச்சயதார்த்தம் பற்றி உன் நண்பனுக்குத் தெரிவிக்கலாமா என்று என்னிடம் கேட்பதற்கு வந்ததாக நீ இன்று என்னிடம் எப்படி ஒரு விளையாட்டுக் காட்டினாய். அவனுக்கு முன்பே தெரியும்; முட்டாளே, அவனுக்கு எல்லாமே தெரியும்! நான் அவனுக்கு எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன் - என்னிடமிருந்து என் எழுதுபொருள்களை

எடுத்துவிட நீ மறந்துவிட்டாய். அதனால்தான் அவன் வருடக்கணக்காக இங்கு வரவில்லை; உனக்குத் தெரிந்திருப்பதை விட அவனுக்கு எல்லாமே நூறு மடங்கு நன்றாகத் தெரியும். தன் வலது கையில் என் கடிதங்களைப் படிப்பதற்காகப் பிடித்துக் கொண்டிருக்கும் அதே சமயம், தன் இடது கையால் அவன் உன் கடிதங்களைப்

பிரிக்காமலேயே கசக்கி எறிவான்!''

உற்சாக மிகுதியில் தன் தலைக்கு மேலாகக் கையை அசைத்தாட்டினார்.

"அவனுக்கு எல்லாமே ஆயிரம் மடங்கு நன்றாகத் தெரியும்!'' அவர் கத்தினார்.

"பத்தாயிரம் மடங்கு'' என்று தந்தையைக் கேலிக்குள்ளாக்கும் நினைப்பில் ஜார்ஜ் சொன்னான். ஆனால் அந்த வார்த்தைகள் அவன் நாவிலேயே மிகவும் மனப்பூர்வமானவையாக உருமாறி விட்டன.

"இது போன்றதொரு கேள்வியோடு நீ வர வேண்டும் என்பதற்காகத்தான் நான் பல வருடங்களாகக் காத்துக் கொண்டிருந்தேன்! நான் வேறெதிலாவது என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பேன் என்று நீ நினைக்கிறாயா? நான் என் பத்திரிகைகளைப் படிக்கிறேன் என்றா நீ நினைக்கிறாய்? பார்!'' அவர் எப்படியோ தன்னோடு படுக்கைக்கு எடுத்துக்கொண்டு வந்திருந்த ஒரு பத்திரிகைத் தாளை ஜார்ஜிடம் எறிந்தார். அதன் பெயரைக்கூட ஜார்ஜ்

கேள்விப்பட்டிராத அளவுக்கு அது ஒரு பழைய பத்திரிகை.

"நீ வளர்ந்து ஆளாவதற்குத்தான் எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டாய்! உன் அம்மா, சந்தோஷமான நாளைப் பார்க்காமலேயே இறக்க வேண்டியதாயிற்று. ரஷ்யாவில் உன் நண்பன் தூள் தூளாக நொறுங்கிக் கொண்டிருக்கிறான்; மூன்று வருடங்களுக்கு முன்பே தூக்கியெறிப்படும் அளவு மஞ்சளாகி விட்டிருந்தான். என்னைப் பொறுத்தவரை, நான் என்ன நிலையில் இருக்கிறேன் என்பதை நீயே பார்த்துக் கொண்டிருக்கிறாய். இதையெல்லாம் பார்க்க உனக்கு உன் தலையில் கண்கள் இருக்கின்றன!''

"ஆக, படுத்தபடியே எனக்காகக் காத்துக் கொண்டு இருந்திருக்கிறீர்கள்!'' ஜார்ஜ் கத்தினான்.

அவன் தந்தை இரக்கத்தோடு, முன்தீர்மானம் ஏதுமின்றிச் சொன்னார் : "நீ இதை விரைவில் சொல்ல விரும்புகிறாய் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது அது ஒரு விஷயமில்லை.'' பின்னர் உரத்த குரலில் : "ஆக உன்னைத் தவிரவும் உலகில் வேறென்ன எல்லாம் இருக்கின்றன என்பதை இப்போது நீ அறிந்து கொண்டிருப்பாய்; இவ்வளவு காலமும் நீ உன்னைப் பற்றி மட்டுமே தெரிந்து கொண்டிருந்தாய்! ஒன்றுமறியாக் குழந்தை! உண்மைதான், நீ அப்படித்தான். ஆனால் அதை விடவும் பேருண்மை நீ ஒரு மனிதப் பிசாசாக இருந்திருக்கிறாய் என்பது. எனவே நீ குறித்துக் கொள்; நீரில் மூழ்கி நீ உயிர்விட வேண்டுமென நான் தீர்ப்பு வழங்குகிறேன்.''

அறையை விட்டு உடனடியாக வெளியேறி விட அவன் மனம் பரபரத்தது. அவனுக்குப் பின்னால் அவனுடைய தந்தை பொத்தென்று படுக்கையில் விழுந்த சப்தம், அவன் வெளியேறிய போது காதுகளில் விழுந்திருந்தது. படிக்கட்டுகளில் அவன், ஏதோ அந்தப் படிகள் சரிவான தளம் கொண்டிருப்பதைப் போல இறங்கியபோது, காலை

நேர சுத்தப்படுத்தலுக்காக மாடி அறையை நோக்கி மேலேறிக் கொண்டிருந்த அவனுடைய வேலைக்காரியைக் கடந்தான். 'ஏசுவே' என்று கத்தியபடி அவள் முகப்புத் துணியால் தன் முகத்தை மூடிக்கொண்டாள். ஆனால் அதற்குள் அவன் சென்றுவிட்டிருந்தான். முன்வாசல் வழியாக, சாலையைக் கடந்து, தண்ணீரை நோக்கி உந்தப்பட்டு அவன் விரைந்தான். ஏற்கெனவே அவன் பாலcmohanத்தின் கிராதிகளை, பசியால் வாடும் மனிதன் உணவை இறுகப் பற்றிக் கொண்டிருப்பதுபோல, பற்றியிருந்தான். ஒரு உடற்பயிற்சி வித்தைக்காரனைப் போல - அவனே அப்படியான ஒரு ஆளாக தன் இளமையில் ஒரு சமயம், பெற்றோர்கள் பெருமிதப்படும்படி இருந்திருக்கிறான் - அவன் அதன்மீது ஊசலாடினான். பிடிமானம் தளர்ந்து, அவன் இன்னமும் பற்றிக் கொண்டிருந்த சமயத்தில், பஸ் ஒன்று வருவதை,

அவன் விழுவதால் ஏற்படும் சத்தத்தை அது சுலபமாக அமுக்கி விடுமென்பதை, கிராதிகளுக்கிடையே ரகசியமாக அறிந்ததும், தாழ்ந்த குரலில் : "அன்புப் பெற்றோரே, நான் எப்போதுமே உங்களை நேசித்திருக்கிறேன் - ஒரே மாதிரியாக'' என்று கூறியபடி குதித்தான்.

இந்தச் சமயத்தில் பாலத்தின்மீது முடிவுறாத போக்குவரத்து தொடர்வரிசையாக தன் போக்கில் நிகழ்ந்து கொண்டிருந்தது.

- ஃபிரான்ஸ் காஃப்கா (ஆங்கிலத்தில் : வில்லா - எட்வின்மூர். தமிழில் சி.மோகன்)