ஜல்லிக்கட்டு போராட்டங்கள்

இன்றைய நவீன உலகம் அதி வேகமாகச் சுழன்று கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் நமது வாழ்க்கை முறை மாறிக் கொண்டே வருகின்றது. புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் நமது அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாத அளவிற்கு வந்து சேர்கின்றன. இந்த அதி வேகச் சுழற்சியில் நாம் நமது பாரம்பரிய வாழ்க்கை முறைகளிலிருந்து நம்மை அறியாமலேயே விலகிச் சென்று கொண்டிருக்கின்றோம். பழையன கழிதலும் புதியன புகுதலும் மனித வாழ்வில் ஒன்றும் புதியவை அல்ல தான். ஆண்டாண்டு காலமாகத் தலைமுறை தலைமுறையாக நமது வாழ்க்கை முறைகள் மாற்றம் கண்டே வந்திருக்கின்றன.

ஆனால், முன்பு நமது வாழ்க்கை முறைகள் மெது மெதுவாகவே மாற்றம் கண்டன. படிப்படியாக மெல்ல மெல்ல நன்மை தீமைகளை ஆராய்ந்து தான் சார்ந்த சமூகப் புவியியல் தேவைகளுக்கும், காலநிலை மாற்றங்களுக்கும் இடம் கொடுத்து புதிய மாற்றங்களை மனித சமூகங்கள் உள்வாங்கிக் கிரகித்துத் தன்னைத் தானே மாற்றி வந்தன. ஆனால் கடந்த சில பத்தாண்டுகளாக மேலை நாடுகளின் வழிகாட்டலோடு, பன்னாட்டு நிறுவனங்களால் திட்டமிடப்பட்டு உலக மக்களின் வாழ்வு செயற்கையாக கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம்  இந்த மேலை நாடுகள் வியாபாரம் செய்ய வசதியாக புதிய புதிய சந்தைகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதற்காகவே ஜி-8 எனப்படும் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், பிரான்சு, ஐரோப்பிய யூனியன் நாடுகள் வளரும் பிற உலக நாடுகளைத் தம் வளர்ச்சிக்காக அரசியல் சமூகப் பொருளாதார ரீதியில் கட்டுப்படுத்தி வருகின்றன. WTO மூலமாக மேலை நாடுகளால் உருவாக்கப்பட்ட GATT ஒப்பந்தங்கள் மூலமாக பணக்கார நாடுகள் ஏழை நாடுகளை சுரண்ட வருகின்றன.

வளரும் நாடுகளில் மக்களுக்காக உருவாக்கப்பட்ட பொது நிறுவனங்களையும், உள்கட்டமைப்புக்களையும், பொது நலத் திட்டங்களையும் அந்த நாடுகளின் அரசாங்கத்திடமிருந்து பிடுங்கி தனியார் நிறுவனங்களிடமும் (MNC’s), தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமும் (NGO’s) கொடுத்து வருகின்றனர். இந்த நாடுகளில் வாழ்கின்ற மக்கள் நலன்களைக் காக்கக் கூடிய அதிகாரங்களை அந்த நாட்டின் அரசாங்கங்களிடமிருந்து பறித்து விட்டு, வெறுமனே இந்தப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வசதியாக ஏற்படுத்தப்பட்டு வருகின்ற உலகச் சந்தையைப் பத்திரமாகக் கவனித்துக் கொள்ளும் பணியையே இந்த அரசாங்கங்களுக்குக் கொடுக்கும் புவியியல் தந்திரோபயம் என மோகன் தத்தா கூறுகின்றார்.

மேலை நாடுகளின் இந்தப் பொருளாதாரப் படையெடுப்பின் ஒரு பகுதியாகவே பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இந்தியா போன்ற நாடுகளுக்குள் நுழைந்தன. இவர்களின் வேலைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தக்கவாறு அத்தனை வேலைகளிலும் ஈடுபடுவார்கள். அதாவது முதலில் தொண்டு செய்வதைப் போல வந்து, உள்நாட்டுச் சட்ட திட்டங்களையும், உள்நாட்டு அரசியல் அதிகாரங்களையும் தமக்கு ஏற்றார் போல மாற்றிக் கொண்டு ஒரு நீண்ட கால வேலைத் திட்டத்தைத் தொடங்குவார்கள்.

அதன் படி, பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தடையின்றித் தொழில் செய்ய வசதியாக ஒரு சந்தையை உருவாக்குவார்கள். அந்த நிறுவனங்களுக்குத் தடையாக ஏதுமிருந்தால், அவற்றை உள்நாட்டுச் சட்ட திட்டங்களையும், உள்நாட்டு அரசியல் அதிகாரங்களையும் கொண்டே தகர்த்தெறிவார்கள். ஒத்தக் கருத்துடைய உள்நாட்டுப் பங்காளிகளையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். அதன் மூலம் தங்கு தடையற்ற வர்த்தக சந்தையை உருவாக்குவார்கள்.

இந்த மேலை நாடுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் தமது தடையற்ற வரத்தக சந்தையை பாதுகாப்பதற்காக அந்தந்த நாட்டின் தேசிய அரசாங்கங்களைக் கொண்டு போலீஸ், ராணுவம் உட்பட அனைத்தையும் பலப்படுத்துவார்கள். அத்தகைய தடையற்ற சந்தையை எதிர்ப்போரை அந்தந்த நாட்டின் போலீஸ், ராணுவம் கொண்டே ஒடுக்குவார்கள் என ஹென்றி ‘கிரோகஸ் கூறுகின்றார்.

அத்தகைய ஒரு நடவடிக்கையாகத் தான் இந்தியாவின் விலங்குகள் சார்ந்த சந்தையை தம் வசதிக்கேற்ப மாற்றுவதற்கு தடையாக இருக்கின்ற உள்நாட்டு கால்நடைகளையும், நாய் உட்பட பல்வேறு விலங்கினங்களையும், பயிரிட பயன்படும் விதைகளையும், பல்வேறு உள்நாட்டு பாரம்பரிய தொழில்நுட்பங்களையும் அழிப்பதும், அந்த இடத்தில் காப்புரிமை செய்யப்பட்ட தமது கால்நடைகளையும், விலங்குகளையும், விதைகளையும், தொழில்நுட்பங்களையும் விற்று லாபம் சம்பாதிப்பதே பன்னாட்டு நிறுவனங்களின் குறிக்கோளாக இருக்கின்றது.

உலகிலேயே அதிகளவு கால் நடைகளைக் கொண்டிருக்கும் நாடான இந்தியாவில் மட்டும், உலகின் பாதிக்கும் மேற்பட்ட எருமை மாடுகளும், கால் வாசி பசு மாடுகளும் இருக்கின்றன. இவற்றை நிர்மூலமாக்குவதன் மூலம் உலகில் அதிகம் பால் உற்பத்தி செய்யும், மாட்டிறைச்சி, தோல், எலும்புகள் ஏற்றுமதி செய்யும் இந்திய சந்தையை கபளீகரம் செய்து கொள்ளை லாபமீட்ட எத்தனிக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.

உலகமயமாதல், புதிய தாராள பொருளாதாரம், தடையற்ற வர்த்தகம் என்ற சித்தாந்தங்கள் எல்லாம் சாதாரண மக்களின் கைகளிலில் அதாவது 85 % இந்தியர்களின் கைகளில் இருக்கின்ற கால்நடை செல்வத்தை கொள்ளையடிக்கும் திட்டம் இல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும் சொல்லுங்கள்.

அதில் ஒரு சிறுதுளி தான் அமெரிக்க சார்புடைய PeTA போன்ற விலங்குகள் நலன் சார்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நாட்டு மாடுகள் சார்ந்த விளையாட்டுக்களை ஒழித்து விட மிகத் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதன் பின்னணியில், பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க ஏதுவாக புதிய சந்தையை தயார்படுத்தும் திட்டமே ஒளிந்திருக்கின்றது.

*

கடந்த 8-ம் தேதி சென்னை மெரினாவில் நடைபெற்ற இளைஞர் பேரணி தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முதல் வித்து. சில நூறு மாணவர்களே பங்கேற்றிருந்த இப் பேரணியில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர்களும், இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அலங்காநல்லூரில் ஊர் பொது மக்களும், மாணவர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடத் தொடங்கினர். இப் போராட்டத்தை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கலைத்தனர்.

ஜனவரி மாதம் 17-ந் தேதி காலை 8 மணியளவில் வெறும் 100 மாணவர்கள் ஒன்று கூடி  ஒன்று கூடி சென்னை மெரினாவில் போராடத் தொடங்கினார்கள். இந்த மாணவர்கள், மற்றும் இளைஞர்கள் எல்லோரும் சமூக ஊடகங்கள் மூலமாக விடப் பட்ட கோரிக்கையை அடுத்தே சென்னை மெரினா கடற்கரையில் ஒன்று திரண்டனர். அதற்கு அப்புறம், பெண்கள், குழந்தைகள், பெரியோர், முதியோர் என சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா நோக்கி லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். இதனைதமிழ்நாடு முழுவதுமே, ஆயிரக் கணக்கான மக்கள், எந்தவொரு அரசியல் சார்பும் இல்லாமல் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டி போராடினர். சென்னை மாநகரத்தின் மெரினா கடற்கரையில் திரண்டு போராடினர். ஆனால், உண்மையைச் சொல்லப் போனால், மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம், கோயம்புத்தூர் என பல ஊர்களிலும் போராட்டங்கள் நடந்தன.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் தாமாகவே முன் வந்து போராட்டங்களில் கலந்து கொண்டோருக்கு நீர் வழங்கினர், சாப்பாடு தந்தனர், கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தினர், குப்பைகளை அகற்றினர். இந்த போராட்டத்தில் பொது மக்களுக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர். போராட்டங்களில் இரவு பகல் பாராமல், பங்கேற்றனர், தொண்டூழியம் செய்தனர்.

போராட்டங்களின் ஓரங்கமாக தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக சிலம்பாட்டம், தெரு நாடகம், ஆடல்கள், பாடல்கள் என பல நிகழ்ச்சிகளையும் நடத்தினர். அது மட்டுமின்றி ஜல்லிக்கட்டு குறித்த விழிப்புணர்வு பரப்புரையையும், ஜல்லிக்கட்டு தமிழர் வரலாற்றில் தோன்றிய விதம், வளர்ந்த விதம், சிந்து சமவெளி தொட்டு சங்ககாலம் முதல் இன்று வரை தடையின்றி நடைபெற்று வருவது பற்றியும் பலர் பேசினர். ஜல்லிக்கட்டு சார்ந்த கிராம பொருளாதாரம் மற்றும் சுற்றாடல் பயன்களைப் பற்றியும் விவரித்தனர். அது மட்டுமின்றி பன்னாட்டு நிறுவனங்கள் எவ்வாறு தெற்காசியாவின் நாட்டு மாட்டு இனங்களை அழித்துவிட்டு அதற்கு பதிலாக வெளிநாட்டுப் பசுக்களை பரப்பும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன எனவும், அதற்கு நம் நாட்டு மத்திய மாநில அரசுகள், தன்னார்வ அமைப்புகள், பன்னாட்டு அமைப்புகள் துணை போவதைப் பற்றியும் பேசினர். ஜல்லிக்கட்டு பற்றி ஒன்றுமே அறிந்திராத இன்றைய தலைமுறையினருக்கு அது புதிதாகவும், பாடமாகவும் இருந்தது எனலாம்.

நாள் ஒரு மேனியும் பொழுது ஒரு வண்ணமுமாக சென்னையில் குவியத் தொடங்கிய மக்களின் தொகை பல லட்சங்களைத் தொடத் தொடங்கியது. ஏற்கனவே கடந்த ஜனவரி 14, 15, 16 தேதிகள் பொங்கல் திருவிழா விடுமுறை என்பதாலும், அத்தோடு ஜனவரி 17-ம் தேதியை எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்தநாள் என்பதால் விடுமுறையாக அறிவித்திருந்ததாலும், பலரும் தங்கு தடையின்றி சென்னை மெரினா கடற்கரையில் குவியத் தொடங்கினர். அத்தோடு போராட்டம் வலுவடைந்ததால் சென்னையைச் சேர்ந்த 30-க்கும் அதிகமான கல்லூரிகள் விடுமுறை அறிவித்தன. அதனைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளும் விடுமுறை அறிவித்தன. பல இளைஞர்கள் அலுவலகங்களுக்கு வராமல் போனதால் பல ஐடி நிறுவனங்களும், வேறு பல தனியார் நிறுவனங்களும் விடுமுறை அறிவித்தன.

போராட்டங்களில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் பல்வேறு சிறு சிறு குழுக்களாக வகுத்துக் கொண்டு போராட்டங்களை கட்டுக் கோப்பில் வைத்திருந்தனர். அதே சமயம் இப் போராட்டக் களத்திற்குள் இணைய நினைத்த அரசியல் கட்சிகளையும், சினிமா நட்சத்திரங்களையும் ஒதுங்கி இருக்குமாறு கேட்டுக் கொண்டனர். பல்வேறு அரசியல் கட்சிகள் தமது ஆதரவை நல்கின. ப் போன்றே திருச்சி, கோவை, மதுரை, சேலம், புதுவை போன்ற நகரங்களிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன.

ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம் என மாணவர்கள் குறிப்பாக ஜல்லிக்கட்டோடு நேரடியாகத் தொடர்பில்லாத நகரப் புற இளைஞர்கள் கூட களத்தில் இறங்கியதால் மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்க ஆரம்பித்தது.

*

தமிழ்நாட்டில் ஒவ்வொரு பொங்கல் திருவிழாவின் போது விளையாடி வருகின்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்று ஜல்லிக்கட்டு. இவ் விளையாட்டுகளில் காளைகளைத் தமிழர்கள் கொடுமை செய்வதாகக் கூறி இவ் விளையாட்டை தடை செய்ய வேண்டி PeTA மற்றும் அதன் உள்ளூர் பங்காளிகளான  AWBI, போன்ற விலங்குகள் நல அமைப்புகளும், மேனகா காந்தி போன்ற தீவிர விலங்குகள் நல ஆர்வலர் என்ற போர்வையில் இயங்கி வருகின்ற வலதுசாரி அரசியல்வாதி உட்பட பலரும் சேர்ந்து கொண்டு, கடந்த 2006 முதல் பல்வேறு வழக்குகளைப் போட்டு கடும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், ஒவ்வொரு முறையும் தமிழக அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு ஜல்லிக்கட்டை நடத்தி வந்தது. அதனால் தான் கடந்த 2009-யில் “தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்ட”த்தையும் கொண்டு வந்தது.

கடந்த 2011-ல் ஆண்டு பீட்டா சார்பாக பாஜக எம்.பி ஹேமா மாலினி விடுத்த கோரிக்கையை அடுத்து, அன்றைய காங்கிரஸ் மத்திய அரசில் வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த தமிழின விரோத ஜெய்ராம் ரமேஷ் மேலும் ஓர் அறிவிக்கை பிறப்பித்தார். காட்சி விலங்குகள் தடைப் பட்டியலில் “காளை”யை புதிதாகச் சேர்த்து, விலங்குகள் வதை சட்டம் (PCA) பிரிவு 22 ன் கீழ் ஆணையும் இட்டார். அந்த பட்டியலில் உள்ள மற்ற விலங்குகள் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, குரங்கு. இந்த பட்டியலில் வேண்டுமென்றே காளையும் இணைக்கப்பட்டது.

இந்த அறிவிக்கை வைத்துக் கொண்டு, AWBI அமைப்பின் ராதா ராஜன், PETA அமைப்பும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டனர். அவ் வழக்கில் CUPA, FIAPO, மற்றும் மேனகா காந்தியின் PFA ஆகிய அமைப்புகளும் நீதிமன்றம் சென்றன.

இதன் விளைவாக, 2014-ல் ஜல்லிக்கட்டை நிரந்தரரமாக தடை  செய்தது உச்சநீதிமன்றம். அதன் பின் மீண்டும் ஆட்சிக்கு வந்த பாஜக இதுவரை ஜல்லிக்கட்டை நடத்தவிடாமல் பார்த்துக் கொண்டது.

*

இந்தியக் கண்டம் முழுவதும் வாழ்ந்த ஆதி தமிழர்கள் காளைகளை பேணிப் பாதுகாத்து வந்திருக்கின்றனர். ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன் சிந்துசமவெளி திராவிட பண்பாட்டு வாழ்விடங்களில் ஜல்லிக்கட்டு என்றழைக்கப்படும் ஏறுதழுவல், மஞ்சுவிரட்டு விளையாடி இருக்கின்றனர்.

இதனை சங்க இலக்கியங்கள் ஏறு தழுவல் என பாடுகின்றன. கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை என பரவலான இலக்கிய படைப்புகளில் ஏறு தழுவுதலை பற்றிய செய்திகள் உள்ளன.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பக்கத்தில் கரிக்கையூர் மலைக்குகைகளில் கண்டறியப்பட்ட மிகப் பழமையான குகை ஓவியங்களில் ஜல்லிக்கட்டு வரையப்பட்டுள்ளது. அதே போல மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உள்பட தமிழகம் எங்கும் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான 15 மலைக்குகை ஓவியங்களில் ஜல்லிக்கட்டுக்கான சான்றுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர் காந்திராஜன் கண்டறிந்துள்ளதை அவருடைய “ஜல்லிக்கட்டு, ஏறுதழுவல்: தொன்மம், பண்பாடு, அரசியல்” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1920-களில் ஹரப்பா பகுதியில் நடத்தப்பட்டு ஆய்வில் காளை உருவங்கள் கொண்ட எண்ணற்ற திராவிட பண்பாட்டுச் சின்னங்கள் கிடைத்தன. சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் சித்தரிக்கப்பட்டுள்ளது. மிகப் பழங்காலம் தொட்டே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சிந்து சமவெளியில் நிறைய காளை உருவங்கள் இருக்கின்றனவே தவிர ஆரியர் போற்றும் அஸ்வம் எனப்படும் குதிரைகள் பற்றி ஒரு குறிப்பும் இல்லை. ஆரியர்களின் ரிக் வேதத்தில் குதிரைகள் மட்டுமே நூற்றுக்கணக்கில் இடம்பெற்றுள்ளன.

இதனால் கடுப்படைந்த இந்து தேசியவாதிகள் சிந்து சமெவளியில் கிடைத்த சின்னங்களில் ஒன்றில் காணப்பட்ட காளையின் உருவத்தை உருமாற்றிக் கடந்த 2000-யில் ராஜாராம், நட்வார் ஜா என்ற போலி ஆய்வாளர்கள் துணையோடு காளையை குதிரையாக காட்டி, சிந்துசமவெளி ஓர் ஆரிய நாகரிகம் என நிறுவ முயன்றார். ஆனால், அவருடைய திருட்டுத் தனத்தை கண்டறிந்து தோலுரித்துக் காட்டினர் ஸ்தீவ் பார்மர், மிக்கேல் விட்சல் என்ற மேனாட்டு அறிஞர்கள். அதுமட்டுமில்லை சிந்துசமவெளியில் கிடைத்த காளை மாட்டு உருவச் சின்னங்கள் நம் தமிழகத்தில் காங்கேயம் பகுதியில் காணப்படும் காளைகளை ஒத்திருப்பதைப் பலரும் கண்டு அதிசயித்திருக்கின்றனர். அத்தகைய பெருமை வாய்ந்த சிந்துசமவெளி நாகரிகம் குறிப்பாக தமிழருடையது என ஆணித் தரமாக சொல்லியதே இந்தக் காளைகள் தான்.

*

ஏன் ஜல்லிக்கட்டுக்கு எதிராக இந்துத்வா கொள்கையை பின்பற்றுவோர் மிக வன்மத்தோடு செயல்படுகின்றனர் என்ற கேள்வி எழலாம்? மேனகா காந்தி, ராதா ராஜன், பூர்வா ஜோஷிபுரா, போன்றோரது கருத்துக்களை மிக ஆழமாக ஆய்ந்தால் அதற்கான விடை தானாகவே கிடைக்கும்.

ராதா ராஜன் என்பவர் தான் இந்திய விலங்குகள் நலவாரியத்தின் தலைவர்களில் ஒருவர். தொடக்கம் முதலே ஜல்லிக்கட்டுக்கு எதிராக மிகத்தீவிரமாக செயல்பட்டு வருகின்றவர். இவரே பல முறை ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி நீதிமன்றம் சென்றவர். இவர் தீவிர இந்துத்வா ஆதரவாளரும் கூட. விஜயவாணி என்கிற இணையதளத்தைத் தொடங்கி தொடர்ந்து தமிழ்விரோதக் கட்டுரைகளை எழுதி வருகிறார். இவர் தி வையர் இணையதளத்தில் எழுதிய கட்டுரையில் ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரியம் இல்லை, சிந்து சமவெளியில் ஜல்லிக்கட்டு சித்தரிக்கவில்லை, சிந்து சமவெளிக்கும் தமிழர்ருக்கும் தொடர்பில்லை என்கிறார், அத்தோடு உலகப் புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் சிந்து சமவெளி சின்னத்தில் இருப்பது ஜல்லிக்கட்டு தான் எனக் கூறுவதைக் கூட இவர் புறந்தள்ளுகின்றார். கடைசியில் அதாவது 1893 முதல் தான் ஜல்லிக்கட்டு விளையாடப்பட்டு வருவதாகவும் பொய்யுரைக்கிறார்.

ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான மற்றொருவர் பூர்வா ஜோஷிபுரா என்ற இந்த பெண்மணி தான் பீட்டா அமைப்பின் இந்திய தலைமை நிர்வாகி ஆவர். அமெரிக்காவில் பிறந்த இவர் இந்தியாவில் பீட்டா அமைப்பை நடத்தி வருகின்றார். வழங்கப்பட்டுள்ளது. முனிஸ்ரீ தருண் சாகர் மகராஜ்ஜி  என்கிற தீவிர இந்துத்வா கொள்கையுடைய ஜைன சாமியார் கடந்த 2014-ல் ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கித் தந்ததற்காக பூர்வா ஜோஷிபுராவுக்கு தருண் கிராந்தி விருதை வழங்கினார். கிரண் பேடி, பாப ராம்தேவ், மோகன் பகவத், கௌதம் அடானி, அனில் அம்பானி போன்றோர் இந்த சாமியாரின் முக்கிய பகதர்கள் ஆவார்கள்.

பீட்டா அமைப்பைப் பற்றி சொல்ல வேண்டுமானால் “விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் (People for the Ethical Treatment of Animals)” என்ற முழுப்பெயரை உடைய இவ் நிறுவனம், 1980 ஆம் ஆண்டு இங்ரிட் நெவ்கிரிக் (Ingrid Newkirk) மற்றும் அலெக்ஸ் பச்சேகோ (Alex Pacheco)  ஆகிய இருவரால் அமெரிக்காவில் தொடக்கப்பட்டது. இந்த பீட்டா அமைப்பு உலகம் முழுவதும் விலங்குகள் நலனுக்காக போராடுவதாக சொல்லி பெரும் பிரபலங்கள் முதல் சாதாரண மக்களிடம் வரை பணத்தைக் கறந்து கொண்டு கொள்ளை லாபம் அடைந்து வருவது தனிக் கதை.

ஜல்லிக்கட்டு தடைக்கு முனைப்புக் காட்டிய மற்றுமொரு அமைப்பு PFA (Peoples For Animal). போராட்டங்களில் ஈடுபட்டவர்களோ, ஊடகங்களோ இவ் அமைப்பு பற்றி வாய் திறக்கவேயில்லை. இந்த அமைப்பை நடத்தி வருபவர் பெண்கள், குழந்தைகள் நல மத்திய அமைச்சரும், பாஜக-வின் மூத்த அரசியல்வாதியுமான மேனகா காந்தி ஆவார். மேனகா காந்தி ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாச்சார இறக்குமதி, அதற்கு பாஜக எப்போதுமே எதிராக செயல்படும் என பரப்புரை செய்து வருகின்றவர்.

வட இந்திய பண்பாடு தான் ஒட்டு மொத்த இந்தியாவின் அடையாளம், மற்ற பண்பாடுகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதுவே இவர்களின் ஆழ்மன உணர்வாக உள்ளது. இதற்காக ஜல்லிக்கட்டு உள்பட பல திராவிட பண்பாட்டு அடையாளங்களை ஒழித்துக் கட்ட பன்னாட்டு அமைப்புகளோடு செயல்பட்டு வருகிறார்கள். ஆக, பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சியைச் சேர்ந்தவர்களுமே ஜல்லிக்கட்டு தடைக்கு  தீவிரமாகவே இருந்துள்ளனர்.

*

ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் இந்தியக் கண்டத்தில் 200-க்கும் அதிகமான நாட்டு மாடு இனங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்று வெறும் 30 இனங்களே இருப்பதாகச் சொல்லுகின்றனர்.

ஒரு காலத்தில் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு அனைத்துச் சமூகங்களாலும் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால், அவை காலப் போக்கில் ஒரு சில ஊர்களில் மட்டும் அதுவும் அந்த ஊர் மக்களின் விடா முயற்சியால் இன்று நடத்தப்பட்டு வருகின்றன. இன்று சித்தூர் முதல் குமரி வரை ஜல்லிக்கட்டு நடக்கின்ற ஊர்களில் மட்டுந்தான் நாட்டு மாடு இனங்கள் ஓரளவுக்குப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இன்று தமிழகத்தில் காங்கேயம், புளிக்குளம், மலை மாடு, உம்பளச்சேரி, பருகூர் என ஆறே ஆறு நாட்டு மாடு ரகங்களே இருக்கின்றன எனவும், ஆலம்பாடி உள்பட நூற்றுக்கணக்கான ரகங்கள் அழிஞ்சே போய்விட்டதாக எழுதுகின்றார் ஜல்லிக்கட்டு ஆர்வலர் ஹிமாகிரண் அனுகூலா.

ரேக்ளா, ஜல்லிக்கட்டு, கம்பாளா என மாடுகள் சார்ந்த விளையாட்டுகள் தடையால் அதில் பயன்பட்டு வந்த லட்சகணக்கான மாடுகள் அடிமாட்டுக்கு விற்கப்பட்டு வருகின்றன. ஏழை விவசாயிகளிடம் குறைந்த காசுக்கு தரகர்களால் இவை வாங்கப்பட்டு, மாட்டுக் கறி இறைச்சியாக வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இந்த ஏற்றுமதி தொழில் ஈடுபட்டு வருபவர்களே மத்திய அரசியல் கட்சிக்காரர்களே என்பது தனிக்கதை.

*

ஆனால், ஜல்லிக்கட்டு போட்டிகளின் சில சந்தர்ப்பங்களில் மிளகாய் தூள் தூவுவது, சாராயம் பருக்குவது, போன்றவைகள் இடம்பெறவே இல்லையென சொல்லிவிட முடியாது.

அதே போல ஒழுங்கமைக்கப்பட்ட விதிகளுக்கு உள்பட்டு வீரர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பாதுகாப்பான சூழலில் ஜல்லிக்கட்டு பெரும்பாலான சமயங்களில் நடைப்பெற்றதில்லை என்கிற குற்றச்சாட்டை நம்மால் முழுமையாக புறந்தள்ளிவிட இயலாது. காளைகளை அடக்க முயன்று பலர் இறந்திருக்கின்றனர். வேடிக்கைப் பார்க்க போன பலர் காயமடைந்தும் உள்ளனர் என்பதும் உண்மை தான்.

கடந்த 2009-2014 ஆகிய ஆண்டுகளில் நடைப்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் தான் ஒழுங்கமைப்பட்டு நேர்த்தியாக விதிகளுக்கு உள்பட்டு அரசின் மேலபார்வையில் நடத்தப்பட்டன. அதிலும் கூட சில ஊர்களில் சிலரது விதிமீறல்கள் தான், ஜல்லிக்கட்டை தடை செய்ய துடித்த விலங்குகள் நல அமைப்பினருக்கு வாய்ப்பாக அமைந்தது என்பதை நாம் புரிந்து கொண்டால் மட்டுமே எதிர்காலத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை எவ்வித சிக்கலில்லாமல் நடத்த முடியும்.

*

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் ஸ்பெயின் முழுவதிலும் எருதுச் சண்டைக்கு தடை கொண்டு வர விலங்குகள் நல அமைப்புக்கள் போராட்டத்தில் குதித்தன. ஒரு கட்டத்தில் ஸ்பெயின் உச்சநீதி மன்றத்திற்கு வழக்கு சென்றது.

ஆனால், ஸ்பெயின் உச்சநீதிமன்றமோ எருதுச் சண்டை தடை சட்டவிரோதமானது எனவும். கலை, பண்பாட்டு சார்ந்த விசயங்களை தடுக்கக் கூடாது எனவும், ஜல்லிக்கட்டு அந்நாட்டின் பாரம்பரிய அடையாளம் எனவும் உத்தரவிட்டது. ஸ்பெயின் அரசும் அதை பண்பாட்டு பாரம்பரிய அடையாளம் என அறிவித்து சட்டமியற்றியது.  அப்படிப் பட்ட எருதுச் சண்டைக்கு எதிராக பீட்டா போன்ற அமைப்புகள் மட்டுமில்லை, ஐரோப்பிய யூனியன் கூட கேட்கத் தயங்குமளவிற்கு, ஸ்பானியர்கள் எருதுச் சண்டையை தடை செய்ய முடியாது என தெளிவாகச் சொல்லிவிட்டனர். ஏனெனில் தேசிய அரசாங்கம் ஸ்பானியர்கள் கையிலிருக்கின்றது. அதனால் அவர்களுடைய பண்பாட்டை அவர்களால் பேண முடிகின்றது.

இந்தியாவிலோ தமிழர்கள் சிறுபான்மையினர். ஆனால், ஜல்லிக்கட்டு மட்டுமில்லை நமது மொழியை, நமது பண்பாட்டை, நமது மண்ணை நம்மால் தமிழ்நாட்டளவில் கூட பேண முடியாமல் திணறுகின்றோம் என்பது தான் வருத்தமளிக்கின்றது.

*

ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டக் களத்திலிருந்த இளைஞர்கள் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்திக வருமாறு வேண்டுகோள் விடுத்தனர். போராட்டக் குழுவினர் காட்சி விலங்குகள் தடைப் பட்டியலிலிருக்கும் காளையை நீக்கவும், விலங்குகள் வதை தடைச் சட்டத்தை திருத்தி உடனடி சட்டத் தீர்வை மத்திய அரசு ஏற்படுத்தவும் கோரினர். தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இதனை இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் எடுத்துச் சென்ற போது, தடைப் பட்டியலிலிருக்கும் காளையை நீக்கவோ, உடனடி சட்டம் கொண்டு வரவோ முடியாது என நழுவிக் கொண்டார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், அதில் தலையிட விரும்பவில்லை எனச் சொல்லிவிட்டார்.

இதனால் ஜல்லிக்கட்டு வழக்கில் இடைக்கால தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றத்திடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் இடைக்கால தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

அதையடுத்து மத்திய அரசின் ஆலோசணைப் படியும், பிற வழக்கறிஞர்களின் கலந்தாலோசணைக்குப் பிறகு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டுக்கான புதிய சட்ட வரைவைக் கொண்டு வர முடிவு செய்தார். அதன் படியே போராட்டத்தையடுத்து ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்வது தொடர்பான அவசர சட்டத்தை தமிழக அரசு கடந்த 21-ம் தேதி பிறப்பித்தது. இந்தச் சட்டத்திற்கு மத்திய உள்துறை, சுற்றுச்சூழல்துறை, சட்டத்துறை அனுமதி அளித்தது. பின்னர் ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்த பிறகு, தமிழக கவர்னர் அவசர சட்டத்தை பிறப்பித்தார். ஆனால் போராடிய மாணவர்கள் நிரந்தர சட்டம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

எங்கே இந்த போராட்டங்கள் மிகத் தீவிரமடைந்து ஜல்லிக்கட்டையும் கடந்து மற்ற சமூக பொருளாதார பிரச்சனைகளை நோக்கி நகருமோ என்ற அச்சம் ஏற்பட்டதன் விளைவோ என்னவோ,  ஜனவரி 23-ந் தேதி மாநில அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வரவும், மத்திய அரசும் ஜல்லிக்கட்டுக்கு அது போட்டிருந்த முட்டுக்கட்டைகளை தளர்த்திக் கொண்டு ஜல்லிக்கட்டு நடக்க வழி விட்டு ஒதுங்கியுள்ளது.

இந்த போராட்டங்களால் ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கியது மட்டுமின்றி, பாரம்பரிய பொருளாதாரம் சார்ந்த ஒரு விழிப்புணர்வும் மக்களிடையே ஏற்படத் தொடங்கியுள்ளது. பாரம்பரிய பொருளாதாரங்களை அழித்து அதன் மேலே ஒரு வணிக சந்தையை உருவாக்க எத்தனிக்கும் பன்னாட்டு அளவிலான சமூக பொருளாதார அரசியலையும், கால்நடை சார்ந்த பாரம்பரிய வரலாற்று தொடர்புகளையும் நோக்கி நமது பார்வையை திருப்புவதற்கான காலம் கனிந்துள்ளது.

இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இளைஞர்கள் எழுச்சி வெறும் ஜல்லிக்கட்டுக்காக மட்டும் கூடிய கூட்டமாக தோன்றவில்லை பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக  மத்திய மாநில அரசுகளால் தமிழ் மண் தொடர்ந்து சுரண்டப்பட்டும், ஏமாற்றப்பட்டும், வஞ்சிக்கப்பட்டும் வருகின்றமையின் ஒட்டுமொத்த மனக்குமுறல்கள் தான் இன்று ஜல்லிக்கட்டு என்ற ஒற்றைப் பண்பாட்டு அடையாளத்தின் மூலம் வெளிப்படுத்தப்படுவதாகவே கருத முடிகின்றது.

இந்த எழுச்சி இனிவருங்காலங்கில் தொடர்ந்து வெளிபடுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும் என்றே தோன்றுகின்றது. அதனால் தான் என்னவோ மத்திய மாநில அரசுகள், மிக அவசரம் அவசரமாக மாணவர் போராட்டங்களை காவல் துறையினரை ஏவி ஒரு முடிவுக்கு கொண்டு வந்தனர் என்றே தோன்றுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *