மதங்கள் கடந்த ஆன்மிகம்

மனித இனமானது தனது இத்தனை ஆண்டு கால வரலாற்றில் ஒரு போதும் சும்மா இருந்திருக்கவில்லை. அவர்கள் எதையாவது தேடிக் கொண்டே இருக்கின்றார்கள். தமக்கு தெரியாத பற்பல விடயங்கள் இருப்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கின்றார்கள். அவர்களின் தேடல் அளப்பரியது. ஒவ்வொரு தனி மனிதனும் தனது தேடலை வெவ்வேறு பரிமாணங்களில் தேடினான், தேடிக் கொண்டிருக்கின்றான். ஒரு சிலர் அதனை பரம் பொருள் என்று அழைக்கின்றார்கள், ஒரு சிலரோ அதனை மெய்ப் பொருள் என்று அழைக்கின்றார்கள். அந்த தேடலை மனிதர்களோ, சந்தர்பங்களோ ஒரு போதும் மாற்றிவிட முடியாது. நீ இதனைத் தேடாதே, நீ தேடும் பொருள் இது தான் என பல சமயங்களில் நம் மீது திணிக்கப்பட்ட போதும், மறைமுகமாக நமது தேடல்கள் நினைவிலும், கனவிலும் தொடரவே செய்கின்றன.

அவனது தேடல்கள் தடைபெறும் போதும், அவன் நிராசைப் பெற்றவனாக மதியை மயக்கிக் கொள்ள முயல்கின்றான். அம் மயக்கம் அவன் தோற்று விட்டான் என்பதை மறக்கச் செய்யும் மருந்தாக கருதுகின்றான். மயக்கங்கள் தரக் கூடியவை மனிதருக்கு மனிதர் வேறுபடுகின்றன ஒரு சிலருக்கு அது ஆன்மிகமாக இருக்கலாம், மதுவாக இருக்கலாம், மாதுவாக இருக்கலாம், எதாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

மனிதர்கள் எப்போதும் வேண்டும் மற்றுமொரு விடயம் இன்பம். தேடல்கள் என்பதே மனிதனின் இன்பத்தின் ஓரங்கமே ஆகும். ஆம் இன்பம் என்பது தேடல்கள் என்னும் தேரில் ஏறிவரும் பாகன் போன்றவனே. சில சமயம் தேடல்கள் தடைப்படும் போது வெறும் இன்பம் அத் தேரில் இருந்து இறங்கிவிடும்.

உலகில் இருப்பவர்களுக்கு இன்பம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். தினமும் எதாவது ஒரு சில விடயங்களில், ஒரு சில நொடிப் பொழுதாவது இன்பத்தை பெற்றுவிட வேண்டும் எனக் கருதுகின்றார்கள். அதற்காக ஏனைய மணித்துளிகளில் துன்பத்தை முதுகில் சுமக்கத் தயாராகவே இருக்கின்றார்கள். பெரும்பாலான மக்கள் இன்பத்தை ஆன்மிகத்திலோ, வெற்றி வாய்ப்புகளிலோ, குடும்ப உறவுகளிலோ தான் தேடுகின்றார்கள்.

ஆன்மிகம் என்பது இன்பத்தைத் தந்துவிடுமா எனக் கேட்டால் நிச்சயம் அதற்கான எவ்வித உத்தரவாதமும் இல்லவே இல்லை. ஆன்மிகத்தில் இருக்கும் பெரும்பாலானோர்கல் தாம் இன்பமாக இருப்பதாகக் காட்டிக் கொள்கின்றார்கள். ஆனால் உண்மையைச் சொல்லப் போனால் இன்பம் என்பது ஆன்மிகத்திலோ அல்லது குடும்ப உறவுகளிலோ, வெற்றி வாய்ப்புகளிலோ, செல்வச் செழிப்பிலோ கிடைப்பதே இல்லை.

நமக்கு எல்லாம் சீராக இருக்கின்றது என வைத்துக் கொள்வோம், நல்ல உணவு, விலை உயர்ந்த உடைகள், அழகிய வீடு, வங்கிக் கணக்கில் நிறைவான பண இருப்பு, இரவில் நல்ல 8 மணிநேர உறக்கம், அழகான மனைவி, அன்பான பிள்ளைகள், அரவணைக்கும் உறவுகள் என எவ்வளவு இருந்தாலும் ஒரே ஒரு சிறு விடயம் கூட நம் நாளைக் கெடுத்துவிடும். யாராவது அறியாத ஒருவர் நாம் அலுவலகம் செல்லும் போது நம்மைப் பார்த்து மோசமாக திட்டி விட்டால் அந்த நாளே மோசமானதாகிவிடும். யாரோ ஒருவன் தானே என்று நம்மால் அதனை எளிதாக ஜீரணித்துக் கொள்ள முடிவதே இல்லை.

ஆய்வாளர் செல்லி கேபிள், ஜோனாதன் ஹைத் என்பவர்கள் கூறுகின்றார்கள், மனிதனுக்கு நல்ல அனுபவங்கள் கெட்ட அனுபவங்களை விட மூன்று மடங்கு அதிகமாகவெ இருக்குமாம். ஆனால் நாம் கெட்ட அனுபவங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்துவிடுகின்றோம். ஏன் நல்ல அனுபவங்களை நம்மில் ஏற்றுக் கொண்டு நமது இன்பத்தை அதிகரிக்க செய்வதில்லை. காரணம் நமது மகிழ்ச்சியை விடவும் நமது துன்பியலில் தான் அதிகம் அக்கறைக் காட்டுகின்றோம்.

மனித சமுதாயத்தின் பெரும் சாபக் கேடே தமது உணர்ச்சிகளை அடக்க நினைப்பது. அந்த உணர்ச்சிகள் அடிக்கும் மேளத்துக்கே நாம் ஆட வேண்டி உள்ளது. உணர்ச்சிகளை நாம் அடக்க நினைக்கின்றோம், ஆனால் இறுதியில் அந்த உணர்ச்சிகள் நம்மை அடக்கி விடுகின்றன. நமது உணர்ச்சிகளில் துன்பம் தரும் உணர்ச்சிகளே இமலாய உயரத்துக்கு சுனாமி போல எழுந்துவிடுகின்றன, மாறாக இன்பம் தரும் உணர்ச்சிகள் ஒரு நொடிப் பொழுதில் கரைந்து விடுகின்றன, ஆர்ப்பரிக்காத சிறு கடலலைகள் போல. துன்பம், கோபம் தரும் தீய உணர்ச்சிகள் பொங்கிவிடுவதால் தான் இன்று உலகில் பல இடங்களில் போர்களும், அநியாயங்களும், பலாத்காரங்களும், வறுமைகளும், கொள்ளைகளும், சுரண்டல்களும் எனப் பற்பல விடயங்களும் மேலோங்கி நிற்கின்றன.

தெரிந்துக் கொள்ளுங்கள் உணர்ச்சிகள் நிலையற்றவை, அவை நம் கால்களை வாறிவிடக் கூடியவை. அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்போமானால் அவை நம்மை மாயையைகளில், தோல்விகளில், மன அழுத்தங்களில் தள்ளி விடும்.

பிரிகாம் யங்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நத்தானியல் லம்பார்ட் மற்றும் அவரது சகப் பணியாளர்கள் ஆய்வு ஒன்றினை நடத்தினார்கள். அந்த ஆய்வில் அதிகமாக நல்ல விடயங்களை அளவளாவிக் கொள்வதால் நமது உடல், மன நலம் அதிகரிக்கின்றனவாம். அத்தோடு வாழ்க்கையின் மீது ஒரு பிடிப்பையும், நிறைவையும் அது தருகின்றதாம்.

பல சமயங்களில் நாம் நமது நன்மைகளைப் பற்றி பேசுவதில்லை, பேசவும் தயங்குகின்றோம். ஏனெனில் ஒரு வேளை நாம் தற்பெருமைவாதிகள் என முத்திரைக் குத்தப்படுவோமோ என்ற அச்சம் இருக்கலாம், அல்லது உலகில் பலர் துன்புற்றுக் கிடக்க நாம் நமது நன்மைகளை மட்டும் பேசுவது சரியாகுமோ எனவும் கலங்குகின்றோம். மாறாக நாம் நமது சகாக்களோடும், காதலர்களோடும் நல்ல விடயங்களை பகிர்ந்துக் கொள்வதால் நமது மன மகிழ்ச்சி அதிகமாகுகின்றது  என நத்தானியல் லம்பார்ட் கூறுகின்றார்.

அப்போது துன்பங்களை என்ன செய்யலாம், மனதிலேயே போட்டு அடக்கிவிடலாமா என்றால் அதுவும் இல்லை. துன்பங்களை மனதில் போட்டு அடக்குவதாலோ, கற்பனைக் கடவுளர்களோடு முறையிடுவதாலோ அது ஒரு போதும் அடங்கிவிடுவதில்லை. மாறாக அவற்றைக் குறித்து பேசுங்கள், ஆனால் அதற்கான கால நேரங்களை ஒதுக்கிக் கொண்டு பேசுங்கள். உயிருள்ள உணர்ச்சிகளுள்ள பரிவுக் காட்டக் கூடிய ஒருவரிடம் பேசுங்கள்.

உணர்ச்சிக்கள் கைகளில் அகப்படாத ஒரு மர்ம பொருளாகும். அவற்றை நம்மால் நீக்கவோ, ஏற்கவோ முடியாது. இடைப்பட்ட ஒன்றாக இரு மலைகளுக்கு கட்டப்பட்ட ஒருக் கயிற்றின் மேல் நடப்பது போன்றதே ஆகும். ஆனால் அக் கயிற்றில் நம்மால் நடந்துவிட முடியும். கீழே விழுந்துவிடுவோமா, அல்லது அல்லது கடந்துவிடுவோமா என்றக் கவலையை விட்டெறியுங்கள்.

பௌத்த துறவியான பேமா சோத்ரன் என்பவர் கூறுகின்றார் துன்பங்களை விட்டு விலகாதீர்கள், அதனை நோக்கி தைரியமாக செல்லுங்கள் என்கின்றார். அவர் மேலும் கூறுகின்றார் எந்த இடங்களுக்கு நீங்கள் செல்ல அச்சப்படுகின்றீர்களோ அங்கு செல்லப் பாருங்கள், மாறாக அவ் விடத்தை தவிர்க்காதீர்கள் எனவும் கூறுகின்றார்.

இந்தியாவில் சர்வ சாதாரண மக்கள் இந்து, முஸ்லிம், வடநாடு, தென்னாடு, ஏழை, பணக்காரன் என எவ்வித பேதமுமின்றி சீரடியில் ஒன்றர கலந்து மக்கள் பெருந்திரளாக சீரடி சாய் ரப்பாவை வழிபடும் பாங்கானது புதியதோர் ஜாதி மத பேதங்கள் மெய்ப் பொருள் நோக்கிய எனது பயணத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியது.

நாம் நமது வாழ்வில் ஒரு போதும் குருவாகி விடுவதில்லை என்பதை நினைவில் கொள்ளவும் வேண்டும். நாம் பிறந்தது முதல் இறப்பது வரை ஒரு மாணவனாகவே தான் இருக்கின்றோம். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித் துளியும் புதிய புதிய விடயங்களையே கற்கின்றோம். நமக்கு மேலான குரு என்று யாரும் இல்லை. நாம் என்றுமே மாணவர்கள் தான். நமக்கான பாடங்களை காலமும், சந்தர்பங்களும், வாய்ப்புக்களும் உருவாக்கிக் கொடுக்கின்றன. அவையே நமக்கு பாடங்களாகவும், குருவாகவும் இருக்கின்றன. அப் பாடங்களை அவைகளே உணர்வதில்லை, நமது வாழ்வில் எந்தவொரு விடயமும் தீர்மானிக்கப்பட்டதில்லை. மிகப் பெரிய வட்டத்தில் விடப் பட்டு இருக்கும் நிலையற்ற அணுக்களை போல அங்கும் இங்கும் உலாவுகின்றோம்.

பிறரின் அனுபவங்களை கற்கலாமே தவிர அவற்றை நம் வாழ்வில் கொண்டு வரவே முடியாது. அதே போல காலம் காலமாக சான்றோர்கள், ஆன்றோர்கள், பலவான்கள் எனப் பற்பலர் எழுதி வைத்தவற்றை தினமும் கற்பதால் நம் வாழ்வு முன்னேறி விடும் என்றும் சொல்லிவிட முடியாது. ஒரு பொழுது போக்காக அவற்றை வாசிக்கலாமே தவிர, அவற்றை நாம் நமதாக்கிக் கொள்ள முடியாது. நமது உணவை நாம் தன் உண்ணவும் வேண்டும், செரிக்கவும் வேண்டும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

சித்தர்களோ, சூபிக்களோ, பிக்குகளோ இது தான் உலகின் உண்மை என்ற வரையறைக்குள் வர விரும்பவில்லை. இது தான் சர்வ பிரபஞ்சத்தின் நியதி, பரம் பொருள் என பிரசங்கம் பண்ணவும் இல்லை. அவர்களுக்குத் தெரியும், பிரபஞ்சத்தின் ஒரு இம்மி அளவிலான மனிதக் குலத்தால் வெகுவிரைவில் இது தான் இன்னது என்பதை தீர்மானிக்க முடியாது. இவர் தான் கடவுள், இவர் தான் கடவுளின் பிள்ளை, இவர் தான் கடவுளின் அவதாரம், இவர் தான் கடவுளின் தூதர் என்ற வரையறைகள் எல்லாம் எத்தனை எத்தனை அபத்தமானது என்பதை தேடல் உடையவர்கள் உணர்வார்கள். அவர்கள் தம்மை தாமே அவ் வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டு ஏமாற்றுவதில்லை.

ஜிட்டு கிருஷ்ண மூர்த்தி சொல்வது போல காலம் காலமாக மதங்கள் சொல்லித் தருபவை எவை சில சடங்குகள், சில பிரார்த்தனைகள், சில மந்திரங்கள் ஆகும். அவற்றையே நாம் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தப் படுகின்றோம். அவற்றின் மூலம் நமது ஆசைகளை ஒடுக்க, நம் எண்ணங்களை கட்டுப்படுத்த, நமது உணர்வுகளை காயவிட, நமது பசிகளை குறைக்க, பாலியல் நுகர்வுகளில் இருந்து விலகவே மதத் தலைவர்கள் பணிக்கின்றார்கள். ஆனால் நினைவில் கொள்ளுங்கள் உடலும், உள்ளமும் சித்திரவதைகளை விரும்பதில்லை. ஒரு சிறிய வட்டத்துக்குள்ளான வாழ்க்கையைத் தாண்டி எதோ ஒன்றை கண்டறிய வேண்டும் என்றே மனம் விரும்புகின்றது. ஆனால் பலரும் அத்தேடலை பாலைவனங்களிலோ, மலைக் குகைகளிலோ, சிறியப் பிச்சைப் பாத்திரத்தை கைகளில் ஏந்தி கிராமம் கிராமமாக அலைவதிலோ, தனிமையிலோ, நிறுவனப்பட்ட மத அமைப்புகளில் கட்டாயமாக இணைந்து விரும்பாதவற்றை செய்வதிலோ, மனதை கட்டாயப்படுத்துவதிலோ, சூழ்நிலைகளில் இருந்து தப்பிப்பதிலோ இல்லை. மாறாக மனம் ஒரு நீண்ட பயணமாகும் அது அதன் வழியிலேயே சென்று தான் திரும்பும். வள்ளுவர் சொன்னது போல மெய்ப் பொருள் காண்பதே அறிவு என்பதை நமது மனம் நன்கு உணர்கின்றது. மெய்ப் பொருளைத் தேடியே அது பயணிக்கின்றது. ஆனால் தவறான வழிக்காட்டல்களால் அது கடலில் குதித்து முத்து எடுக்காமல் குளங்களிலோ, குட்டைகளிலோ, கிணற்றிலோ தங்கிவிடுகின்றது, பின்னர் அந்த குளம், குட்டை, கிணறு மட்டுமே பரந்து விரிந்த உலகு என வாதிடுகின்றது.

இன்று அறிவியலின் துணையோடு தேடல்கள் பல்வேறு பரிமாணங்களில் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது, போதும் என்று எதிலும் தம்மை நிறுத்திக் கொள்ள விரும்பவில்லை மனித இனம். அதே சமயம் இவை தான் நிலையான மெய்ப் பொருள் என்றும் கூறுவதில்லை. இதோ இந்த நொடி வரை கிடைக்கப்பட்டவை இவை மாத்திரமே, இவற்றில் இவை தான் மெய்யாக உணரப்படுகின்றது என்பதைக் கூறிக் கொண்டே தேடல்கள் தொடர்கின்றன.

– தமிழ் வண்ணன்

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *