ஆங்கில வழிக் கல்வி

மொழித் திறன் என்பது மனிதர்களுக்கே இருக்கக் கூடிய ஒரு தனித்துவமான திறனாகும். ஏனைய மனிதக் குரங்கினங்கள், டால்பின் வகை விலங்குகளில் கூட மொழித் திறன் காணப்பட்டாலும், அதிகம் வளர்ச்சியடைந்த மொழித் திறன் என்னவோ மனிதர்களில் மட்டுமே காணப்படுகின்றது. அதுவும் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு வகையான மொழிகள் உருவாக்கம் பெற்று மனிதர்களால் பேசப்பட்டு வருகின்றன. சொல்லப் போனால் மனிதர்களால் ஒன்றுக்கும் மேற்பட்ட பல மொழிகளைப் பகுத்தறிந்து பேசவும், வாசிக்கவும், எழுதவும் ஆற்றல் உடையவர்களாகவும் காணப்படுகின்றார்கள்.

இத்தகைய மொழி என்பது வெறும் சம்பாசணைகளை, கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் ஒரு ஊடகமாக மட்டுமில்லாமல் அது ஒவ்வொரு மனிதரின் தனித்துவத்தையும், வாழ்வியல் கூறுகளையும், கலாச்சார வெளிப்பாடல்களையும் கூடக் கொண்டிருக்கின்றது. மனிதர்கள் பொதுவாகவே மொழி அடிப்படையிலேயே குழுமியும் வாழ்கின்றனர். அதுவே அவர்களின் நாகரிகங்களையும், கலாச்சாரங்களையும், கண்டுப்பிடிப்புக்களையும், வாழ்க்கையும் தீர்மானிக்கும் சக்தியாகவும் இருக்கின்றது. சுருங்கி வரும் இன்றைய காலக் கட்டத்தில் உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளையும் பழகிக் கொள்ள வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரம் சார்ந்த ஒரு கருவியாகவும் மொழி பயன்படத் தொடங்கி விட்டது.

இத்தகைய நிலையில் ஒவ்வொருவரும் தமது சந்ததியருக்கு எந்த மொழியை முதன்மையாகப் பயிற்றுவிப்பது என்ற கருத்தில் குழப்பமடையத் தொடங்கியுள்ளனர். தாம் காலம் காலம் பேசி வந்த ஒரு மொழியில், அல்லது தாம் வாழ்ந்து வரும் மாநிலங்களின் மொழியில் அல்லது உலகளாவிய ரீதியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற மொழியில் எதனைத் தேர்ந்தெடுப்பது என்பதில் சிக்கல் எழுந்துள்ளது. மொழி என்பது வெறும் பொருளாதார நலன் சார்ந்ததோ, கருத்துப் பரிமாற்ற வசதி சார்ந்ததோ மட்டுமில்லை. அது ஒவ்வொரு மனிதனின் தனித்துவமான திறமைகளை வளர்த்தெடுக்கக் கூடியதும் கூட.

ஒரு குழந்தை பிறந்து 9 முதல் 15 மாதத்தில் தமது முதல் மொழியைக் கற்கத் தொடங்கி விடுகின்றது. அடுத்த 6 முதல் 8 மாதங்களில் வார்த்தைகளை ஒவ்வொன்றாகப் படிக்கத் தொடங்குகின்றது. பெரும்பாலான இச் சொற்கள் சுட்டுப் பொருளைக் கொடுக்கக் கூடிய சொற்களாகத் தான் இருக்கும் (அம்மா, அப்பா, பால், வா, போ, மேலே, கீழே போன்றவைகள்).

18 முதல் 24 மாதங்களில் குழந்தை மொழியை மேலும் கற்கத் தொடங்குகின்றது. இப்போது அது ஒரு சொற்களில் இருந்து இரு சொற்களைக் கூறத் தொடங்கிவிடும். பின்னர் அது ஒரு சொற்றொடரையும் கூறத் தொடங்கி விடும். ஆனால் அவை முழுமையான இலக்கணத் தன்மை பெற்றிருக்காது. இருந்த போதும் அவற்றை முறையாகப் பயிற்றுவிக்கத் தொடங்கும் போது அவை செம்மை படத் தொடங்கும். அதாவது குழந்தை படிப்படியாக மொழித் திறனைப் பெற்றுக் கொண்டாலும், அது தனது கேள்வி ஞானத்தால் மட்டுமே மொழியறிவை முதலில் பெறுகின்றது. இத்தகைய நிலையில் குழந்தை கற்கத் தொடங்கும் முதல் மொழி வீடுகளில் தாய், தந்தையர், உற்றார், உறவினர் பேசுகின்ற மொழியாகவே இருக்கும். அம் மொழியே ஒருவரின் தாய் மொழியாகவும் ஏற்கப்படுகின்றது.

தாய் மொழி என்பதில் சிந்திக்கத் தொடங்கும் குழந்தைகளால் அவற்றிலேயே எழுதவும், வாசிக்கவும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அதுவே அவர்களின் மூளை வளர்ச்சிக்கும் உதவி புரியும். அந்த மொழியில் கற்பதே அவர்களுக்கு எளிதாகவும், ஆறுதலாகவும் இருக்கும். அதுவே ஒரு வலிமையான மொழியறிவின் அடித்தளத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

தமிழகத்தையும், வட இலங்கையையும் எடுத்துக் கொண்டால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலும், மாநிலம் முழுவதுமே தமிழ் மொழியிலேயே பேசுகின்றனர். ஆக பெரும்பான்மையான பயன்பாட்டு மொழியாகத் தமிழே இருக்கின்றது. ஆனால் இன்று கணிசமான தமிழ் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு ஆரம்பக் காலம் முதலே ஆங்கிலத்தைப் பயிற்றுவிக்கவும் தொடங்குகின்றனர். சில சந்தர்பங்களில் தாய் மொழியைப் பற்றிக் கவலைப் படாமல் ஆங்கிலத்தையோ, வேறு மொழிகளையோ திணிக்கத் தொடங்குகின்றனர்.

உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் தாய்மொழி வழியில் தான் கல்வி கற்கின்றனர். இதனால் தான் அந்த நாட்டு மாணவர்கள் அறிவிலும், ஆற்றலிலும் சிறந்து விளங்குகின்றனர். பல கண்டுபிடிப்புக்களை நிகழ்த்துகின்றனர். ஆண்டுத் தோறும் பல துறைகளில் பல சாதனைகளை நிகழ்த்துகின்றனர். ஐரோப்பா, மத்திய கிழக்கு, கிழக்காசியா எனப் பொருளாதாரத்தில் மேன்மை கண்ட நாடுகளில் அந்தந்த நாட்டு மொழிகளில் தான் பால்வாடி முதல் பல்கலைக்கழகம் வரை படிக்கின்றனர். ஆனால் நம் இந்தியாவிலோ ஆங்கிலக் கல்வியே முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதுவே சிறந்தது என்ற எண்ணமும் நம்மிடைய நிலவி வருகின்றது.

தமிழகத்தின் ஆட்சி மொழியாக மட்டுமல்ல தொலைக்காட்சிகள், ஊடகங்கள், வணிகங்கள், வெகுமக்கள் மொழியாகவும் தமிழே இருந்து வருகின்றது. ஆனாலும் தமிழைப் பேசவும், எழுதவும் தெரிந்தால் மட்டும் போதும் என்ற குருட்டுத் தனம் பலரிடம் இருப்பது அதிர்ச்சியளிக்கின்றது. 1980-களில் இருந்து இன்று வரை இந்த 35 ஆண்டுகளில் தனியார் பள்ளிகள் பலவும் மழைக்கு முளைத்த காளாண்களைப் போலப் பட்டி தொட்டியெல்லாம் முளைத்து வருகின்றன. ஏறத்தாழ 8000 தனியார் பள்ளிகளில் இன்று ஆங்கிலக் கல்வி மட்டுமே தரமானது என்ற போலி வாக்குறுதிகளை வழங்கி குருட்டு மனப்பாடக் கல்வி முறையைப் போதித்து வருகின்றனர். இதன் விளைவாகத் தமிழை மட்டுமல்ல சிந்திக்கும் ஆற்றலையே மறந்து போய் ஒரு சமூகம் உருவாகி விட்டது எனலாம்.

இந்தப் பள்ளிகள் பலவும் தமிழை முற்றாகப் புறந்தள்ளிவிட்டு இரண்டாம் மொழியாக ஹிந்தி, பிரஞ்சு, ஜெர்மன், சமஸ்கிருதம் என அந்நிய மொழிகளை மட்டுமே கற்பித்து வந்தன. இதனால் தமிழை ஒரு பாடமாகக் கூடப் படிக்காமல் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளியே வருவோர் ஆயிரக் கணக்கில் இருக்கின்றனர். குறைந்தது இந்தப் பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாகாவது கற்பிக்க வேண்டும் என்ற குரல் சமூக ஆர்வலர்களால் முன் வைக்கப்பட்டு வந்தன.

உண்மையில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்பது பல நன்மைகளை உண்டாக்கும் என ஆய்வாளர்கள் பலர் கருதுகின்றனர். அதே சமயம் இரண்டாவது மொழியை எந்த வயதில் ஒரு குழந்தைக்கு அறிமுகம் செய்ய வேண்டும், எவ்வளவு பயிற்றுவிக்க வேண்டும் என்பதையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

கனடா நாட்டைச் சேர்ந்த மொழி ஆய்வாளர் ஜிம் கம்மின்ஸ் கூறுகின்றார் ஒரு குழந்தை ஒரு மொழியை நல்ல விதத்தில் கற்ற பின்னரே இன்னொரு மொழியில் கற்கத் தொடங்க வேண்டும் என்கின்றார். அதே சமயம் இன்னொரு மொழியைக் கற்கத் தொடங்கிய பின்னர் அது தாய் மொழியையும், இரண்டாவது மொழியையும் வளப்படுத்துவதோடு பிள்ளைகளின் கல்வித் திறனையும், சிக்கல் தீர்வு திறனையும் வளர்த்தெடுக்கின்றது என அவர் கூறுகின்றார்.

கனடாவின் கியுபெக் மாநிலத்தில் பிரஞ்சு மொழியிலேயே கல்விக் கற்கின்றனர். அதே சமயம் ஆங்கிலத்தையும் ஒரு பாடமாகவும் கற்கின்றனர். இது குறித்து ஆய்வு நடத்தி பூர்னட் திரைட்ஸ் மற்றும் தள்ளோவிட்ஸ் ஆகியோர் கூறுகின்றனர், பிரஞ்சு மொழியில் கணிதம், அறிவியலைக் கற்குமளவு அறிவுத் திறன் பெற்ற மாணவர்கள் கூடுதலாக ஆங்கிலத்தை ஒரு மொழியாகவே கற்கத் தொடங்குகின்றனர். இவர்களின் அறிவு வளர்ச்சி ஆங்கிலம் மட்டுமே கற்கும் மாணவர்களை விடச் சிறப்பாக அமைந்திருக்கின்றதாம்.

அதாவது தாய் மொழியை முறையாகப் பயின்ற பின்னர் இன்னொரு மொழியைக் கற்கத் தொடங்கும் மாணவர்களின் மதிப்பெண்கள். வெறும் வேறு மொழியில் மட்டுமே பயின்று வரும் மாணவர்களை விட அதிகமாக இருக்கின்றது.

இதனை அமெரிக்காவில் வசிக்கும் மெக்சிக்கன் மாணவர்களை ஆராய்ச்சி செய்த டேவிட் அகுவாயோவும் நிரூபிக்கின்றார். தாய் மொழிகளில் பயின்று வரும் மெக்சிக்கன் வம்சாவளி மாணவர்கள், ஆங்கிலத்தில் மட்டுமே பயின்று வரும் மெக்சிக்கன் மாணவர்களை விடக் கூடுதல் மதிப்பெண்களையும், வெற்றிகளையும் ஈட்டியுள்ளனர்.

இரண்டாவது மொழியைக் கற்கும் மாணவர்களின் அறிவுத் திறன் வளரக் கூடியதாய் இருக்கின்றது. அதே சமயம் அவர்கள் இரு மொழிகளையும் கலப்படம் செய்யாது இரு மொழிகளின் அடிப்படைகளையும், இலக்கணங்களையும், பேச்சு முறைகளையும் பகுத்தறிந்து பயின்றால் ஒரு மொழியின் தாக்கம் மற்றொரு மொழியில் ஏற்படாமல் இரு மொழிகளையும் நன்றாகப் பேச முடிகின்றது என லான்றி என்ற ஆய்வாளர் கூறுகின்றார்.

தாய் மொழியில் படித்துக் கொண்டால் மேற்படிப்புக்களில் ஆங்கிலத்துக்கு மாறும் போது கடினமாக இருக்கும் என்ற வாதத்தையும் ஆய்வுகள் தகர்த்து எறிந்துள்ளன. கடந்த 2005-ஆம் ஆண்டுக் கனடாவில் நடத்தப்பட்ட மாணவர் கருத்துக் கணிப்பில் பிரஞ்சு மொழியில் கற்று வந்த மாணவர்கள் ஆங்கிலத்தில் மேற்படிப்பை வெற்றிகரமாக தொடர்ந்துள்ளனர். சொல்லப் போனால் பல மாணவர்கள் சில பாடங்களை ஆங்கிலத்திலும், சில பாடங்களைப் பிரஞ்சில் கூட எடுத்துப் படிக்கக் கூடியதாக இருந்தது.

தனியார் பள்ளிகள் வியாபாரம் செய்ய தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்ற பொய் பிரச்சாரங்களில் ஒன்று தான் ஆங்கில வழியில் படித்தால் கைநிறைய சம்பாதிக்கலாம் என்பது. தமிழகத்தில் பல்லாயிரக் கணக்கான ஆங்கில வழிப் பள்ளிக் கூடங்கள் உள்ளன. இதிலிருந்து ஆண்டுக்கு ஆயிரக் கணக்கானோர் கற்று வேலைக்கு தயாருகின்றனர். இவர்களில் எத்தனை பேர் கைநிறைய சம்பாதிக்கின்றனர்? அல்லது ஐடி நிறுவனங்கள் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் எத்தனையோ தமிழ் இளைஞர்கள் கைநிறைய சம்பாதிக்கின்றனர் அவர்களில் எத்தனையோ பேர் தமிழ்வழிப் பள்ளிகளில் படித்தவர்கள் தானே என்பதை ஏன் பார்க்க மறுக்கின்றோம்.

தமிழக அரசாங்கம் ஏற்கனவே மாநில கல்விவாரிய பள்ளிகளில் தமிழை கட்டாயமாக ஒரு பாடமாக படிக்கும் தமிழ் கல்வி சட்டத்தை நிறைவேற்றி வருகின்றது. வரும் ஆண்டில் இருந்து மத்திய கல்வி வாரிய பள்ளிகளிலும் தமிழை கட்டாயமாக ஒரு பாடமாக அனைவரும் படிக்கும் ஆணையை போட்டுள்ளது. தமிழகத்தில் 543 மத்திய கல்விவாரிய பள்ளிகள் இயங்கி வருகின்றன. முதல் கட்டமாக ஒன்றாம் வகுப்பில் இருந்து இது தொடங்கப்படுகின்றது. இதனால் ஏற்கனவே தமிழை கற்காத உயர்நிலை மாணவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஆனால் இந்த ஆணை இன்னமும் நவோதயா, கேந்திரிய வித்திலாயம், சைனிக் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை. விரைவில் இந்த பள்ளிகளுக்கும் ஆணை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது ஒருவகையில் மகிழ்ச்சி தருகின்றது என்ற போதும், மாநிலம் முழுவதும் இயங்கி வரும் தனியார் தமிழ் வழி பள்ளிகள் பலவற்றுக்கு போதிய நிதியாதாரம் இல்லாததால் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மட்டும் 49 தனியார் தமிழ் வழி பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பல தனியார் தமிழ் வழி பள்ளிகள் மாணவர்களிடம் இருந்து மிக குறைந்த அளவே நிதி பெறுவதால், அவற்றால் தனித்து இயங்க முடியாத நிலையில் உள்ளன. மேலும் 33 பள்ளிகள் பெரும் நிதி நெருக்கடிக்குள் சிக்கி தவிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அது மட்டுமின்றி தமிழ் வழி அரசுப் பள்ளிகளை அழிக்கும் முகமாக அவற்றை எல்லாம் ஆங்கில வழி பள்ளிகளாகவும் மாற்ற முனைகின்றது தற்போதைய தமிழ்நாடு அரசாங்கம்.

தமிழ்நாட்டிலும் சரி அயலகத்திலும் சரி தமிழ்வழியில் படித்து விட்டு கைநிறைய சம்பாதிக்கும் எண்ணற்ற நபர்கள் இருக்கின்றனர். ஆங்கில வழியில் படித்து விட்டு பத்தோடு பதினொன்றாக குப்பைக் கொட்டிக் கொண்டு இருப்பவர்களும் உள்ளனர். இது தான் எதார்த்தம். கைநிறைய சம்பாதிப்பது என்பது ஒருவரது அறிவும், திறமையும் எந்தளவுக்கு விருத்தியாகி உள்ளது என்பதோடு அந்த நபர் எந்தளவுக்கு ஊக்கத்தோடு உண்மையாக உழைத்து அந்த இடத்தை அடைந்தார் என்பதைப் பொறுத்தது தானே ஒழிய ஆங்கிலம் படிப்பதிலோ, இந்தி படிப்பதிலோ வந்துவிடுவதில்லை.

என்னதான் ஆங்கிலத்தில் கல்வி கற்றாலும் நம்மவர்கள் அமெரிக்கா, கனடா வந்த பின் மீண்டும் இங்குள்ள ஆங்கிலத்தை கற்க வேண்டியுள்ளது என்பது தான் உண்மை. நம்மவர்கள் என்ன தான் அங்கு விழுந்து விழுந்து ஆங்கிலம் கற்றுவிட்டு வந்தாலும், ஆங்கிலம் கற்றவர் என்பதால் இங்கு யாரும் கூப்பிட்டு வேலை தருவதில்லை. திறமைக்கே முதலிடம். இதை நம்மவர்கள் முதலில் உணரவேண்டும். ஆங்கிலத்தை மட்டும் நம்பிக் கொண்டு வந்த பல மருத்துவர்கள், பேராசிரியர்கள் இங்கு கார் ஓட்டிக் கொண்டும், கறிக்கடையில் இறைச்சி வெட்டிக் கொண்டும், உணவங்களில் மேசைத் துடைத்துக் கொண்டிருப்பதும் தனிக்கதை. ஆனால் திறமையை மட்டும் வைத்துக் கொண்டு ஆங்கிலம் தெரியாமல் வந்த பலரும், மூன்றாண்டுகளில் ஆங்கிலம் கற்று உயர்பதவிகளில் வலம் வருவோரை பார்த்திருக்கின்றேன்.

தமிழகத்தில் முளைத்துவிட்டுள்ள பல தனியார் பள்ளிகளில் வகுப்புக்களில் தமிழ் பேசினால் அபராதம் கோரும் மோசமான நிலையும் இருக்கின்றது. இது எத்தகைய அபத்தமான ஒன்று, உலகில் எங்கும் நடக்காத ஒரு மனித உரிமை மீறல். ஒருவர் தமது மொழியில் பேசினால் அபராதம் கட்ட வேண்டுமாம்.

அதாவது ஒரு குழந்தை முதன் முதலாகப் பேசத் தொடங்குவது அதன் தாய், தந்தை மற்றும் வீட்டில் வசிப்போர் பேசும் மொழியில் தான், அது தான் இயல்பும் கூட. அந்த முதல் மொழியைச் சீராக முறையாகக் கற்றுக் கொடுக்கும் பட்சத்தில் தான் அதன் மூளைத் திறன் விரிவடையும். தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான குழந்தைகள் தமிழ் மொழியில் தான் சிந்திக்கத் தொடங்கும் சாத்தியங்கள் அதிகம். அதே குழந்தை அடுத்து அதன் சுற்றத்து மொழியை உள்வாங்கத் தொடங்கும். வீடுகளைத் தாண்டி பள்ளிகள், தோழர்கள், ஊடகங்கள் ஆகியவற்றில் இருக்கும் முதன்மை மொழியைக் கற்கவும் வேண்டும். அதுவே அவர்கள் வாழ்நாள் மொழியாக மாற்றமடையும் சூழல் இருக்கின்றது.

உதாரணத்துக்குக் கருநாடகத்தில் வாழும் தமிழர்களுக்குக் கன்னடமும், தென்னிலங்கையில் வாழும் தமிழர்களுக்குச் சிங்களமும், மலேசியாவில் வாழும் தமிழர்களுக்கு மலாயும் முக்கிய மொழிகளாக இருக்கின்றது. தமிழோடு அவர்கள் அம் மொழிகளையும் கற்றே ஆக வேண்டும். இதே போன்று தமிழ் தாயகப் பகுதிகளில் வாழும் வேற்று மொழியினருக்குத் தமிழ் முதன்மை மொழியாக இருக்கின்றது. அதுவே அவர்களின் இருப்பையும், அந்தச் சமூகத்தில் தம்மை நிலைநிறுத்தவும் உதவும்.

தமிழர்கள் இன்று தமிழோடு ஆங்கிலத்தையும் கலந்து பேசியதன் விளைவால் அவர்களால் தமிழ் மட்டுமல்ல ஆங்கிலத்தையும் சுதி சுத்தமாகப் பேச முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது.

இன்னொரு விடயத்தையும் முன் வைக்க விரும்புகின்றேன். ஆங்கிலம் உலக மொழி என்ற கூற்றையும் ஆங்கிலேயேர்களே மறுக்கத் தொடங்கிவிட்டனர். உலகின் 75 % மக்கள் ஆங்கிலத்தை முதல் மொழியாகப் பேசாதவர்களே. அத்தோடு அடுத்த 20 ஆண்டுகளில் இணையம் முதல் பொருளாதாரச் சந்தைகள் வாய் சீன மொழியே முதன்மை மொழியாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இணைய வெளியில் ஆங்கிலத்தின் பயன்பாடு குறையத் தொடங்கி உள்ளது.

அதே போல ஆய்வுக் கட்டுரைகள், அறிவியல் கண்டுப்பிடிப்புக்கள் பலவும் ஆங்கிலம் அல்லாத மொழிகளில் அதிகம் வெளிவரத் தொடங்கிவிட்டது. ஆகையால் ஆங்கிலமே உலக மொழியாக இருக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதம் இல்லை எனப் பிரித்தானிய கல்வி அமைப்பு ஒன்று கூறுகின்றது. ஆகையால் ஆங்கிலம் மட்டுமில்லாமல் பிற மொழிகளையும் கற்க வேண்டும் என அவ் அமைப்பு பிரித்தானிய கல்வித் திட்ட வகுப்பாளர்களிடம் கோரிக்கை வைத்துள்ளது.

மாற்று மொழியில் படிப்பதை விட தாய்மொழியில் கல்வி கற்பதே ஒரு மனிதனது அறிவை உண்மையாகவே வளர்த்தெடுக்கும். இன்று பல்வேறு துறைகளில் ஆங்கிலப் பள்ளியில் படித்திருக்கின்றீயா வா ராசா வா உனக்கு இந்தா வேலை என எவரும் தந்துவிடுவதில்லை. இந்த உலகம் போகிற போக்கில் எந்தவொரு வேலையிலும் இன்று அதிகம் எதிர்ப்பார்ப்பது ஒரு மனிதரது படைப்பாற்றல், தனித்திறமை, தொடர்பாடல் திறன் அதாவது Creativity, Personality development, Communication Skills போன்றவைகளே. இவை இருந்தால் மட்டுமே எந்தவொரு துறையிலும் ஜொலிக்க முடியும். ஆனால் ஆங்கில வழியில் கற்ற எத்தனை பேருக்கு Creativity இருக்கின்றது சொல்லுங்கள்.

ஜப்பான், தாய்லாந்து, தாய்வான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் முழுமையாக தாய்மொழி வழியில் கல்வி கற்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் எண்ணற்ற கண்டு பிடிப்புக்கள் அங்கிருந்து வருகின்றன. அங்கே ஆங்கிலம் என்பது ஒரு பாடம் மட்டுமே. அந்த ஆங்கிலப் பாடங்களை ஆங்கில ஆசிரியர்கள் கொண்டு பயிற்றுவிக்கின்றனர். இதன் மூலம் ஆங்கிலத்தை செம்மையாக கற்றுக் கொள்கின்ற அதே சமயம் கணிதம், அறிவியல், சமூகவியல் பாடங்களை தத்தமது தாய்மொழியில் பயில்கின்றனர் வாழ்க்கையில் முன்னேறுகின்றனர்.

அவ்வளவு ஏன் ஆங்கில நாடான கனடாவில் குயுபெக் மாநிலம் பிரஞ்சு பேசுகின்ற பகுதியாக இருக்கின்ற போதும் ஆங்கிலமே பிரதானம் எனக் கூறவில்லையே. அவர்கள் தமது தாய்மொழி பிரஞ்சிலேயே பள்ளிக் கல்வி முதல் பல்கலைக்கழக கல்வி வரை பயில்கின்றனர். கனடாவின் ஆங்கில மாநிலங்களை எல்லாம் விட அறிவியல், கலைத்துறை என பல துறைகளில் சாதனையாளர்கள் அங்கிருந்தே உதயமாகின்றனர் என்பதே ஒரு சாட்சியம் என்பேன்.

ஆக தாய் மொழிக் கல்வியும் மிக அவசியம் ஆகின்றது. அத்தோடு பொருளாதாரச் சந்தையில் நிலைத்து நிற்கவும், வேலை வாய்ப்புக்கள் போன்றவற்றைப் பெறவும் பல மொழிகளைப் பயில வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் சிதையும் தமிழானது மற்றொரு புலத்தில் வளரும் என்ற வாசகத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. தமிழைத் தமிழ் தாயகத்தில் மட்டுந்தான் வளர்த்துக் கொள்ள முடியும். தமிழர்கள் குடியேறிய நாடுகளில் இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் மட்டுமே தமிழ் வாழும் மொழியாக இருக்கின்றது. மற்ற நாடுகளில் தமிழ் ஒரு சில தலைமுறைக்கு மேல் நீடித்ததுமில்லை, நீடிக்கப் போவதுமில்லை.

தமிழ் மொழியை வளர்க்கவும், தமிழர் நலன் பெறவும் ஐந்தாம் வகுப்பு வரையில் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் தமிழ் வழி கல்வியை அறிமுகம் செய்வதோடு, தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு அதிக வரி விதிப்பும் செய்யலாம். இதன் மூலம் இதன் மூலமே தமிழகத்தில் தமிழ் வழி பள்ளிகள் தொடர்ந்து இயங்குவதோடு, தமிழ் மொழி வளர்ச்சிக்கும் வித்திடுவதோடு மழைக்கு முளைக்கும் காளாண்கள் போல முளைத்து கிடக்கும் தனியார் ஆங்கில வழி பள்ளிகளின் பெருக்கத்தையும் கட்டுப்படுத்தலாமே.

தமிழ் மொழி என்பது நம் கைகளைப் போன்றது, ஆங்கிலம் என்பது கருவியைப் போன்றது. கருவியை நம்பி யாரும் கைகளை இழக்க மாட்டார்கள். மரம் வெட்ட கோடாரி இருக்கின்றதே என்ற நினைப்பில் எந்த மடையரும் தம் கைகளை வெட்டி வீசிவிட மாட்டார்கள். ஆனால் இன்று தமிழர்களாகிய நாம் கோடாரியை நம்பி நம் கைகளை வெட்டி வீசிக் கொண்டிருக்கின்றோம். ஆங்கிலம் மட்டுமே கற்றுக் கொண்டால் போதும், அதுவே சோறு போடும் என்ற நினைப்பில் தாய் மொழியை இழந்துவிட்டால் மிஞ்சப் போவது அடையாளமற்ற, ஊனமுற்ற ஒரு முட்டாள் பரம்பரையே என்பதை மட்டும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

– தமிழ் வண்ணன்

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *