நடமாடும் பேய்கள்

கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் பல பேய் படங்களை பார்த்துவிட்டேன். ஒரு காலத்தில் காதல் படங்கள் தமிழில் திரண்டாக இருந்து வந்தது. இப்போது அது மாறி பேய் படங்கள் என்றாகிவிட்டது. தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் பல பேய் படங்கள் வெளியாகிவருகின்றன. தமிழில் பீட்சா, முனி, காஞ்சான போன்ற பல படங்களின் அடுத்தடுத்த வெற்றியால், தொடர்ந்து பேய் படங்கள் பல வெளியாக காரணமாக இருந்தது எனலாம். பெரும்படங்கள் தான் என்றில்லை, ஊடூப்பை திருப்பினால் கூட குறும்படங்களில் கூட பல பேய் படங்கள் வருவது ஆச்சரியப்படுத்தியது என்னை.

பேய்கள் என்றாலே சிறுவயதில் ஆச்சியம்மா கிழவி, எனது அம்மாச்சியின் அம்மா சொல்லிய பல கதைகள் தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றது. அவர்கள் எங்களை எல்லாம் கூட்டி வைத்து கூறும் அமானிசிய கதைகள், பேய்க் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் என்பவை தான் இன்றும் ஞாபகத்துக்கு வரும் எனலாம். அதிலும் பேய்க் கதைகள் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம். என்றாவது ஒரு நாள் ஒரு பேயைப் பிடித்துக் குடுவைக்குள் அடைத்து பெரிய கெட்டிக்காரன் என்ற பெயர் வாங்கிவிட வேண்டும் என்று அப்போது எல்லாம் நினைப்பேன்.

அதுவும் அப்போது தான் எங்கள் வீட்டில் தொலைக்காட்சி வந்திருந்த சமயம். சன் டிவியில் என்னென்னவோ பேய் நாடகங்கள் எல்லாம் போடுவார்கள். இன்றுள்ள எத்தனை பேருக்கு இவை எல்லாம் நினைவில் இருக்கின்றது எனத் தெரியவில்லை. தொண்ணூறுகளில் சன் டிவியில் வெளியாகி சக்கைப் போடு போட்ட ஜென்மம் X, பஞ்சமி, விடாது கருப்பு, மந்திர வாசல் என அடுக்கிக் கொண்டே போகலாம். என்ன தான் பயமுறுத்தினாலும் எங்கள் தெருவில் உள்ள வாண்டுகள் எல்லாம் அவற்றை ஒன்றுவிடாமல் பார்த்துவிடுவோம். அதுவும் தூரதர்சனில் ஒளிபரப்பிய இந்தி டப்பிங் நாடங்களான விக்ராம் வேதாள், தாதா தாதி கி ககானி எனப் பல தொடர்களும் கனவுலகுக்கே எங்களை அழைத்துச் சென்றது. இன்றுள்ள தொடர்கள் போல கொலை, கொள்ளை, காமம், பழிவாங்கல் எல்லாம் அப்போது மிகக் குறைவு.

இவையோடு ஊரில் கிளப்பிவிடப்படும் புரளிகளை எல்லாம் சேர்த்து குழப்பி அவனவன் ஒரு கதை சொல்லிக் கொண்டிருப்பான். அதுவும் பழைய பங்களாக்கள், வீடுகள் எதாவது இருந்தால் அவ்வளவு தான் கதை பற்றிக் கொள்ளும். விருகம்பாகத்துக்கு அருகே நூறாவது நாள் கொலை வீட்டுக் கதையை அப்பா வேறு அடிக்கடி சொல்லுவார். அதையும் கேட்டு நடுக்கமே வந்துவிடும். இப்போது அந்த வீடு இடிக்கப்பட்டு விட்டது.

*

சிறுவயதில் எங்கள் பக்கத்து வீட்டு அக்கா ஒருவர் இருந்தார். அவர் சேலம் பக்கத்தில் இருந்து எதோ ஒரு ஊரில் இருந்து வீட்டு வேலைக்கு வந்தவர்கள், அவர்கள் வேறு பல பல பேய்க் கதைகளை எடுத்துவிடுவார்கள். இதை எல்லாம் மொத்தமாக உருவகித்துத் தனியாகப் போனாலே எதோ பேய் நம்மைப் பின் தொடர்ந்து வருவதாகவே தோன்றும். பழைய சினிமா பாடல்கள் வேற பேய் பயத்தைக் கிளறி விடும், குறிப்பாக “நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை”, MSV அவர்களின் இசையும், பி.சுசீலாவின் குரலும் கேட்பவர்களைக் கொஞ்சம் அச்சமூட்டவே செய்யும்.

பேய் குறித்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கியதுகொஞ்சம் வளர்ந்து பெரியவனான பின்னர் தான். மகாநதியில் வரும் பேய்களை நம்பாதே பிஞ்சிலே வெம்பாதே பாடல் தான் பேய் என்ற ஒன்று இருக்கா என மறுபரிசீலணை செய்ய வைத்தது எனலாம். வீட்டுக் கல்வியில் இருந்து மாறி முழு நேர பள்ளிக் கல்விக்குப் போன பின், அதிகம் வாசிக்கத் தொடங்கினேன். வாசிப்புக் கொஞ்சம் கொஞ்சமாகப் பேய்கள் குறித்த பயத்தை நீக்கி தெளிவுகளை உண்டாக்கியது எனலாம். திராவிட இயக்கங்கள் வெளியிட்ட பல குறுநூல்கள், பல அறிவியல் சார்ந்த கட்டுரைகள், புத்தகங்கள் எனப் பலவற்றையும் வாசிக்கத் தொடங்கிய பின் பேய்கள் குறித்த பயம் விலகியே போனது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா என்ற திரைப்பாடல் குறித்த செய்தி தமிழ் பாடநூலில் வந்திருந்தது.

வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
விளையாட போகும்போது சொல்லி வைப்பாங்க – உந்தன்
வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூலையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே – நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்தது வெம்பி விடாதே
நீ வெம்பி விடாதே

இப்பாடல் அரசிளங்குமாரி என்ற திரைப்படத்தில் ஜி.ராமநாதன் இசையில் TM சௌந்தர்ராஜன் குரலில் ஒலிக்கும் பாடல்.

அதை விளக்கிய எனது தமிழாசிரியர் பேய்கள் குறித்த முழு விளக்கத்தையும் கொடுத்தார். எப்படி மனிதர்கள் பேய்கள் குறித்துக் கற்பனை செய்து கொள்கின்றார்கள் அது குறித்த தொன்ம புனைவுகள், கதைப் பின்னல்கள், கலாச்சாரப் பின்னணிகள் என மனிதர் தூர்வாறி விடுவார். அது முதல் பேய்கள் குறித்த முழு அச்சமும் போயே போய்விட்டது எனலாம்.

ஆனாலும் சிறு வயதில் விதைக்கப்படும் பேய் பயம் பலருக்கும் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது என்பது தான் உண்மை.

*

அண்மையில் எனது தோழி ஒருத்தியுடன் தொலைபேசிக் கொண்டிருக்கும் போது அவளது குடும்பத்தார் குடியிருந்த ஒரு வாடகை வீட்டில் ஏற்பட்ட அச்சத்தைக் குறித்து விளக்கிக் கொண்டிருந்தாள். எதோ ஒரு உருவம் தம்மைக் கண்காணிப்பது போல உணர்வதாகவும், சமைத்து சாப்பாடு கெட்டுப் போய்விடுவதாகவும் கூறினாள். அவளிடம் எதை எப்படி எடுத்துச் சொல்வது என எனக்குத் தெரியவில்லை. ஆன போதும் நான் கூறிய ஒரே விடயம், பேசாமல் வீட்டை மாற்றிவிடு என்பது தான். ஏனெனில் பேயை நம்புவோர் பலருக்கும் பேய் இல்லை என விளக்கம் எவ்வளவு கொடுத்தாலும், முருங்கை மரம் ஏறும் வேதாளம் போலக் கடைசியில் பேய் இருக்கின்றது தான் என வாதிட தொடங்கிவிடுவார்கள்.

ஆனால் ஓரளவுக்குப் புரிந்துணர்வு உள்ளவர்களுக்கு எடுத்துரைக்கலாம். அதுவும் பல உளவியல் குறைபாடுகளும், மனப்பிறழ்வுகளின் அறிகுறியும் பேய்கள், பிசாசுகள் போன்ற நம்பிக்கைகளோடு பிணைக்கப்பட்டுத் தவறாகச் சமூகத்தில் எடுத்தாளப்பட்டு வருகின்றது.

பேய்கள், பிசாசுகள் போன்றவைகள் மீதான நம்பிக்கை மனித சமூகங்களில் தொன்று தொட்டே இருந்து வருகின்றது. இருட்டைக் கண்டு அஞ்சிய மனிதர்கள் பிற்காலத்தில் பேய்கள், பிசாசுகள், ஆவிகள், தேவதைகள், கடவுள்கள், தெய்வங்கள் என ஒவ்வொரு உணர்வையும் மாந்த உருவாக்கம் செய்து கொண்டு விட்டனர். அதுவும் பழங்கதைகள், நாட்டுப்புற இலக்கியங்கள் தொட்டு இதிகாசங்கள், இலக்கியங்கள் எனத் தொடர்ந்து இன்று சினிமா வரை பேய்க் கதைகள் இருந்து கொண்டே உள்ளது. ஆனால் அவை யாவும் உண்மையே என நம்பத் தொடங்கும் போது பலருக்கும் சிக்கல் எழத் தொடங்கிவிடுகின்றது.

அதுவும் இறப்பு, இறப்பின் பின்னரான வாழ்க்கை, ஆன்மா, மதங்கள் அவை சொல்லும் கதைகள் எனச் சிலரிடம் இவற்றை வெளிப்படையாகப் பேசவே முடியாது. ஏனெனில் தமது நம்பிக்கையைப் புண்படுத்திவிட்டதாகச் சண்டைக்கே வந்துவிடுவார்கள்.

கொஞ்ச நாள்களுக்கு முன் ராஜ் டிவியில் பாடல் நிகழ்ச்சியில் ஒரு பெண் வந்து பேய்கள் எல்லாம் விஞ்ஞானத்தின் படி உண்மை என்பது போலக் கூறிக் கொண்டிருந்தார். என்னடா இது? எந்தக் காலத்தில் பேய்கள் அறிவியலில் ஏற்றுக் கொள்ளப்பட்டது எனத் தொடர்ந்து கேட்கும் போது தான், அவர் எதோ இணையத் தளங்களில் மேய்ந்து விட்டு கதையளந்து கொண்டிருந்தார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

*

பேய்கள் பற்றி அதிகமாக நம்புவோர்கள் சொந்த அனுபவத்தில் எதோ ஒரு கட்டத்தில் பேய்கள் இருப்பதாக உணர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். பலரைப் பொறுத்தவரை பேய்கள் வெள்ளை உருவில், பெண்ணாகவோ அதிகம் இருக்கின்றது. சில சமயங்களில் பொருட்களை அசைப்பது, மெல்லிய ஒலி எழுப்புவது போன்றவைகளையும் அவதானித்ததாகக் கூறுகின்றனர்.

ஆனால் பேய்களை நம்புவோர் ஒரு விடயத்துக்குப் பதில் கூறுவதே இல்லை. உடலுக்கு ஆன்மா இருக்கு என்று வைத்துக் கொண்டாலும், ஏன் பலரும் காணும் பேய்கள் ஆடையோடு வருகின்றன. உடல் அழிந்துவிட்ட நிலையில் ஆடையைப் பேய்கள் எவ்வாறு அணிய முடியும், அல்லது உயிரற்றவைகளுக்கும் ஆன்மாக்கள் உண்டா என்ன?

அதே போலக் கொல்லப்பட்ட துர்மரணம் அடைந்தவர்கள் ஆவியாக உலாவுவார்கள், பழிவாங்குவார்கள் என்றால் ஏன் இன்னும் உலகின் பல கொலைவழக்குகள் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றது. ஏன் காஞ்சிபுரம் சங்கரராமன் கூட ஆவியாக வந்து தம்மைக் கொன்றவர்களைப் பழிவாங்கி இருக்கலாமே. ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லையே, அவரைக் கொன்றோர் எல்லாம் சுதந்திரமாகத் தானே சுற்றித் திரிகின்றார்கள்.

குறிப்பாகக் கடந்த நூற்றாண்டில் பேய்களோடு பேசுகின்றேன், ஆராய்கின்றேன் பேர்வழிகள் என்னென்னவோ உபகரணங்களான மின்காந்த அலைகள், மைக்கிரோபோன்கள் எனப் பலவற்றையும் வைத்து ஆராய்ந்துவிட்டு தாமும் அறிவியலாளர்கள் என்கின்றார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் ஒருவரும் கூடப் பேய்கள் இருக்கின்றன எனத் தக்க சான்று அளித்ததே இல்லை. பில்லி, சூனியம், மை போடுதல் போலப் பழைய டெக்னிக்குகள் போன்று புதிய டெக்னிக்குகளைப் பயன்படுத்திக் கற்றோரிடம் இருந்தும் பணம் பறிக்கும் வழி தான் இதுவும்.

இதை விட இன்னும் சிலரோ பேய்களைக் கண்டறியும் அளவுக்கு அறிவியல் வளரவே இல்லை எனக் கதை விடுபவர்கள். செவ்வாய்க் கிரகத்தையும், உயிரணுக்களைப் பிளந்தும், அண்டங்களையும் துலாவி கொண்டிருக்கும் இந்தக் கால அறிவியலில் புலப்பட வைக்க முடியவில்லை என்றால் இதைவிட வளர்ச்சி கண்ட உபகரணங்களைக் கொண்டு வந்தாலும் பேய்கள் அகப்படாது. ஏனெனில் அப்படி ஒன்று இருந்தால் தானே அகப்படுவதற்கு.

பேய்களைத் தேடுவோர் என அமெரிக்காவில் பல குழுக்கள் செயல்படுகின்றன. அவை யாவும் பேய்கள் இருக்கின்றன என ஒரு தக்க சான்றையும் இதுவரை முன் வைக்கவில்லை. அப்படி வைத்திருந்தால் நோபல் பரிசே கிடைத்திருக்கும். மாறாகப் பேய்கள், பிசாசுகள், ஆவிகள், தேவதைகள், தெய்வங்கள் என நாம் பலரும் நம்பிக் கொண்டிருப்பவைகள் எண்ணத்தில் உருவாக்கப்பட்டு, எண்ணத்தில் கடத்தப்பட்டு, எண்ணத்திலேயே நிலைத்து நிற்கும் ஒரு கற்பிதமே. குறிப்பாக மூளை இத்தகைய கற்பிதங்களை இல்லாத நிலையிலும் இருப்பது போலக் காட்டிவிடும். அதனால் தான் சிலருக்குப் பேய்கள் உள்ளது போலவும், அசரீரிகள் கேட்பது போலவும் உணர்வு ஏற்படுகின்றன. சிலருக்கோ கண்கள் முன் உருவம் கூட தென்படும்.

போதைப் பொருட்களை உட்கொண்டாலோ, மனச்சிதைவு நோய்களுக்கு உள்ளானாலோ, மூளையில் அடிப்பட்டாலோ, கடுமையான தியானங்கள் போன்றவற்றில் ஈடுபட்டாலோ கூட இல்லாதவைகளும் இருப்பதாக உருவகித்துக் கொள்ளும் நிலைக்கு மூளை வந்துவிடும் என்பது தான் அறிவியல் கூறும் உண்மை ஆகும்.

நவீன உளவியல் தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் சிக்மண் பிராய்டு மனித உளவியல் பரிணாமத்தில் பேய்கள் குறித்த சிந்தனை பல விதங்களில் உதவியிருப்பதாக தெரிவிக்கின்றார். என்ன தான் அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்திருந்தாலும் இறப்பு, பேய்கள், ஆவிகள், தெய்வீகங்கள் குறித்த மனித சிந்தனை பெரியளவில் மாற்றம் காணவில்லை என அவர் கூறுகின்றார். இறப்பு குறித்த மனித சிந்தனையும் அது சார்ந்த அறிவார்ந்த மர்மங்களும் அவிழ்க்கப்படாத வாழ்வியல் புதிர்களும் பேய்கள் குறித்த நமது நம்பிக்கையை தக்க வைக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக சிக்மண் பிராய்டு On Murder, Mourning and Melancholia என்ற தமது கட்டுரைத் தொகுப்பில் எழுதுகின்றார்.

பேய்கள் உண்மை இல்லை என்றாலும், பேய்கள், தெய்வங்கள் போன்றவற்றைப் பின்னணியில் வைத்து உருவாக்கப்படும் தொன்மப் புனைவுகள், கதைகள், திரைப்படங்கள் எனப் பலவும் மனிதர்களுக்குச் சுவாரசியத்தையும், திகில் உணர்வையும் அளிக்கின்றன என்பது மட்டும் நிச்சயம். அதனைப் பலரும் விரும்பவும் செய்கின்றனர். அது வரை பேய்க் கதைகள் நம்மில் உலாவிக் கொண்டே இருக்கும்.

– தமிழ் வண்ணன்

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *