தண்ணீர் பிச்சை எடுக்கும் நாள் வரும்?

வெகு நாட்களுக்குப் பிறகு கல்லூரி நண்பனிடம் தொலைபேசினேன். வழக்கமான நல விசாரிப்புகளுக்கு பிறகு பேச்சு அவனுடைய ஊர் பற்றி திரும்பியது. விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கின்ற சிறுவிவசாயிகள் அதிகம் வசிக்கின்ற ஒரு தமிழக சிற்றூர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே சரியான பருவ மழை பெய்யாமல் போனதாலும், அம் மக்களுக்கு ஜீவாதாரமாக இருந்து வந்த பெண்ணையாறும் வறண்டு போனதால் அன்றாட வாழ்வே பெரும்பாடாக இருப்பதாக புலம்பினான். நிலத்தடி நீரும் கைவிரித்து விட்டதாகவும், எத்தனை அடிக்கு போர்துளைத்தாலும் வெறும் சேற்று நீர் மட்டுமே வருவதாகவும் வருத்தப்பட்டுக்கொண்டான்.

புவி வெப்பமாதல் போன்ற காலநிலை மாற்றங்களினாலும், நவீன வளர்ச்சியின் பின்விளைவுகளாலும் நமது நீர் வளங்கள் குன்றி விட்டன. நீர்வளங்களை மட்டுமே நம்பிக் கொண்டு வேளாண்மையில் ஈடுபட்டு வருகின்ற லட்சக் கணக்கான சிறு விவசாயிகளின் வாழ்க்கை நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. பலரும் கடனை உடனை வாங்கி தற்காலிகமாக தமது பயிர்களை காக்க முயல்கின்ற போதும் அவர்களுக்கு மிஞ்சுவது ஏமாற்றமும் வலிகள் மட்டுமே. இனி பணமோ, பணத்தினால் வாங்கப்படும் நவீன வளர்ச்சிகளோ விவசாயத்தையும் விவசாயிகளையும் காக்கப்போவதில்லை என்பதை நம் கண்முன்னே நடக்கும் சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன.

கடந்த தமிழ்ப் புத்தாண்டு நாள் அன்று பொள்ளாச்சியை சேர்ந்த 75 வயது விவசாயி ஆறுமுகம் தனது ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் வராமல் போக மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆழ்குழாய் கிணற்றை தோண்டுவதற்காகக் கொஞ்ச நாள் முன்னர் தான் அவர் வட்டிக்குக் கடன் வாங்கி இருந்தார். ஆறுமுகம் மட்டுமில்லை இன்றைக்கு தமிழகம் முழுவதிலும் இருக்கும் பல லட்சம் விவசாயிகளின் அவல நிலை இது தான். கடந்த சில மாதங்களில் மட்டும் தமிழகம் முழுவதும் 200க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் பல ஆயிரம் சிறு விவசாயிகள் கடன் சுமையில் சிக்கி தவிக்கினறனர். அது போக லட்ச கணக்கான விவசாய கூலி தொழிலார்கள் அன்றாடக் கூலிக்கே வழியில்லாமல் கடும் பஞ்சத்தில் வாடி வருகின்றனர். விவசாயிகள் மட்டுமில்லை விவசாயத்தோடு நேரிடையாக சம்பந்தப்படாத பெருநகர மக்கள் உட்பட ஒட்டுமொத்த சமூகமும் நீரின்றி அவதிப்படும் நிலை தான் ஏற்பட்டுள்ளது.

இன்று தமிழகம் உட்பட ஒட்டுமொத்த தென்னிந்தியாவும் கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கின்றது. வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழை முற்றாகப் பொய்த்துவிட்டது.  வடகிழக்கு மழை வழக்கத்தை விட 62 % குறைவாகப் பெய்திருக்கின்றது. மலையாள கரையோரத்தை பசுமையாக்கும் தென்மேற்கு மழையோ 33 % குறைவாகப் பெய்திருக்கின்றது. தென்மேற்கு மழை பொய்த்ததால் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளும் வறட்சியில் சிக்கி தவிக்கின்றது. இதனால் காவிரி ஆற்றுக்கும் போதிய நீர் வரவில்லை.  நூறாண்டுகளில் இல்லாத அளவிற்குத் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் கடும் வெப்பமும், வறட்சியும் தண்ணீருக்காக மக்கள் அல்லாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கின்ற சிறுவிவசாயிகளும், விவசாய கூலித் தொழிலார்களும் அன்றாட கஞ்சிக்கே வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கடன் வாங்கி விவசாயத்தில் ஈடுபட்ட பல விவசாயிகள் வேதனைத் தாங்காது தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி விட்டது. குறைந்தது விவசாயக் கடன்களையாவது தள்ளுபடி செய்தால் மேலும் பல இறப்புகளைத் தவிர்க்கலாம் என்ற எண்ணத்தில் நூற்றுக்கும் அதிகமான தமிழ்நாட்டு விவசாயிகள் கடந்த ஒரு மாதமாகத் தில்லியில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைக்கும் சொற்ப நீரையும் பங்கிடுவதில் தென்னக மாநிலங்களுக்கு இடையில் பெரும் பிணக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காவிரி நீரைப் பங்கிடுவதில் தமிழ்நாட்டுக்கும் கருநாட்டுக்கும் பிரச்சனை இருந்து வருகின்ற நிலையில் இப்போது ஒரே மொழி பேசுகின்ற ஆந்திரத்திற்கும் தெலுங்கானதுக்கும் கண்ணனாற்று, கோதையாற்று நீரைப் பங்கிடுவதில் பிரச்சினை எழுந்துள்ளது.

***

நவீனங்கள் நம் வாழ்வை வளமாக்கி இருப்பதாக நாம் நம்பிக் கொண்டிருக்கின்றோம். கூரை வீடுகளில் வாழ்ந்திருந்த நாம் இன்று மாடி வீடுகளில் வாழ்கின்றோம். கட்டை வண்டிகளில் பயணித்த நாம் இன்று கார்களில் பயணிக்கின்றோம். நமைச் சுற்றி கற்பனை கதைகளிலும் கேட்டிராத எண்ணற்ற சாதனங்களை நவீன அறிவியல் நம் கைகளில் தவழ விட்டிருக்கிறது. இன்று நவீனங்கள் தருகின்ற சுகங்களைத் தேடி நமது இன்றியமையா செல்வங்களைக் கூட தொலைத்து விட்டு நிற்கின்றோம். அதில் ஒன்று தான் நீர் வளம்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே உலக மக்கள் தொகை பெருகத் தொடங்கியது. குறிப்பாக தென்னிந்தியாவின் மக்கள் தொகை, அதிலும் சென்னை போன்ற பெருநகரங்களை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கினர்.  1950-களின் பின் நம் மக்கள் தொகை இரட்டிப்பாக தொடங்கியது. அதே காலக் கட்டத்தில் உணவின் தேவையும், வசிப்பிட தேவையும் கூடியது.

எல்லாவற்றுக்கும் அடிப்படையான நீரின் தேவையும் பன்மடங்கு அதிகமானது. தொடக்கத்தில் நீர் தேவைக்காக ஆற்றிலிருந்தும், குளத்திலிருந்தும், ஏரியிலிருந்தும் நீரை எடுத்து பயன்படுத்தி வந்தனர். பலரும் கிணறுகள் தோண்டி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொண்டனர்.

ஆனால் காலப்போக்கில் நீர்நிலைகள் மீது அதிக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாலும், நவீன வளர்ச்சிகளாலும், நகரமயமாதலாலும் நீர்நிலைகளை மாசடைந்தன. அதன் பின் தண்ணீர் தட்டுபாடும் அதிகமானது.

நம் அரசும் சரி, பொது மக்களும் சரி தண்ணீர் தட்டுப்பாட்டு ஏற்பட்ட போதெல்லாம் தற்காலிக தீர்வுகளையே நாடினர். இதன் விளைவாக நீர்நிலைகள் யாவும் மெல்ல மெல்ல ஒழித்துக்கட்டப்பட்டன. நீர்நிலைகள் வற்றிய போதும், மாசடைந்த போதும் அவற்றில் குப்பைகளை கொட்டினார். பின்னர் மண்ணை போட்டு தரைமட்டமாக்கி அவற்றை பட்டா போட்டு விற்றனர். அப்படி பட்டா போடப்பட்ட நீர்நிலைகளில் தான் இன்று பல முன்னணி கல்லூரிகளும், மருத்துவமனைகளும், ஐடி கம்பெனிகளும் கட்டப்பட்டுள்ளன என்பது நம்மில் எத்தனை பெருக்குத் தெரியும்.

தமிழகம் முழுவதிலும் நகரத்தில் வாழும் பலரும் இதன் தீவிரத்தை உணராமல் இருந்தனர். என்ன மிஞ்சி மிஞ்சிப் போன காசு கொடுத்தால், அல்லது தமிழக அரசை கட்டாயப்படுத்தினால் ஆந்திரத்திலிருந்தோ கருநாடகத்திலிருந்தோ எங்கிருந்தாவது தண்ணீர் கிடைக்க போகின்றது என நினைப்பில் தான் பலரும் காலத்தை ஓட்டினர். ஒவ்வொரு கோடை காலத்திலும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் போதும் ஆழ்குழாய் கிணறுகளை வெட்டி அதிலிருந்து தண்ணீரை உறிஞ்சி வந்தனர். இதனால் பல மில்லியன் ஆண்டுகளாக புவியண்ணை போற்றி பாதுகாத்த நிலத்தடி நீரை ஒரே தலைமுறையில் உறிஞ்சி குடித்துவிட்டோம். அதுவும் கை கொடுக்காமல் போன போது நீர்நிலைகளிலிருந்தும், நீர்நிலைகள் அருகில் ஆழ்குழாய்களை அமைத்து அதிலிருந்து தண்ணீரை உறிஞ்சி இலாரிகளில் கொண்டு வந்து சப்பிளை செய்தனர்.

அப்படிக் கிடைத்த தண்ணீர் தரமானவை வசதி படைத்தோருக்கும், ஓரளவு தரமான தண்ணீர் நடுத்தர மக்களுக்கும் வழங்கப்பட்டது. தரமில்லாமல் இருந்த போது அவற்றை அடித்தட்டு மக்களுக்கு வழங்கினர்.

சிறிது காலத்தில் தரமான தண்ணீர் கிடைக்காமல் போன போது அவற்றை துணி துவைக்கவும், குளிக்கவும் மட்டும் பயன்படுத்திக் கொண்டு மினரல் நீர் எனக் குடுவைகளில் கிடைத்த சுத்தம் செய்யப்பட்ட தண்ணீரை கடைகளில் வாங்கிச் சமைக்கவும், குடிக்கவும் பயன்படுத்திக் கொண்டனர். ஆக, மொத்தம் நமது சகிப்புத் தன்மைக்கு விருது கொடுக்கும் அளவிற்கு நாம் பொறுமை காத்தோம், அல்லது அக்கறையில்லாமல் காலம் கடத்தினோம்.

நகர்ப் புறங்களில் நிலைமை இப்படி என்றால், ஊர்புறங்களில் உள்ளோரும் தம் பங்குக்கு அமைதியாக அழிவுப் பாதைக்கு சென்றனர். ஆற்று நீரை நம்பி வாழ்ந்திருந்த மக்கள் அந்த ஆறும் அந்த ஆற்றிலுள்ள மணலும் எவ்வளவு முக்கியம் என்பதை மறந்து போயினர். வறட்சி காலங்களில் வற்றிவிடும் ஆறுகளில் இருந்த ஆற்று மணல்களை அரசே விற்கின்ற நிலைமை ஏற்பட்ட பொது அதை தட்டிக் கேட்கவில்லை. மாறாக தம் பங்குக்குப் பலரும் அதில் இணைந்து ஆற்று மணல் விற்பனையில் ஈடுபட்டனர். அந்த ஆறுகள் வற்றிக் கிடந்த போது அவற்றில் குப்பைகளையம், கழிவுகளையும் வீசினர்.

மேலும் ஊர் புறங்களில் வேளாண்மையில் ஈடுபட்டிருந்தவர்களோ. பாரம்பரிய நீர்நிலைகளிலிருந்து நீர் வராமல் போன போது அறிவியல் துணை கொண்டு ஆழ்துழாய் கிணறுகளை உண்டாக்கி வேளாண்மை செய்யவும், பிற அன்றாட தேவைகளுக்கும் நீரை உறிஞ்சோ உறிஞ்சென உறிஞ்சினார்.

ஒரு சில அடிகள் என்ற நிலை மாறி இன்று இந்த ஆழ்துழாய் கிணறுகள் 1000 அடிகளுக்குக் கீழ் பேயும் தண்ணீர் கிடைக்கவில்லை. ஆழ் குழாய் கிணறுகளை நம்பி பலரும் கேணிகளையும், குட்டைகளையும் மூடி விட்டது தான் பரிதாபம்.

***

தோண்டத் தோண்ட வற்றாத அட்சய பாத்திரம் கிடையாது நமது நீர்வளம். சொல்லப் போனால் உலகத்தில் தங்கமும், வைரமும் எவ்வளவு அரிதோ அவ்வளவுக்கு அரிதான பொருள் தான் நன்னீர். உலகின் முக்கால் வாசி பங்கு நீரால் சூழப்பட்டு இருக்கலாம். ஆனால், அவற்றில் வெறும் 2.5 % தண்ணீர் மட்டுமே மனிதர்கள் உட்பட உயிரினங்கள் பருகவும், உணவு உற்பத்தி செய்யவும் ஏதுவான நன்னீராக்கும்.

ஆனால், மனிதர்களில் பேராசையாலும், அறிவு கெட்டதானத்தாலும் இன்று இந்த 2.5 % தண்ணீர் வளம் கூட வீணாக்கப்பட்டும், கேடாக்கப்பட்டும், நஞ்சாக்கப்பட்டும் வருகின்றது.

இந்த வெறும் 2.5 % நன்னீர் வளத்தில் வெறும் 4 % மட்டுமே இந்தியாவில் கிடைக்கின்றது. அந்த 4 % தண்ணீரிலும் வெறும் 3 % தண்ணீர் மட்டுமே தமிழகத்தில் கிடைக்கின்றது. கணக்கு பண்ணி பார்த்தால் உலக நன்னீர் அளவில் 0.003 % அளவு மட்டுமே தமிழகத்தில் இருக்கின்றது.

இந்தச் சொற்ப அளவிலான தண்ணீரை மட்டுமே நாம் குடிக்கவும், குளிக்கவும், விவசாயம் செய்யவும், இன்ன பிற அன்றாட தேவைகளுக்கும் பயன்படுத்த வேண்டி இருக்கின்றது. அத்தகைய சொற்ப அளவு தண்ணீரை கூட முறையாகச் சேமித்து பயன்படுத்த நமது முன்னோர்கள் பல குளங்களையும், ஏரிகளையும், யானைகளையும் காட்டினார். ஊருக்கு ஒரு கோவில் கட்டியவர்கள் ஊருக்குப் பல குளங்களை வெட்டினர். ஏனெனில் வறட்சி பகுதியான தமிழகத்தில் தண்ணீர் மிக மிகத் தேவையான ஒரு பொருள் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அதனால் தான் கரிகால சோழன் காலந்தொட்டே தமிழகத்தின் பல குளங்கள், ஏரிகள் கடத்தப்பட்டு வந்தன. அவற்றைப் பராமரிக்கவும், அழிய விடாமல் பாதுகாக்கவும் ஒரு சிஸ்ட்டத்தையும் உருவாக்கி வைத்திருந்தார்கள்.

இவ்வாறு ஏரிகள், குளங்கள், நீர்த்தடங்கள் என அனைத்தையும் பாதுகாத்த போதே நம் முன்னோர்கள் பல சமயம் வறட்சியையும் பஞ்சத்தையும் எதிர்கொள்ள நேரிட்டது. ஆனால், அந்த வறட்சியிலிருந்து, பஞ்சத்திலிருந்தும் உடனடியாக மீளவும் வேளாண்மையை  கட்டியெழுப்பி உணவு தேவைகளை நிகர் செய்து கொள்ளவும் இந்த நீர்நிலைகள் தான் பேருதவி செய்திருக்கின்றன. அதனால் தான் நாம் நமது தமிழ் பண்பாடு பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் உயிர்ப்புடன் இருக்கின்றது.

இல்லை என்றால் காலவெள்ளத்தில் அழிந்து போன எண்ணற்ற சமூகங்கள் போலத் தடமில்லாமல் நம் தமிழ் சமூகமும் அழிந்து போயிருக்கும். ஆனால் நம்மை காத்துக் கொண்டிருந்த நமது பாரம்பரிய வாழ்க்கை முறையிலிருந்து நாம் விலகிச் சென்று விட்டோம். நமது பாரம்பரிய அறிவு மெல்ல மெல்ல அழிந்து வருகின்றது. கூடவே நமது இயற்கை வளங்களும் அழிந்து வருகின்றன.

தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம் என அழைக்கப்பட்ட தஞ்சை தரணியில் முப்போகம் விளைச்சல் கண்டு, யானைகளை வைத்து வைக்கோல் போர் அடித்த காலமும் உண்டு. காடாகக் கிடந்த தஞ்சைத் தரணியை காடழித்து வயலாக்கிய கரிகால மன்னன், காவிரியாற்றைத் தடுத்து நிறுத்து அணைக் கட்டி, வாய்க்கால் வெட்டி விவசாயத்தை வளர்த்தெடுத்தான். அவனது வழி வந்த பல மன்னர்கள் இதனை தென்னகம் முழுவதும் விரிவுபடுத்திப் பல ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், கண்மாய்கள், தங்கல்கள், குட்டைகள் அமைத்து விவசாய செய்முறைகளை விரிவாக்கி இந்தத் தமிழ் மண் மட்டுமின்றி தென்னகம் முழுவதுமே பசியையும் பட்டினியையும் விரட்டினான். பசியும், பட்டினியும் விரட்டப்பட்டதால் தமிழ் மண்ணில் வணிகமும், வியாபாரமும் வளர்ந்தது. கடல் கடந்து நம்மவர்கள் வணிகத்தில் ஈடுபட்டனர். அது மட்டுமின்றி தமிழ் கலைகளும், இலக்கியங்களும் வளர்ந்தது அதனால் நம் தமிழ் மொழியும் வளர்ந்தது. அதனூடாக பக்தியும் பண்பாடும் வளர்ந்தது.

ஆனால், இன்றோ நிலைமை தலைகீழ் நம் முன்னோர் வெட்டிய ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் காணாமல் போய்விட்டன. அவர்கள் முறையே பெயரிட்ட அழகிய தமிழ் பெயருடைய ஊர்கள் எல்லாம் நகர்களாகிவிட்டன. அவர்கள் வளர்த்தெடுத்த கலைகளும், இலக்கியங்களும் சீண்டப்படாமல் போய்விட்டன. அவர்கள் வளர்த்தெடுத்த தமிழன்னை பொழிவிழந்து வெறும் அரசியலுக்காக மேடைகளில் மட்டும் ஆடும் கூத்தடியாகிவிட்டாள். நமது வணிகமும், வியாபாரமும் தில்லி தர்பாருக்கு அடகு வைக்கப்பட்டு விட்டது.

தமிழகத்தின் நீர் வளம் பொதுவாக ஆற்று நீரையும், மழை நீரையும் நம்பியே இருக்கின்றது. அதிலும் தென்னிந்திய ஆறுகள் வட இந்திய ஆறுகள் போல வற்றாமால் படக் கூடியவை கிடையாது. அதாவது வட கிழக்கு மற்றும் தென் மேற்கு பருவ மழை கொண்டு வரும் நீரே நமது ஆறுகளில் பாய்கின்றன. நமது நீர் வளத்திற்கு மூலம் வெறும் மழை மட்டுமே. அதிலும் நமது ஆறுகள் யாவும் நமது அண்டை மாநிலங்களிலிருந்து உற்பத்தியாகின்றன. அவர்களது தேவைக்கு நீர் எடுக்கப்பட்டு மிச்சமுள்ளவற்றையே பங்கிட்டுக் கொள்ளும் சூழலும் நமக்கிருக்கின்றது.

***

கடந்த சில பத்தாண்டுகளாக உலக வங்கிகள் மூலம் கடனை வாங்கி நமது விவசாயிகளுக்கு நமது நாட்டரசு அளித்து வருகின்றது. இந்த கடன் தொகை மூலம் புதிய எந்திரங்களை, உரங்களையும் வாங்குமாறு பன்னாட்டு நிறுவனங்களும், நமது அரசுகளும் விவசாயிகளுக்கு தவறான பாதையை காட்டின. இந்த புதிய எந்திரங்கள் மூலமும், உரங்கள் மூலமும் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என நமது நாட்டு விவசாயிகள் தொடர்ந்து நம்ப வைக்கப்பட்டு வந்தனர். ஆனால், இதன் மூலம் நீண்டகால பயன் அடைந்தவர்கள் என்னவோ கடன் கொடுத்த உலக வங்கியும், தேவையற்ற எந்திரங்களையும், உரங்களையும், விதைகளையும் விவசாயிகளின் தலையில் கட்டி கொள்ளை லாபம் பார்த்த பன்னாட்டு நிறுவனங்களும் அவர்களின் உள்நாட்டு பங்காளிகளுமே ஆவார்கள்.

அது மட்டுமின்றி தடையற்ற மின்சாரமும் ஆழ்குழாய் அமைக்கும் தொழில்நுட்பத்தையும் தொடர்ந்து வழங்கியதன் மூலம் கோடிக்கணக்கான ஆண்டுகள் புவியன்னை நிலத்தடியில் சேர்த்து வைத்த நிலத்தடி நீர் என்னும் அறிய வளம் முற்றாக சுரண்டப்பட்டு விட்டது. கூடவே 1990- களிலிருந்து வளர்ச்சி வளர்ச்சி என்ற கோஷமிட்டு நம் நாட்டில் கட்டடங்களும் தொழிற்சாலைகளும் கட்டப்பட்டு வருகின்றன. இந்த அபார வளர்ச்சிக்கு தேவையான மணல், நீர் ஆகியவையும் தொடர்ந்து நமது நீர்நிலைகளான ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்றவைகளிலிருந்து தொடர்ந்து சுரண்டப்பட்டதால் ஆண்டாண்டு காலம் நம்மை காப்பாற்றிய நீர் வளம் முற்றிலும் அழிந்து விட்டன.

முன்னோர்களின் நீர் மேலாண்மை பற்றி இப்போது பலரும் பேசாத தொடக்கி இருக்கின்றார்கள். ஒவ்வொரு நீர்நிலைகளையும் பகுத்து ஆராய்ந்து அதற்கு தக்க பெயரிட்டு, அவற்றை உருவாக்கவும், உருவாக்கியவைகளை காப்பாற்றவும் மிக திறமையான ஒரு வழிமுறைகளை கொண்டிருந்தனர்.

ஆனால் அவற்றை எல்லாம் உதறி தள்ளி விட்டு நவீன அறிவியலின் பின்னால் நாம் ஓடினோம். அதன் விளைவு தான் இன்று நீரின்றி அவதிப்படும் அவல நிலை. குடிக்க, குளிக்க மட்டுமில்லை கழுவக் கூட சொட்டு நீரில்லை. கூடவே விவசாயமும் அழிந்து வருகின்றது. நாளை ஐபாடு இருக்கும், ஐபேசி இருக்கும், கணணி இருக்கும், தொலைக்காட்சி இருக்கும், ஆதார அட்டை இருக்கும், ஆனால் தின்ன சோறு இருக்குமா ? என்பது தான் என் கேள்வி.

இன்று தண்ணீருக்கு சிங்கியடிக்கின்ற நாம் வெகு விரைவில் சோற்றுக்கும் சிங்கியடிக்கும் காலம் வரத் தான் போகின்றது. அன்று முன்பொரு காலத்தில் நம் விவசாயிகள் கோவணத்தோடு தில்லி தர்பாரிய பேர்வழிகளை கெஞ்சிக் கூத்தாடிய கதைகள் இலக்கியங்கள் ஆக்கப்பட்டுப் பாடப்படலாம். அவர்கள் எலிக்கறி தின்றதும், மண்டை ஓடுகளோடு உலாவித் திரிந்ததும், மானமிழந்து நாண்டுக்கிட்டு மறைந்ததும், அவ்வளவு ஏன் அம்மணமாகத் தெருக்களில் உருண்டதும் நினைவுக் கூறப்படலாம். அன்று நமது மண்ணும், மொழியும், நீரும் நிலமும், வாழ்வும் வளமும் அருங்காட்சியங்களில் கூட வைக்கப்பட்டிருக்குமா என்பது தெரியவில்லை.

நம் சகோதர மாநிலமான கேரளத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியின் தீவிரத்தை உணர்ந்து அங்கு ஒரு காலத்தில் இருந்த அனைத்து நீர்நிலைகளையும் மீட்கும் நடவடிக்கையில் அரசும் மக்களும் இறங்கியுள்ளனர். ஏனெனில் கால நிலை மாற்றம், மக்கள் தொகை பெருக்கம், தொழிற்சாலைகள்  உமிழும் மாசு, நவீன வாழ்க்கை நமக்கு அளித்திருக்கும் கேடுகளால் இனி வருங்காலங்களில் நீருக்கான தேவை மே ன்மேலும் பன்மடங்கு அதிகரிக்கப் போகின்றது. ஆனால், தமிழ்நாட்டில் களவாடப்பட்ட நமது நீர்நிலைகளையும், நீர்த்தடங்களையும் மீட்க போராடாமல் மக்கள் மௌனம் காக்கின்றனர்.

– தமிழ் வண்ணன்

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *