அரசியலில் தமிழ் இளைஞர்கள்

தமிழ் நாட்டில் ஓர் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தைத் தொடர்ந்து மாறி மாறி ஆட்சி செய்து வந்த தலைமைகள் மாறிவிட்டன. ஒருவர் காலமாகிவிட்டார், மற்றொருவர் காட்சியிலிருந்து மறைந்துவிட்டார். இது வரை காலமும் தமிழ் நாட்டு மக்கள் இந்த இருவர் தலைமையிலான ஆட்சியையே மாறி மாறித் தேர்ந்தெடுத்து வந்தனர். ஆனால், இனி யாரை மக்கள் தேர்ந்தெடுக்கப் போகின்றனர் என்ற பெருவினா அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் மத்தியிலும் காணப்படுகின்றது.

ஒரு தேசம் அதன் ஆட்சியாளர்களாலேயே வழிநடத்தப்படுகின்றது. அதன் ஆட்சியாளர்களை மக்கள் வழி நடத்த வேண்டும் அது தான் ஜனநாயத்தின் சாராம்சமே. அதனால் தான் இந்த நவீன காலத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஜனநாயக ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது. இந்திய ஒன்றியத்தின் அரசியல் நிலையும் அதுவே, அதனால் இந்த ஒன்றியத்தில் ஐக்கியப்பட்டு கிடக்கும் தமிழ் நாட்டின் அரசியல் நிலையும் அதுவே தான்.

ஆனால், முழு ஜனநாயகம் என்ற கனவில் பிரித்தானியரிடமிருந்து விடுதலைப் பெற்றிருந்த போதும், இந்திய ஒன்றியமானது இன்னமும் மேலை நாடுகளின் கைப்பாவையாகவே இருந்து வருகின்றது. இங்கு முழுமையான மக்களாட்சி இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. புறத்தோற்றத்தில் முழுமையான குடியரசு என இந்தியா அறிவித்துக் கொண்டிருந்தாலும் பன்னாட்டுச் சமூக பொருளாதார அரசியல் சூழலில் இந்த இந்திய ஒன்றியம் ஐரோப்பாவிடமும், அமெரிக்காவிடமும் கைகட்டி வாய்பொத்தி நிற்கும் நிலை தான் உள்ளது. நம் நாட்டை ஆட்சி செய்வோர் இந்த அந்நிய நாட்டரசுகள் போடும் திட்டத்திற்கும் இந்த அந்நிய நாடுகளிலிருந்து வருகின்ற வணிக நிறுவனங்களிடம் கட்டுப் பட்டும் தான் காலத்தை ஓட்டுகின்றன.

அதனால் எண்ணற்ற இயற்கை வளங்கள், மக்கள் வளங்கள், நல்ல தட்ப வெட்பம், ஏதுவான புவியியல் வாய்ப்புகள் இருந்தும் நம் மக்கள் வறுமையில் உழல்கின்றனர், வாழ் வாய்ப்புகள் தேடி அந்நியர்களின் கதவுகளை தட்டுகின்றனர், நம் மூதாதையர் விட்டுச் சென்ற இயற்கை வளங்களை கண்முன்னே அழிந்து போவதை மௌனிகளாகக் கண்டு நகர்கின்றனர், தம் வாழ்வும் வளமும் எங்கேயோ இருக்கின்ற மேலை நாடுகளிடம் அடகு வைக்கப்படுவதை அறிந்தும் அறியாமலும் வாழ்வைக் கடத்துகின்றனர், நிலம் நீர் காற்று என அனைத்தும் அழிக்கப்பட்டு நஞ்சூட்டப்பட்டு வாழத் தகுதியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு நாளை நம் சந்ததிகள் இங்கு உயிரோடு வாழ முடியுமோ என்ற கேள்விக் குறியோடு மாண்டு போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர், தம் சொந்த மண்ணிலே தம் சொந்த மொழியையும், பண்பாட்டையும், வாழ்க்கை முறையையும் பின்பற்ற முடியாமல் யார் யாருக்கோ கட்டுப்பட்டு அவற்றை எல்லாம் காவு கொடுக்கும் துர்ப்பாக்கிய நிலைக்குப் போயுள்ளனர்.

இன்று இந்த நாட்டில் தன்னலம் பிடித்த பெருமுதலாளியரும், ஊழல் செய்தே வாழும் அதிகாரியரும், பணமே பிரதானமே என்ற கனவில் ஓடித்திரியும் அரசியல்வாதியரும், அவர்களுக்குச் சலாம் போடும் காவல் துறையினரும் மட்டுமே எங்கும் எதையும் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சாதாரண விவசாயிகள் தினம் தினம் மாண்டு போகின்றனர், அவர்கள் கேட்பது எல்லாம் ஒன்றே ஒன்று தான் தண்ணீர். ஆனால், அந்தத் தண்ணீரை பெற்றுத் தர முடியாமல் நம் அரசியல் பிரதிநிதிகள். ஏழை மீனவர்கள் பக்கத்து நாட்டு ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர், ஆனால் அவற்றை தட்டிக் கேட்க இந்திய ஒன்றியத்தின் மத்திய அரசிற்குத் திராணியில்லை. ஆனால், எங்கோ அமெரிக்காவில், ஆஸ்திரேலியாவில் சுடப்படும் தம்மவருக்காக ஓடிப் போய் நியாயம் கேட்கின்றனர். தமிழருக்காக நியாயம் கேட்க யாருமில்லை.

பல லட்சம் கோடிகளை வங்கிகளிலிருந்து கடனாய்ப் பெற்றுக் கொண்டு திருப்பிச் செலுத்தாமல் கொழுத்துப் போகும் அம்பாணிகளுக்கும், அடானிகளுக்கும் வழி சமைத்துக் கொள்ள வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி சிறுக சிறுக சேமித்த சாதாரண மக்களின் பணத்தை செல்லாக்காசாக்கி நம் வங்கிகள் கொள்ளையடித்துக் கொண்டன. இதனால் திவாலாகும் நிலையிலிருந்து நம் வங்கிகள் தப்பித்துக் கொள்கின்றன.

எங்கோ இருந்து வருகின்ற விசாக் கார்டு காரனும், மாஸ்டர் கார்டு காரனும் வியாபாரம் செய்ய இந்த நாட்டு மக்களைக் காசில்லா பண பரிவர்த்தனைக்குள் பிடித்துத் தள்ளப்படுகின்றனர். ஏழை மக்களின் சொற்ப காசுகளை வங்கிகளுக்குள் கொண்டு வரக் கட்டாய வங்கிக் கணக்கு தொடங்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். ஆனால், பல ஆயிரம் கோடிகளை சுருட்டிக் கொண்டவரை ராஜ மரியாதையோடு வெளிநாட்டுக்குத் தப்பவைக்க உதவுகின்றனர். அதே சமயம் சில ஆயிரம் ரூபாய்களைக் கட்டமுடியாமல் தவிக்கும் ஏழை விவசாயியைக் காவல்துறையோடு சேர்ந்து நம் வங்கிகள் அடித்து நொறுக்குகின்றனர்.

அந்நிய நிறுவனங்கள் தொழில் செய்ய நம் நாட்டு நிலங்களையும், நீர்வளங்களையும் இலவசமாகச் சுரண்ட சட்டங்கள் போடப்படுகின்றன. ஆனால், விவசாயம் செய்ய ஒரு ஏழை விவசாயிக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரப்படுவதில்லை. மாறாக பெட்ரோல், மீத்தேன் என ஹைட்ரோகார்பன் எரிபொருள்களை எடுக்கவும், நியூற்றினோவை எடுக்கவும், கெயில் பம்புகளைப் போடவும், அணுமின் நிலையங்களைக் கட்டவும் நிலங்களை விற்றுவிட்டு பஞ்சம் பிழைக்க பஞ்சப் பரதேசியரை நகரங்களுக்குள் ஓடுங்கள் எங்கிறது நம் பேரன்பு மிக்க அரசாங்கங்கள்.

ஆம் ! இந்த நிலையில் தான் நம் இளைய சமூகம் சற்றே விழித்திருக்கின்றது. சினிமா என்னும் காம வலைக்குள்ளும், கிரிக்கெட் என்னும் மோக வலைக்குள்ளும், மேற்கத்திய வாழ்க்கைமுறை என்ற மாய வலைக்குள்ளும் தொடர்ந்து சிக்கவைக்கப்பட்ட நம் தமிழ் இளைய சமூகம் சற்றே விழித்திருக்கின்றது. மதுவிற்கு எதிரான போராட்டங்கள் தொடங்கி, ஜல்லிக்கட்டு போராட்டங்கள் என இளைய சமூகத்தின் கரங்கள் உயர்ந்திருப்பது தான் இன்றைய நிலையில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆசுவாசம் தருவதாகவும் நாளைய தமிழ்நாடு நோக்கிய நம்பிக்கை ஓளி வீசவைப்பதாகவும் இருக்கின்றது.

ஆனால், இந்த அவசர யுகத்தில் பாஸ்ட் புட் கடைகளில் உணவை விழுங்கிவிட்டு டிவிட்டரில் உலகை அறிந்துவிட்டு ஓடிக் கொண்டிருக்கும் புதிய சமூகம் எங்கும் எதிலும் அவசரப்பட்டு விடுமோ என்ற அச்சம் பலருக்கும் ஏற்படுகின்றது. ஏனெனில் இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் வெற்றிடத்தை நிரப்பக் கூடிய நிலையில் இருப்பவர்கள் நம் இளைஞர் சமுதாயமே. ஆனால் அரசியல் என்பது வெறும் விளையாட்டல்ல களத்தில் இறங்கியது மட்டையைச் சுழற்றி சிக்சர்கள் அடித்துவிட. அரசியல் என்பதுக் கலை. அது சற்றே சிக்கல் மிக்க இடியப்பம் போன்றது. சாணக்கியர் காலந்தொட்டே பொறுமையும், தொலைதூர சிந்தனையும் கொண்டோரால் மட்டுமே அக் கலையை கற்றுக் கரைத்துக் குடித்து வெற்றி பெற முடிந்திருக்கின்றது. வெற்றி பெற்றோரில் பலரும் அவ வெற்றியை நாட்டு மக்களுக்கு மகுடமாக்காமல் தம் மக்களுக்கு வாழ்வாதாரமாய் கட்டியெழுப்பியது தனிக் கதை.

நவீன வரலாற்றிலேயே மிகப் பெரிய பிரான்சு சாம்ராச்சியத்தின் அதிகார வர்க்கத்தைத் தூக்கி எறிந்த பிரஞ்சு புரட்சியை பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். மக்களின் நலன்களை காவு கொடுத்துவிட்டு ஆளும் அதிகார வர்க்கத்தினதும், செல்வச் சீமான்களின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு ஆட்சி செய்த வந்த பிரான்சின் மன்னர் லூயியின் ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்தனர். அதன் பின்னணியில் பல எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களும் தூங்கிக் கொண்டிருந்த மக்களைத் தட்டி எழுப்பினர். அதில் முக்கியமானவரான ழான் பால் மாராத் வெளியிட்ட 62 பக்க பிரசுரத்தை வாசித்தால் அது இன்றளவு கூடப் பொருந்தி நிற்பதைக் கண்டு அதிசயித்துப் போவீர்கள். ழான் பால் மாராத் அப்போதைய பிரான்சின் நிதியமைச்சர்களை நோக்கிக் கூறுகின்றார், “தம் எஜமானியருக்கு துரோகம் செய்பவர்களே, அதிகாரிகளின் துணையோடு தம் குற்றங்களை மூடி மறைப்பவர்களே, நீங்கள் இந்தத் தேசத்தை பெரும் படுகுழியில் தள்ளிக் கொண்டிருக்கின்றீர்கள்” என்கிறார். இங்கு எஜமானியர் என அவர் கூறுவது மக்களைத் தான். ஒவ்வொரு ஆட்சியாளர்களுக்கும் எஜமானியர் பொது மக்கள் தானே ஒழிய அந்நிய நாட்டு நிறுவனங்களோ, உள்ளூர் செல்வச் சீமான்களோ அல்ல. மற்றொரு இடத்தில் அவர் மக்களை நோக்கிப் பேசுகின்றார்,” சீரிய சிந்தனையும், ஒப்பற்ற ஒழுக்கமே மக்கள் பிரதிநிதிகளுக்கு அழகு” என்கிறார். இன்றைய நிலையில் இதை ஒப்பிட்டுப் பாருங்கள் நம் மக்கள் பிரதிநிதிகளுக்கு தொலைநோக்குடைய சீரிய சிந்தனை இருக்கின்றதா ? ஆட்டு மந்தைகளைப் போல 15 நாட்கள் சொகுசு பங்களாவில் அடைத்து வைக்கப்பட்ட போது அவர்கள் அறிவு மங்கியே கிடந்தது. இவர்களுக்கு எங்குள்ளது சீரிய சிந்தனை. அல்லது, இந்தியா முழுவதிலும் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக-க்கள், முனிசிபல் உறுப்பினர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் என அனைத்து மக்கள் பிரதிநிதிகளில் எத்தனைப் பேர் ஒப்பற்ற ஒழுக்கமுடையோராய் இருக்கின்றனர் சொல்லுங்கள். ழான் பால் மாராத் மீண்டும் இளைஞர்களை நோக்கிச் சொல்கின்றார், “உங்களது செல்வங்களை காப்பாற்றுங்கள், உங்களது தன்மானத்தை காப்பாற்றுங்கள், உங்களது குடும்பங்களின் அன்பைக் காப்பாற்றுங்கள், உங்கள் நாட்டைக் காப்பாற்றுங்கள் “ என சூளுரைக்கின்றார்.

இன்றைய நிலையில் அரசியல் பாதை நோக்கிப் புறப்பட்டுள்ள தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இந்த வாக்கியங்கள் நிச்சயம் உதவும். ஆனால், ஒவ்வொரு போராட்டத்தின் பின்னிலையில் எதாவது ஒரு சிலர் உடனடியாக ஒரு கட்சியை தோற்றுவிப்பதும், முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுவதுமாகவே இருப்பது சரியானதாகத் தோன்றவில்லை. இவ்வாறு தோன்றும் பேப்பர் ஸ்டாம்பு கட்சிகள் காலப் போக்கில் மின்னிமின்னி பூச்சியைப் போல காணாமல் போய்விடுகின்றன. அல்லது இளைஞர் சக்தியை திசை திருப்பி அரசியலில் நம்பிக்கை இழக்கச் செய்து வழக்கமான வாழ்க்கை முறைக்கு விரட்டப்படும் உத்தியாகிவிடுகின்றன. இலங்கைத் தமிழர் ஆதரவுப் போராட்டத்தின் பின்னரும், மது ஒழிப்பு போராட்டத்தின் பின்னரும், அப்துல் கலாமின் மரணத்தின் பின்னரும், கூடங்குளம் போராட்டத்தின் பின்னரும், இப்போது ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னரும் பல கட்சிகள் உதயமாகிக் கொண்டே இருக்கின்றன. ஆனால், இவற்றால் மக்களுக்கு ஏதேனும் பயன் கிடைத்ததா என்றா ஏதுமில்லை?

இன்று இளைஞர்கள் அரசியலில் குதிக்கவும் தேர்தலில் ஜொளிக்கவும் தீவிரம் காட்டுகின்றனர். இளைஞர்கள் அரசியல் குதிப்பதற்கு யாரும் தடை போடவில்லை. யார் வேண்டுமானாலும் அரசியலில் குதிக்கலாம், தேர்தலில் நிற்கலாம். அதற்கான காலம் கனிந்துள்ளதா என்றால்? ஆம் நிச்சயம் அப்படிப்பட்ட ஒரு கால கட்டத்தில் தான் நாம் நிற்கின்றோம். ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் நாம் செய்ய வேண்டியிருக்கின்றது. அது என்னவென்றால், இளைஞர்களாகிய நாம் நம் அரசியல் சாசனத்தைப் பற்றியும், ஆட்சி முறை பற்றியும், இந்த நாடு எப்படி இயங்குகின்றது என்பது பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொண்டு பின்னர் அரசியல் பாதையில் நடக்கத் தொடங்க வேண்டும்.

இளைஞர்கள் அரசியலில் குதித்தவுடனேயே சாதாரண மக்கள் உங்களுக்கு ஓட்டுப் போட்டு விடுவார்களா என்ன? அவர்கள் முதலில் வீசும் கேள்விகளே, “நீங்கள் யார்? உங்களுக்கு ஏன் வேட்டுப் போட வேண்டும்? இந்தச் சமூகத்திற்கு நீங்கள் இதுவரை ஆற்றிய தொண்டுகள் என்ன? இதோ என்னுடைய இந்தத் தொகுதியிற்கு நீங்கள் செய்த நற்காரியங்கள் தான் என்ன? நான் உங்களுக்கு ஓட்டுப் போட்டால் என்ன தான் செய்வீர்கள்? உங்களை எப்படித் தான் நம்புவது? மற்றக் கட்சிகளைப் போலவும், வேட்பாளர்களைப் போலவும் வெற்றி பெற்ற பின் எம்மை ஏமாற்ற மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? எனது மாநிலத்தை முன்னேற்ற என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? குறைந்தது எனது தொகுதியை முன்னேற்றவாவது திட்டம் எதாவது உண்டா என்ன? ஊழல் நிறைந்த இந்தச் சமூகத்தை எப்படிச் சமாளிக்கப் போகின்றீர்கள்? நாளையே எதாவது பிரச்சனை வந்தால் உங்களை எதிர்ப்போரையும், பெரும் கட்சிகளையும் எப்படிச் சமாளிப்பீர்கள்? அரசியல் குறித்து எதாவது குறைந்த பட்ச அறிவாவது இருக்கின்றதா? ஆட்சிமுறை’ என்றால் என்ன? நிர்வாகமுறை என்றால் என்ன? என்பதாவது தெரியுமா?” என்பார்கள்.

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் உங்களிடம் சரியான பதில் இருக்குமானால், அதற்கேற்ற அனுபவமும் இருக்கும் என்றால் தேர்தலில் குதிக்க நீங்கள் சரியானவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அதைவிட்டு விட்டு ஏற்கனவே தேர்தலில் நின்று வென்றவருக்கு எல்லாம் அரசியல் அறிவு இருந்ததா என எதிர்க் கேள்வி கேட்டால் நீங்கள் சரியானவரல்ல.

இன்றைய அரசியல் சூழலில் தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். இந்த நாட்டுக்கு நல்லது செய்யக் கூடிய ஒரு மாற்று வேட்பாளரை நிச்சயம் விரும்புகின்றனர். ஆனால், அந்த மாற்றத்தைத் தரவல்லவர் நீங்கள் தான் என உங்களால் நிரூபிக்க முடியுமா? நீங்கள் ஒரு இளைஞர் என்பதாலோ, நீங்கள் படித்தவர் என்பதாலோ, அல்லது ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றவர் என்பதாலோ? ஊரூராய் போய் மரக்கன்றுகளை நட்டுவிட்டு வருவதாலோ? மக்கள் ஓடோடி வந்து உங்களுக்கு ஓட்டுப் போட்டு விடுவார்களா என்ன? அப்படி கனவு கண்டு கொண்டிருப்பீர்களானால் நிச்சயம் நீங்கள் அரசியலைப் பற்றி சிந்திக்கக் கூட லாயக்கற்றவர்கள்.

நான் இதுகுறித்து பலரிடமும் பேசியபோது ஒவ்வொருவரும் அரசியலில் வந்து எதாவது செய்ய வேண்டும் என ஆசைப்படுகின்றார்கள். ஒவ்வொருவரும் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்க நினைக்கின்றனர். அப்படியே தேர்தலில் நின்று எம்.பியாகவோ, எம்.எல்.ஏவாகவ்வோ ஆகிவிடலாம் எனக் கனவு காண்கின்றனர். அப்புறம் என்ன? ஊழல் சக்கரத்திற்குள் சிக்கிக் கொண்டு மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்துவிட வேண்டிய நிலை தான். எனக்குப் புரியவில்லை ஏன் ஒவ்வொருவரும் அரசியல் கட்சி தொடங்க ஆசைப்படுகின்றனர்? அப்படியே ஒரு கட்சியைத் தொடங்கி  ஊழல் மிக்க அரசியல் களத்தில் காலடி எடுத்துவைத்த பின்னர், அக் கட்சியில் உள்ள ஒவ்வொருவரும் அப்பற்ற அழுக்கற்ற நபராகவே இருக்கப் போகின்றனர். மற்ற அரசியல் கட்சிகள் செய்த அதே தவற்றை நம் தமிழ்நாட்டு இளைஞர் சமூகமும் செய்துவிடக் கூடாது. எடுத்தோம் கவிழ்த்தோம் என அரசியலில் அவசரகதியில் நுழைந்து மாற்றங்களைக் கொண்டு வந்து விட முடியாது. கடந்த தேர்தல்களில் பல நல்ல வேட்பாளர்களும், பல இளைஞர்களும், சின்னஞ்சிறிய கட்சிகளும் கூடப் போட்டியிட்டு டெபாசிட்டைக் கூடப் பெறமுடியாமல் போன பரிதாப நிலை ஏற்பட்டதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒட்டு மொத்த உலகமும் பேஸ்புக், வாட்சாப், டிவிட்டருக்குள் அடங்கிவிடவில்லை. அவற்றை வைத்துக் கொண்டு மட்டும் மாற்றங்களைக் கொண்டு வந்துவிட முடியாது. இன்னமும் கோடிக் கணக்கான மக்கள் இந்தச் சமூக ஊடகங்களின் வாசனையைக் கூட நுகராதவராகவே வாழ்ந்து வருகின்றனர். உண்மையான உலகம் இணையத்தில் கிடையாது, அதற்கு வெளியே இருக்கின்றது. நமது சுகமான அறைகளிலிருந்து வெளியே வந்து தெருவில் இறங்கிப் பாருங்கள் உண்மை புலப்படும்.

இன்றைய நிலையில் கிட்ட்த்தட்ட 50 % வாக்காளர்களே ஏற்கனவே உள்ள அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்கின்றனர். மேலும் 20% பேர் அந்தந்த சூழலுக்கு ஏற்றார் போல தம் வாக்கை மாற்றிப் போடக் கூடியவர்கள். மிச்சமுள்ள 30% வாக்களிக்கவே விருப்பமில்லாதவர்கள். இவர்களை எப்படி இளைஞர்கள் தம் பக்கம் திருப்பப் போகின்றனர்.

1948-யில் தோன்றிய திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் அதிகாரத்தை 1967-யில் தான் கைப்பற்றியது. அக்கால கட்டத்தில் ஏற்பட்ட மொழிப் போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களால் உந்தப்பட்ட அக் கட்சியே 20 ஆண்டுகள் உழைத்த பின்னரே அரசியல் அதிகாரத்தை நெருங்க முடிந்தது. அப்படியிருக்க இக் காலக் கட்டத்தில் துரித முறையில் இளைஞர்களால் அரசியல் அதிகாரத்தைத் தொட்டுவிட முடியாது. அது தான் எதார்த்தம். தில்லி, புதுவை போன்ற சிறிய மாநிலங்களில் அது சாத்தியப்படலாம், ஆனால் தமிழ்நாட்டில் அது அவ்வளவு எளிதான ஒன்றல்ல.

அரசியலில் காலடி எடுத்து வைக்க விரும்பும் தமிழக இளைஞர்கள் கட்சி சார்ப்பற்ற 50 % வாக்காளர்களை தம் பக்கம் திரும்ப நினைத்தால், முதலில் அவர்கள் தகுதியானவர்களாகவும், ஊழல் கரையற்றவராகவும் மக்கள் மேடையில் நுழைய வேண்டும். தமிழ்நாட்டின் தனித்துவத்தையும் நம் மொழி, பண்பாடு, வளங்களை எக் காரணத்திற்கும் வடநாட்டவருக்கோ, அந்நிய நாட்டவருக்கோ தாரை வார்த்துவிடாத இறுக்கமான கொள்கையுடையோராய் இருத்தல் வேண்டும். சாதி, மதம், இனம் போன்ற வேற்றுமைகளைக் களைந்து நாம் அனைவரும் தமிழ்நாட்டு மக்கள் தமிழ்நாட்டின் நலனை என்றென்றும் காத்து நிற்போம் மனதில் ஆழமாகப் பதிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்நாட்டை முன்னேற்றத் தகுதியுடையவர் என மக்களுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும்.

அடுத்த தேர்தலோ, அல்லது அதற்கடுத்தடுத்து வருகின்ற தேர்தலோ உங்கள் குறிக்கோள் என்றால். இப்போதே உங்கள் பணிகளைச் செய்யத் தொடங்க வேண்டும். இந்த மக்கள் பணி அவ்வளவு எளிதான ஒன்றல்ல. உங்கள் குடும்பத்தை நான்கு சுவரிலிருந்து விரிவுப் படுத்திக் கொள்கின்றோம். நம் அப்பா, அம்மா, உடன் பிறந்தோர், பிள்ளைகளுக்கு மட்டுமின்றி நம் ஊரில் வாழும் எல்லோரையும் உங்கள் குடும்பமாக எண்ணி ஆற்றக் கூடிய பெரும் பயணமாகும்.

உங்களது சொந்த வாழ்விடங்களிலிருந்து உங்கள் பணிகளைச் செய்யத் தொடங்க வேண்டும். அது உங்களது சிற்றூராக இருக்கலாம், பேரூராக இருக்கலாம், நகரமாக இருக்கலாம், அல்லது மாநகரத்தின் ஒரு வட்டாரமாக இருக்கலாம், அவ்வளவு ஏன் நீங்கள் வசிக்கும் தெருவாக கூட இருக்கலாம். உங்களது சமூகப் பணிகளை அங்கிருந்து தொடங்குங்கள். நீங்கள் எங்கோ இருக்கின்ற ஜப்பானின், அமெரிக்காவின், அவ்வளவு ஏன் தில்லியின் பிரச்சனைகளைக் கூட அறிந்திருக்க வேண்டியதில்லை. உங்களது வட்டாரத்தின் பிரச்சனைகள் என்பதை அறிந்திருந்தாலே போதுமானது. கண் மூடிப் பாருங்கள் நமது வட்டாரமோ, ஊரோ எப்படி இருக்க வேண்டும் எனக் கற்பனை செய்து பாருங்கள். ஒரு வளர்ச்சியடைந்த பகுதியாக அதை மாற்றிவிட முடியும் எனக் கனவு காணுங்கள். இதைத் தான் அப்துல் கலாம் கனவு காணுங்கள் எனக் கூறினார். செயலில் இறங்குங்கள். அங்கு என்னென்ன சிக்கல்கள் இருக்கின்றன, என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து நிவர்த்திச் செய்யத் தொடங்குங்கள். உங்களது நன்மதிப்பை உங்களது வட்டாரங்களில் உள்ளோரிடம் பெற்றுக் காட்டுங்கள். உங்களால் நாட்டுக்கு நல்லது செய்து காட்ட முடியும் என நிரூபித்துக் காட்டுங்கள். இதுவே உங்கள் அரசியல் பயணத்திற்கு முதல் வெற்றியாய் அமையும்.

சிதைந்து நிற்கும் இந்தத் தமிழ் நாட்டை சுத்தப்படுத்தத் தொடங்குவோம். நாம் நமது வீட்டையே சுத்தமாக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்றால் எப்படி தெருவை சுத்தப்படுத்துவோம். அதே போல நம் ஊரை ஊழல், லஞ்சம், இன்ன பிற அழிவுகளிலிருந்து சுத்தப்படுத்திக் காட்ட முடியவில்லை என்றால் எப்படி நம் தமிழ் நாட்டை நாம் சுத்தப்படுத்திவிடப் போகின்றோம். பெரும் அரசியலில் குதிக்க முன்னர் ஊழலால் கரைபடிந்த நம் சொந்த ஊர்களை சுத்தப்படுத்திக் காட்டுவோம். அதற்குப் பதில் சொல்ல வேண்டிய  நிர்வாகிகளையும், அரசு அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் கேள்வி கேட்போம். நமக்கான வளர்ச்சியைப் பெற அவர்களது கதவுகளைத் தட்டுவோம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகளைக் கேட்போம்,  நியாயங்களைப் பெறுவோம். இந்த அரசியல் சாசனம் நமக்களித்துள்ள ஒவ்வொரு வழிகளையும் பயன்படுத்தி அமைதியான முறையில் நம் ஒவ்வொருவரது சொந்த ஊர்களை கட்டியெழுப்பிக் காட்டுவோம்.

ஓட்டுப் போட்டுவிட்டோம், நம் கடமை முடிந்து விட்டது. அவர்கள் செய்வதை செய்யட்டும் என ஒதுங்கிவிடாமல் ஒவ்வொரு அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் நியாயமான முறையில் நடந்து கொள்கின்றனரா தம் கடமையை ஆற்றுகின்றனரா எனக் கண்காணிப்போம். அவர்கள் தம் கடமையை மீறும் பட்சத்தில் சட்டத்தினையே அஸ்திரமாக்கி அவர்களை அகற்றுவோம்.

நமது வட்டாரத்தில் வாழ்கின்றவர்களுக்கு தமக்கான அரசியல் உரிமைகள் என்னென்ன, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நலத்திட்டங்கள் என்னென்ன என்பது பற்றிய அறிவை ஊட்டுவோமாக. ஒவ்வொரு தனிநபரும் தமக்கு அநீதி இழைக்கப்படுமானால் சட்டத்தின் துணை கொண்டு கேள்வி கேட்க கற்றுக் கொடுப்போம். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் ஒவ்வொரு அதிகாரியும், மக்கள் பிரதிநிதிகளும் தவறு செய்ய அச்சப்படுவார்கள். இதன் மூலம் ஊழலற்ற சமூகத்தை நம்மால் கட்டியெழுப்ப முடியும்.

நமது வட்டார மக்களுக்குப் புரிய வைப்போம் வெறும் ஓட்டுப் போட்டு விடுவதோடு நம் கடமை முடிந்து விடுவதில்லை என்பதையும், வழக்கமான வேட்பாளர்களையோ, கட்சிகளையோ மட்டும் நம்பிக் கொண்டிராமல் நல்லது செய்யக் கூடிய ஒரு மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுத்தால் மட்டுமே தம் வாழ்வு வளமடையும் என்பதையும், தம் வாழ்விடங்கள் வளர்ச்சியடையும் என்பதையும் புரிய வைப்போமாக.

இளைஞர்களே நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் நம் கண் முன்னே கொட்டிக் கிடக்கின்றன. நமது ஊரில் உள்ள ஏரிகள், குளங்கள் அழிக்கப்படுகின்றன. நமது ஊரில் உள்ள புறம்போக்கு நிலங்கள் பட்டாப் போடப்பட்டு தாரை வார்க்கப்படுகின்றன. நமது ஊரில் உள்ள விவசாய நிலங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. நமக்கான நல்ல சாலைகள், குடிநீர்கள் தர மறுக்கப்படுகின்றன. நமக்கான பூங்காக்கள், நூலகங்கள் எல்லாம் ஊழலால் தரங்கெட்டு தரப்படுகின்றன. நமக்கான பள்ளிகள், மருத்துவமனைகள், போக்குவரத்து நிலையங்கள் வராமல் காலங்கடத்தப்படுகின்றன. நம் கண்முன்னே ஊழல்களும், லஞ்ச லாவண்யங்களும் நிகழ்கின்றன. நம் வீட்டருகேயே குப்பைகள் கொட்டப்படுகின்றன. நீர்நிலைகள் மாசடைகின்றன. காற்று கெட்டு துர்நாற்றமடைகின்றன. இவற்றை எல்லாம் கேள்வி கேட்க வேண்டிய பொறுப்பில் நாம் உள்ளோம்.

இளைஞர்களே ! அரசியலில் குதித்து எம்.பி, எம்.எல்.ஏ பதவிகளை அடைந்துவிட ஆசைப்படுவதைக் காட்டிலும் நமக்கான அரசியல் பாதைகள் நம்மருகே இருப்பதை உணருங்கள். வெறும் 39 எம்.பி பதவிகளும், 234 எம்.எல்.ஏ பதவிகளும் தான் இருக்கின்றன. ஆனால் தமிழகம் முழுவதும் 12, 943 நாட்டுப்புற பஞ்சாயத்து அதிபர் பதவிகளும், 664 நகரப்புற மேயர் பதவிகளும், கிராமப்புறங்களில் 1, 06, 450 வார்டு உறுப்பினர் பதவிகளும், நகரப்புறங்களில் 12, 820 வார்டு உறுப்பினர் பதவிகளும் இருக்கின்றன. இளைஞர்கள் முதலில் இவற்றை நோக்கி கவனத்தை திருப்ப வேண்டும். இவற்றைக் கைப்பற்றி இந்த அதிகாரங்களைச் சீரும் சிறப்புமாகப் பயன்படுத்தினாலே தமிழ்நாட்டின் முக்கால் வாசி பிரச்சனைகளைத் தீர்த்துவிடலாம். நாளைய நம் எதிர்கால விருட்சம் செழிப்பாக வளர்ந்தோங்க மாற்றங்களை வேரிலிருந்து தொடங்குவோம். ஒவ்வொருவரது சொந்த ஊரிலிருந்து தொடங்குவோம் தோழர்களே.

– கிருஷ்ண குமார்

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *